சுனாமி என்றால்...
ஜப்பானிய வார்த்தையான சுனாமி தமிழில் 'துறைமுக அலை' என்று பொருள்படும். சாதாரணக் கடல் அலைகளுக்கும் சுனாமி அலைகளுக்கும் வித்தியாசமுண்டு. காற்றின் காரணமாக சாதாரண அலைகள் ஏற்படுகின்றன.

அலை நீளம் என்றால் இரண்டு அலைகளுக்கு இடையேயான தூரம் ஆகும். சுனாமியின் அலை நீளம் அதிகமாக இருப்பதால் அவை கரையை நோக்கி நகரும் போது மிகக் குறைந்த அளவு சக்தியையே இழக்கின்றன. எனவே அவை மிக வேகமாக நகரும். அதன் வேகம் நீர் நிலையின் ஆழத்தைப் பொறுத்திருக்கும். உதாரணமாக 6கி.மீ ஆழமான கடலில் சுனாமி அலை மணிக்கு 890கி.மீ வேகத்தில் நகரும். இது ஜெட் விமான வேகத்திற்குச் சமமானது.

கரையோரங்களில் கடலின் ஆழம் குறைவு என்பதால் கரையை நெருங்க நெருங்க வேகம் குறையும் (மணிக்கு 50-60 கிலோ மீட்டர் அளவில்). அதேவேளை சுனாமியால் தோற்றுவிக்கப்பட்ட சக்தி (இது அலையின் வேகம் அலை உயரம் என்பவற்றைப் பொறுத்தது) ஏறத்தாழ நிலையாக இருக்கும். எனவே அவ்வலை கரையில் மோதும் போது அலையின் உயரம் மிகவும் அதிகரிக்கிறது.

அப்போது சுனாமி அலை கடல் மட்டத்தை விட 30-35 மீட்டர் (சுமார் 100 அடி) அளவிலும் உயரலாம். 1946ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு அருகில் யுனிமார்க் தீவுக்கருகில் நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி அலை 35 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது. தீவிலுள்ள கலங்கரை விளக்கத்தைத் தாக்கியதுடன் உயிர்களைப் பலி கொண்டது. இவ்வாறு வேகமாக உயரும் கடல்நீர் நிலப்பகுதிக்குள் புகுவதால் பேரழிவு ஏற்படுகிறது.

குடா, துறைமுகம், முகத்துவாரங்கள் ஆகியவற்றை நெருங்கும் போது சுனாமியின் வேகம் குறைகிறது. உதாரணமாக 15 மீட்டர் ஆழத்தில் அதன் வேகம் மணிக்கு 45 கி.மீட்டராகவே இருக்கும். அதே நேரம் 100 கி.மீ அல்லது அதற்கு அப்பால் கடலின் அடியில் மற்றொரு சுனாமி அலை மிக வேகமாக வந்து கொண்டிருக்கும். அதையடுத்து மற்றொரு அலை வரும். பெருங்கடலில் வெகுவேகமாக நெருங்கும் பொழுது தீடீரென அடுத்தடுத்து வந்து தாக்குகின்றன.

பூமியின் மேற்பரப்பு வெளியே எப்படி தோற்றமளித்தாலும் அதன் அடித்தளம் தனித்தனி தட்டுகளினால் (Plate) ஆனவை. ஆய்வாளர்கள் 12-20 வித்தியாசமான தட்டுகளை இனம் கண்டுள்ளனர். மேற் பரப்பில் ஒரே நிலத்தொடராக இருக்கும் ஒரு கண்டம் அடிப்புறத்தில் வெவ்வேறு தட்டுகளால் பொருத்தப்பட்டிருக்கலாம். பூமியின் உட்புறத்திலுள்ள அடர்த்தியான எரி குழம்பு கொதிப்பதால் சற்று ஆறி உறைந்த மேல் நிலைப் பகுதிகள் அமிழ, சூடான குழம்பு மேலே வருகிறது. இந்தக் குழம்பின் மேல் மிதந்து கொண்டிருக்கும் பூமித் தட்டுகள் இந்தக் கொதிப்பால மெல்ல மெல்ல அசைகின்றன. இப்படி அசையும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு சிக்கிக் கொள்ளும். முட்டும் அழுத்தம் ஒரு வரம்பைக் கடக்கும்போது சிக்கிக் கொண்டிருந்த தட்டு திடீரென்று சிக்கலிலிருந்து வழுக்கி வேகமாக நகர்கிறது. அப்போது ஒரு தட்டுப் பகுதி பல அடிகள் மேலே உயரலாம், பக்கவாட்டில் நகரலாம். இதுதான் நிலநடுக்கத்திற்குக் காரணம். இரண்டு தட்டுகள் முட்டிக் கொண்டிருக்கும் இடத்தின் அருகில்தான் நிலநடுக்கம் மையம் கொண்டிருக்கும். இந்த தட்டு இணைப்புகள் நிலப்பரப்பிலோ ஆழ்கடலுக்கு அடியிலோ இருக்கலாம்.

ஆழ்கடலுக்கு அடியில் இருக்கும் இணைப்பு களில் அதிர்ச்சி ஏற்படும்போது கடலடி மட்டதில் உயர்வு தாழ்வு ஏற்படுவதால் சுனாமி எனும் பேரலைகள் தோன்றுகின்றன. டிசம்பர் 26, 2004ல் நில நடுக்கம் ஏற்பட்ட சுமத்ரா, அந்தமான் தீவுகள் இந்தியா, ஆஸ்திரேலிய தட்டு மற்றும் ஆசியத் தட்டின் எல்லையில் உள்ளது. எனவே இப்பகுதியும் நிலநடுக்க அபாயப் பகுதியாக கருதப்படுகிறது.

சுமத்ரா, அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கருகில் கடந்த டிசம்பர் 26 ல் முதலில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவுடைய நில நடுக்கமே பெரிய அழிவை ஏற்படுத்திய சுனாமியை உருவாக்கியது. அப்பகுதியில் அடுத்து 3 நாட்களுக்குள் மேலும் சுமார் 40 சிறிய அதிர்வுகள் ஏற்பட்டன. ஆனால் அவற்றினால் பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை. செங்குத்தான பெரிய கடலடி இடப்பெயர்வே சுனாமியை தோற்றுவிக்கும். ஆனால் நில நடுக்கத்தின் போது ஏற் பட்டுள்ள கடலடி இடப்பெயர்வு எத்த கையது என்பதை உடனடியாக அறிந்து கொள்வது எளிதல்ல.

கடல் அலை சுனாமி

அலைஇரண்டு அலைகளுக்கு|5-20 விநாடி|10 நிமிடம்
நடுவே ஆகும் நேரம்|முதல் 2 மணி
அலை நீளம்|100-200 மீ|500 கி.மீ

******


இவர்கள் மூலமும் உதவலாம்:

அமிர்தானந்தமயி மையங்கள் - M.A.Center,
10200, Crow Canyon Road,
Castro Valley, CA 95552 or M.A.Center, PO Box 613,
San Ramon CA 94583.

உதவும் கரங்கள் -
http://www.udavumkarangal-sfba.org

மதுசூதனன்

© TamilOnline.com