அருண் கையில் தபால் உறையை வைத்துக்கொண்டு சந்தோஷத்தில் குதித்தான். அவனது அனுபவத்தில் அந்த மர்ம மனிதரிடமிருந்து வந்த கடிதங்கள் எல்லாமே அவனுக்குச் சரியான நேரத்தில் உதவியிருக்கின்றன. அந்த ஆதிவாசிகள் மூலிகையாய் இருக்கட்டும், ஆப்பிளின் கதையாக இருக்கட்டும், எல்லாவற்றிலும் அருணுக்கு வேறு வழியே தெரியாமல் விழித்தபோது அவரிடம் இருந்து வந்த கடிதம்தான் பெரிய உதவி செய்திருக்கிறது. இந்த முறையும் அவனுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்தை எவரோ தெரிந்துகொண்டு அவனுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள்.
"அம்மா... அப்பா, பார்த்தீங்களா? எனக்கு லெட்டர் வந்திருக்கு. நான் சொன்னேன் இல்லை, என்ன்னோட யூகம் தப்பா இருக்காதுன்னு" கூவினான் அருண்.
கீதா என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கினார். ரமேஷ் அங்கே நின்றுகொண்டு இருந்ததால் வந்த தயக்கம். அருணிடம் இருந்த கடிதத்தைச் சற்று தாமதமாகப் படிக்கச் சொல்லலாமா என்றுகூட கீதா யோசித்தார். எங்கே தன் கணவர் தான் அருணோடு சேர்ந்துகொண்டு வம்பை விலைக்கு வாங்குவதாகச் சத்தம் போடுவாரோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது.
தயக்கத்தோடு ரமேஷ் என்ன செய்கிறார் என்று நோட்டம் விட்டார் கீதா. அவரோ ஓரத்தில் கைகட்டி நின்றுகொண்டு கீதா என்ன பண்ணப் போகிறார் என்று இருந்தார். அப்பா, அம்மா இருவரையும் கொஞ்சம்கூடச் சட்டை செய்யாமல் அருண் சட்டென்று கடித்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.
"அருண், நிறுத்து. Stop this nonsense!" இடியொலி போல ரமேஷிடமிருந்து குரல் வந்தது. அதில் அந்த நிசப்தமான காலை வேளையில் வீடு அதிர்ந்தது. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பக்கரூ பயத்தில் கத்தியது. அது ஓடிப்போய் அருணின் அறைக்குள் ஒளிந்துகொண்டது. கீதாவும் கதிகலங்கிப் போனார். ஆனால், அருணோ கொஞ்சம்கூட அதிராமல் மும்முரமாக அந்தக் கடிதத்தைப் படிப்பதிலேயே இருந்தான்.
"அருண், நான் சொல்றது கேக்கலே?"
ரமேஷ் முடிக்குமுன், அருண் பதில் அளித்தான். "அப்பா, நான் என்னை மாத்திக்க மாட்டேன். ஏதாவது தப்புன்னு எனக்கு மனசுல பட்டுச்சுன்னா அதைச் சரிபடுத்துற வரைக்கும் நான் வேடிக்கை பாத்துட்டு இருக்க மாட்டேன். நீங்க என்ன கத்து கத்தினாலும் சரி, இதனால எனக்கு எந்த வம்பு வந்தாலும் சரி, நான் இப்படித்தான் இருப்பேன்."
"உன்னை…" ரமேஷ் கோபத்துடன் ஓர் அடி முன்னே எடுத்து வைத்தார். அருணின் பதில் கேட்க கீதாவுக்கும் தர்மசங்கடமாக இருந்தது. ரமேஷ் கோபத்தில் ஏதாவது அடித்துவிடப் போகிறாரே என்று பயந்தார்.
கோபத்துடன் அடி எடுத்து வைத்த ரமேஷ் அப்படியே நின்றார். பெருமூச்சு விட்டார். ஒன்றுமே சொல்லாமல் மெதுவாக மாடிப்படி பக்கமாகப் போய் ஏற ஆரம்பித்தார். பாதிப் படிகள் கடந்தபின், அருணையும் கீதாவையும் பார்த்துப் பேசினார். "ஏதாவது பிரச்சனை வந்திச்சுன்னா என்னை உதவிக்கு கூப்பிடாதீங்க. நீங்க இரண்டு கூட்டுக் களவாணிகளும் சமாளிச்சுக்கோங்க. என்ன இழுக்காதீங்க எதுக்கும்."
