அபூர்வ நடனம்
ஆகஸ்ட் 26, 2023. இனிய மாலை நேரம்.பட்டுப் புடவை சரசரக்கச் சிரிப்பும் சந்தோஷமும் துலங்கப் பெண்மணிகள் அரங்கத்தை நிரப்ப, நடனம் ஆரம்பித்தது. தொகுப்பாளர் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார். அனைவர் முகத்திலும் ஆச்சரியம். பதினைந்து வயதுச் சிறுமி வந்து நின்றால் ஆச்சரியம் வராதா என்ன? கூடவே மற்றொரு பெண்ணும் வந்து சேர்ந்து கொண்டார். இன்னும் ஆச்சரியம். இந்தப் பெண் இன்னும் இளையவர்! பேச ஆரம்பித்தனர். மூர்த்தி சிறியதாக இருக்கலாம் . ஆனால் ஞானத்தில் குறைந்தவரல்ல என்று நிரூபித்தனர் அச்சிறுமியர். நகைச்சுவை கலந்த விளக்கங்களை அழகாகத் தொகுத்தளித்தனர். பிறைச்சந்திரன் வடிவ அரங்கம். எங்கே அமர்ந்தாலும் முன்னே இருப்பவர் தலை நம் பார்வையை மறைக்கா வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

வந்தார் அபூர்வா கோமண்டூர். சிற்பம் போல் செதுக்கிய உடல். மீன் போன்ற கண்கள். முதல் பார்வையிலேயே கவர்ந்துவிட்டார் அபூர்வா. சுத்த சாவேரியில் நடனத்தை ஆரம்பித்தார் .பூமி தொட்டுப் பாதம் ஜதிபோட எழிலாக ஆடினார். பி.என். ரமேஷின் புல்லாங்குழல் குழைந்து இசைக்கச் சுழன்று ஆடினார் அபூர்வா. தொடர்ந்த ஜதீஸ்வரம் வாசஸ்பதியில் கம்பீரமாக ஆரம்பித்தது. அழகான சாஹித்யம். பாடிய சாலினி நாயர் உணர்ந்து பாடினார். அடுத்து வந்த சப்தம் ராகமாலிகாவில் இருந்தது. அழகான ராகங்கள், இனிய குரல், தென்றலாகத் தோளைத் தொடும் புல்லாங்குழல், துடிப்பான நடனம். கண்களுக்கு விருந்து என்றால் மிகையல்ல.கால்களின் ஜதிக்கு ஈடாகக் கண்கள் ஓட ஆனந்த நடனமாடினார் அபூர்வா. சபையோர் கண் சிமிட்டாமல் ரசித்தனர்.



இடையில் குரு சுப்ரமனியம் அவர்கள் மேடையேறி அபூர்வாவின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினார். அவரின் குரு ஐஸ்வர்யா ஶ்ரீவத்சன், தனஞ்சயன் பாரம்பரியத்தில் வந்தவர். அந்த ஒளி அபூர்வாவின் நடனத்திலும் பிரதிபலிக்கும் என வாழ்த்தினார். அடுத்தது வர்ணம் தோடியில். ஆடுவதற்காகவே அமைந்த பாடல். வயலின் பாலகாடு ஜயப்பிரகாஷ் அருமையாக வாசித்தார். வர்ணம் நடன நாயகியை ஒரு வழியாக்கும் வலிமை உள்ளது. அபூர்வா ஈடு கொடுத்து ஆடினார். கால்கள் தகதிமி என ஜதிபோட, கைகள் குழைந்து வளைந்தாட, கண்களும் கழுத்தும் அசைந்தாட மலைக்க வைத்தார் அபூர்வா.

அடுத்து வந்த ஹம்சானந்தி, அபிநயமும் உணர்ச்சிகளும் நிரம்பியது. அவர் சேருவரோ எனத் தவிக்கும் தாபம் தாண்டவமாடிய நடனம். உணர்ச்சிகளின் பிம்பமாய் உருகி தவித்தார் நாயகி. சபையோரின் கரவொலி குறைய நெடு நேரமாயிற்று. தில்லானாவும், திருப்பாவையும் விறுவிறுப்பாக அமைந்தன. பூமாலை சூடிவந்த கோதையைக் கண்டதும் அரங்கமே அழகாகிவிட்டது.

தன் பாட்டியின் ஆசைக்காக நான்கு வயதில் ஆரம்பித்த பயிற்சியைப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்ததின் பலனை அன்று காண முடிந்தது. மகளின் ஆசையை நனவாக்க இத்தனை ஆண்டுகள் உழைத்த திருமதி மற்றும் திரு சீனிவாசன் பெருமை கொண்ட நாள் அது.கல்லூரி மாணவி அபூர்வாவின் அபூர்வ நடனம் மேலும் பரிணமித்துப் பரிமளிக்கட்டும் என எல்லோரும் வாழ்த்த, நிறைவு செய்தார் அபூர்வா.

அலமேலு மணி,
ஒட்டாவா, கனடா

© TamilOnline.com