துபாயில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடந்துவரும் பருவநிலை மாற்றம் குறித்த 28வது உச்சி மாநாட்டில் 150 நாடுகளின் பிரதமர்கள்/அதிபர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் அதன் முக்கியவத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். 20 நாடுகளிலிருந்து அமைச்சர்கள், வணிகத்துறைத் தலைவர்கள், இளையோர், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பூர்வகுடிகள், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் என்று ஏராளமாகப் பங்கேற்கின்றனர். இதில் தென்புவி நாடுகள் (Global South) எனப்படும் வளர்ந்துவரும் நாடுகளின் குரலாக பாரதம் கருதப்படுகிறது. ஏற்கனவே இயற்கை வளங்களை நன்கு பயன்படுத்தி உயர்வளர்ச்சி அடைந்துவிட்ட மேற்கத்திய நாடுகள், வளரும் நாடுகள்மீது கரிம மாசு குறித்து மிகையான வரம்புகளை விதிப்பது நியாயமல்ல என்பதைப் பாரதம் உரத்துப் பேசி வருகிறது. பெருவளர்ச்சி கண்டுவரும் நாடு என்ற முறையிலும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நாடுகளுடனும் நட்புறவோடு கூடிய செல்வாக்கைக் கொண்ட நாடு என்ற முறையிலும் பாரதத்தின் சுற்றுச்சூழல் குறித்த கருத்துகளும் பங்களிப்பும் உயர்வாக மதிக்கப்படுகிறது. வறிய நாடுகளுக்கும் வளமிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பாலமாக இந்தியா செயல்படுவது குறிப்பிடத் தக்கது.
★★★★★
"ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படும், புது தில்லி விமான நிலையத்தை மூடுவோம்" என்று மிரட்டியவர் குர்பட்வந்த்சிங் பன்னூன். காலிஸ்தான் என்பதாக ஒரு தனிநாட்டைக் கேட்டு இந்திய அரசுக்கெதிராகப் பிரிவினை வாத, வன்முறைவாத கருத்துகளைப் பேசியும், இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தியும் வரும் காலிஸ்தானி இயக்கத்தின் முக்கியத் தலைவர் இவர். அமெரிக்க மற்றும் கனேடியக் குடியுரிமைகளைப் பெற்றவர், ஆனால் இந்திய அரசினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவரைக் கொல்ல இந்திய அரசு ஆயுதக் கடத்தல் பேர்வழி ஒருவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி, அதுகுறித்த முதல் தகவல் அறிக்கையையும் (FIR) பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க இந்திய அரசு உயர்மட்டக் குழு ஒன்றை நியமித்துள்ளது.
★★★★★
இது இப்படியிருக்க, நியூஸீலாந்து நீதி மன்றம், கொலை செய்ய முயன்றதாக மூன்று காலிஸ்தானி ஆதரவாளர்களைச் சிறைக்கு அனுப்பியுள்ளது. ஹர்நேக் சிங் என்ற ஒலிபரப்பாளரை அவர்கள் அவரது வீட்டு வாசலில் வைத்து 2020 டிசம்பரில் கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் அவருக்கு 40 காயங்கள் ஏற்பட்டன, ஆயினும் அவர் உயிர்பிழைத்துவிட்டார். ஹர்நேக் சிங் காலிஸ்தானி பிரிவினை வாதத்தை எதிர்த்தவர் என்பதால் இந்த பயங்கரத் தாக்குதல்.
★★★★★
வாசகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
தென்றல் டிசம்பர் 2023 |