அருண் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். அதை ரமேஷ் கவனித்தாரோ இல்லையோ, கீதா கவனித்தார். அவருக்கும் கோபம் வந்தது. மூச்சை ஆழமாக இழுத்து ஒன்று முதல் பத்துவரை எண்ணிக்கொண்டு தனது ஜென் யுக்தியைக் கையாண்டார். வீட்டுவேலையைக் கவனிக்கச் சமையல் அறைப்பக்கம் போவதா, இல்லை அந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று கேட்டுவிட்டுப் போகலாமா என்று இரண்டுங் கெட்டான் மனதாய் அவர் நின்று இருந்தார்.
ஒருபக்கம் பள்ளிக்குப் போக நேரம் ஆகிறதே என்ற கவலை. மறுபுறம் தன் மகன் மீண்டும் ஒரு சாதனை படைக்கப் போகிறான் என்ற பெருமை. மெதுவாக மாடிப்பக்கம் பார்த்தார். ரமேஷ் தென்படவில்லை. அருண் கடிதத்தைப் படிக்கட்டும் என்று நின்றார்.
அருண் சத்தம் போட்டு கடித்தத்தை படிக்க ஆரம்பித்தான்.
★★★★★
பிரியமுள்ள அருணுக்கு, நான்தான் மீண்டும் கடிதம் எழுதுகிறேன். நானும் நீயும், இரு உடம்பு ஒரு சிந்தனை ஆகிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதே ஐயம்தான் உன் மனதிலும் உதிக்கிறதுபோல இருக்கிறது.
நீ, எர்த்தாம்ப்டன் நகரின் வெளியே இருக்கும் பாலைவனப் பகுதியில் வரப்போகும் குடியிருப்புத் திட்டம் பற்றி ஆராய்ச்சி செய்கிறாய் என்று தெரியவந்தது. சொல்லப் போனால், இந்தத் திட்டம் எர்த்தாம்ப்டனுக்கு மிகவும் நல்ல திட்டம்தான். அதனால்தான் ஊர் மேயர் முதல், ஊர் செயற்குழு வரை யாரும் அதற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை.
நீ எவ்வளவு முயன்றிருந்தாலும் நல்ல விஷயங்கள்தாம் தெரிய வந்திருக்கும். நானும் இந்தத் திட்டத்தை முதலில் ஆதரித்தேன். ஒரே பாலைவனமாக இருக்கும் பகுதியில் பொருளாதார ரீதியாக நல்லது நடந்தால் ஊருக்கே நல்லதுதானே?
உனது பள்ளி ஆசிரியை பல பொது அரங்குகளில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தபின் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் வந்தது. அவர் கேள்விகள் மூலமாக அதற்குப் பின்னால் உன் ஆர்வம்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன். அது சரியாகிவிட்டது. உன் பள்ளி ஆசிரியைக்கும் எல்லாமே நல்ல விஷயங்களாகத்தான் தகவல் கிடைத்திருக்கும்.
நான் பல இடங்களில் விசாரித்தேன். அதன் மூலம் சில நம்பவே முடியாத உண்மைகள் தெரியவந்தன.
ஆரம்பத்தில், இந்தப் பாலைவன development திட்டம் நல்ல வீடுகளைக் கட்டி அவற்றில் குடும்பங்களை குடி வைப்பதுதான். ஆனால், விண்ணப்பத்தில் இருப்பதுபோல் அங்கே முழுவதும் வீடுகளாகக் கட்டப் போவதில்லை. நடுநடுவே பாலைவன மரங்களின் தோட்டங்களை கொண்டு வரப் போகிறார்கள். வீடுகளுக்கு நடுவில் ஒரு சோலைபோல இருந்தால் அது நல்லதுதான் என்று பலரும் எண்ணுமாறு செய்யப் போகிறார்கள். இதன் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது.
