கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் மக்களை வியக்க வைத்த, அவர்களிடையே வந்து தோன்றிய அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்திய அற்புதமான சாகசங்களில், காளிங்கன் கதை மிகவும் பொருள் பொதிந்தது. காளிங்கன் என்ற நாகம் தனது விஷமூச்சால் யமுனையின் நீரையும் அதன்மேல் இருந்த காற்று மண்டலத்தையும் நஞ்சாக்கிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதிக்கு வந்த மனிதர், மாடுகள் என அனைவரும் இறந்து போனார்கள். ஆனால், தெய்வீகச் சிறுவனான கிருஷ்ணன் நீரில் குதித்து, ஆழத்தில் சென்று, துர்நாற்றம் வீசும் பாம்பை ஆற்றின் மட்டத்திலிருந்து மேலே எழும்பச் செய்தான். அதன் தலை உச்சியில் துள்ளிக் குதித்து ஏறி, தன் மென்மையான தாமரைக் கால்களால் அவற்றின்மீது நடனமாடினான். அந்த மென்மையான பட்டுக் கால்களின் அழுத்தம் அசுர நாகத்தின் பற்களிலிருந்து விஷத்தை வெளியேற்றி, அந்தப் பாம்பைத் தீங்கற்றதாக மாற்றப் போதுமானதாக இருந்தது.
இது மனிதனுக்கு ஒரு பெரிய பாடம். குழந்தையின் அதிமானுட வலிமை மற்றும் ஞானத்தை நிரூபித்த முந்தைய சம்பவங்களைப் போலல்லாமல் இந்தச் சம்பவம் அமைந்தது. அவர் புயல் அரக்கனால் (திரிநாவர்த்தன்) தூக்கிச் செல்லப்பட்டார்; அவர் கன்றரக்கனால் (வத்ஸாசுரன்) தாக்கப்பட்டார்; அவர் சக்கர அரக்கனால் (சகடாசுரன்) வெட்டப்பட்டார்; நாரை அரக்கனால் (பகாசுரன்) குத்தப்பட்டார்; மேலும் அவர் பாலூட்டும் அரக்கியால் (பூதனா) விஷம் கொடுக்கப்பட்டார். இந்த அற்புதங்களைத் தற்செயல் அல்லது மிகைப்படுத்தல் எனச் சந்தேகப் பிராணிகள் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், காளிங்கன் கதை ஓர் உருவகம், இது ஆன்மீக சாதனையில் ஒரு விலை மதிப்புள்ள பாடமாகும்.
நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2023
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |