"நான் இறக்கும்போது மருத்துவமனையின் வேலைநாளாக இருந்தாலும், விடுமுறை விட்டுவிடாமல், நம்பி வந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கவேண்டும், வேண்டுமானால் சட்டையில் ஒரு கருப்புப் பட்டையை குத்திக் கொள்ளுங்கள் அது போதும்" என்று அறிவித்தவர், சங்கர நேத்ராலயாவின் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத். அதை ஆணையாக ஏற்று, சமீபத்தில் அப்படியே செயல்பட்டனர் அந்நிறுவன ஊழியர்கள்.
பலரது வாழ்வில் இருள் நீக்கி ஒளி ஏற்றிய பத்ரிநாத், (83) நவம்பர் 21 அன்று காலமானார். பிப்ரவரி 24, 1940ல், சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் என்னும் எஸ்.எஸ். பத்ரிநாத், மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலை பள்ளியிலும் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியில் கற்றார். இளவயதிலேயே பெற்றோரை இழந்தார். தனது தந்தைக்குக் கிடைத்த காப்பீட்டுத் தொகையை வைத்துச் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்டஸ் மருத்துவமனையில் உயர்நிலை மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தார்.
இந்தியா வந்த டாக்டர் பத்ரிநாத், தனியார் மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை நிபுணராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். 1974-ம் ஆண்டு காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்குக் கண் சிகிச்சை வழங்கினார். அந்தச் சந்திப்பு அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. தனது வாழ்க்கையை ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தார். செப்டம்பர் 6, 1978-ல், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆலோசனையின்படி லாப நோக்கற்ற அமைப்பாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையைத் தொடங்கினார்.
சென்னையில் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் சங்கர நேத்ராலயாவின் கிளை மருத்துவமனைகளை ஏற்படுத்தினார். மக்களின் பார்வை இழப்பைத் தடுக்க ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று கண் சிகிச்சை முகாம்களை நடத்தினார். பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை முகாம்களை நடத்தினார். கண்தானம் செய்வதை வலியுறுத்திப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தினார்.
அயராத உழைப்பால் ISO தரச்சான்றிதழ் பெற்ற ஆசியாவின் முதல் கண் மருத்துவமனையாக, சங்கர நேத்ராலயாவை உயர்த்தினார். டாக்டர் பி.சி.ராய் விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை டாக்டர் பத்ரிநாத் பெற்றுள்ளார். 79 வயதுவரை கண் சிகிச்சை வழங்கிவந்த இவர், முதுமை காரணமாக ஓய்வில் இருந்தார். தனது பெயரோ, பேட்டியோ, படமோ ஊடகங்களில் வெளிவருவதற்கு அதிக விருப்பம் காட்டாமல் இருந்தார். (இவர் தென்றலுக்கு வழங்கிய அரிய பேட்டியை வாசிக்க)
வாழ்நாளின் இறுதிவரை ஏழை எளிய மக்களின் நல்வாழ்வு குறித்துச் சிந்தித்து வந்த பத்ரிநாத் வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி எய்தினார்.
கண்ணொளி தந்த அண்ணலுக்குத் தென்றலின் அஞ்சலி! |