என்னன்னு சொல்லட்டுமா? இங்கதான் எர்த்தாம்ப்டனோட களவாணிப் பயலுக பண்ணுற சூழ்ச்சி தெரியும். ஒரு பெரிய பாலைமரத் தோட்டம், பல ஏக்கர் அளவுல பண்ணி அதுல இருந்து பாமாயில் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாங்க. இப்ப உலகம் இருக்கிற நிலைமைல பாமாயில் மாதிரி நிறைய லாபம் கொடுக்கிற பொருள் சிலதுதான் இருக்கு. நம்ம உபயோகிக்கிற பலவிதப் பொருட்கள்ல இன்னிக்குப் பாமாயில் இல்லாததே இல்லை. அவ்வளவு லாபம் தரக்கூடியது.
எடுத்த உடனேயே எண்ணைப்பனை தோட்டம் அப்படீன்னா, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எல்லாம் கொடி தூக்கிடுவாங்க. பெரிய பிரச்சனை ஆய்டும். ஆரம்பத்திலேயே ஆயிரம் கேள்வி கேட்பாங்க. அதனால, ஒரு சின்னத் திட்டம். ஏன் வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டிக் குடுக்கக்கூடாது? அந்த மாதிரி மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கிறது எல்லோருக்கும் பெருமைதானே! இப்படி ஒரு கதை கட்டி அனுமதி வாங்கிட்டாங்க.
இதெல்லாம் fine prints அப்டீன்னு சொல்வாங்களே, அதுல கமுக்கமா எழுதி இருக்காங்க. குடும்பங்களக் குடி வைச்சப்புறம் அப்புறமா ஒன்னுமே பண்ண முடியாதே? அந்த குடும்பங்களும் ஏழை குடும்பங்களா இருக்கும். அவங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க சக்தி கிடையாதே.
ஒரு பக்கம் நல்லதுன்னு பாக்கப் போனா, மறுபக்கம் அந்த எண்ணைப் பனை தோட்டங்களால வரப்போகிற அழிவை நம்மால தடுக்கவே முடியாது. இப்ப உலகத்துல பல இடங்கள்ல இந்த தொந்தரவுதான். எர்த்தாம்ப்டன் நகரத்து ஏழை மக்கள் இதில் மாட்டிக்கொண்டு அடிமைகள் போல் வாழத் தொடங்கலாம். லாபத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கும் கிங்கரன்களுக்கு இது ஒரு மிட்டாய் மாதிரி.
இந்தத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். நீ எர்த்தாம்ப்டன் நகர ஜட்ஜ் அய்யா அவர்களிடம் போய் இந்தத் திட்டத்தின் அனுமதி குறித்துத் தீர விசாரிக்கச் சொல். வெறும் வீடுகள் மட்டும் கட்டட்டும். இந்த எண்ணைப் பனைத் தோட்டத் திட்ட சூழ்ச்சியை முறியடிப்போம்.
வேகமாகச் செயல்படு. இன்னும் சில நாட்களுக்குள் ஆட்சேபணை ஏதும் எழுப்பாவிட்டால் இந்த திட்டம் அந்த பயலுக நினைச்சது போல நடந்துடும்.
வெற்றி உன் பக்கம் இருக்கட்டும். எர்த்தாம்டன் நகருக்கு உன்னால் பல நன்மைகள் கிடைக்கட்டும்.
என்றும் மதிப்புடன்
★★★★★
அருண் படித்து முடித்து கீதாவை சந்தோஷமாகப் பார்த்தான். அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
"அம்மா, I am an unstoppable force, அம்மா. என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது." அருண் உணர்ச்சி வசப்பட்டு ஓடிவந்து கீதாவைக் கட்டிக்கொண்டான்.
கீதா அருணின் தலையை வருடினார். "அருண் கண்ணா, இன்னிக்கு மத்தியானம் நீ ஸ்கூல்லேருந்து வந்தப்புறம் நான் ஜட்ஜ் அய்யா வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன்."
(தொடரும்)
ராஜேஷ் |