ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
★★★★★
கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாங்களே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதற்கு உங்கள் பரிந்துரை என்ன? கதிரவனின் பதில்: ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:
* சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள் * நிறுவனர் குழுவைச் சேர்த்தல் * உங்கள் யோசனையைச் சோதித்து சீர்படுத்தல் * முதல்நிலை நிதி திரட்டல் * முதல்நிலை திசை மாற்றல் (initial pivoting) * முதல் சில வாடிக்கையாளர்கள் * விதைநிலை நிதி திரட்டல் * வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை * சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை மாற்றல் * முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல் * குழுவுக்குள் கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிதல் * வெற்றிக் கோட்டைத் தாண்டுவதில் தடங்கல்கள்
ஆலோசனை சேவையளிக்கும் (consultancy or contract services) நிறுவனங்களைத் தவிர வேறு எவ்விதமான ஆரம்பநிலை நிறுவனமானாலும் நிதி திரட்டவேண்டியது பெரும்பாலும் அத்தியாவசியம். பெரும்பாலும் உடனேயே பெரும் மூலதன நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்ட இயலாது. ஏனெனில் தற்போதெல்லாம் அவர்கள் அபாயக் குறைப்பு முனைப்பில் இருக்கிறார்கள். அதாவது, கணிசமான வருவாய் தொடர்ந்து கிடைக்கக்கூடிய நிறுவனங்களுக்கு அதிக மதிப்பீட்டில் அதிக அளவு மூலதனம் அளிக்கவே முன்வருகிறார்கள்.
அப்படியென்றால், அந்த மாதிரி தொடர் வருவாய் கிடைக்கும் அளவுக்கு விற்பொருளை உருவாக்கி, வளர்வதற்குத் தேவையான நிதியை எப்படித்தான் திரட்டுவது? நிறுவனம் சற்று வளர்ந்து, விதை நிலை நிதி திரட்டுவது பற்றி இக்கட்டுரைத் தொடரில் பிறகு காண்போம். இப்போது, முதல் முதலாகச் சிறிதளவு நிதி திரட்டுவது எப்படி என்று விளக்குவோம்.
நிறுவனம் ஆரம்பித்த உடனேயே நிதி திரட்ட வேண்டும் என்பது அத்தியாவசியமல்ல. பெரும்பாலும், நிறுவனர் ஒருவரோ அல்லது சிறிய நிறுவனர் குழுவோ சம்பளம் எதுவும் வாங்காமல் சில மாதங்கள் உழைப்பார்கள். அதற்குத் தேவையான கணினிகளுக்கோ, மேகக்கணினி சேவைக்கோ தேவையான மிகச் சிறிதளவு செலவைத் தாங்களே செய்து கொள்வார்கள். அவர்களுக்கு நிறுவனர் பங்குகள் அதிக அளவில் இருப்பதால் அந்நிலையில் நிதி திரட்டாமல் சில காலம் உழைப்பது சரியானதுதான். இதை வியர்வைப் பங்கு என்று கூறுவார்கள்.
அந்த வியர்வைப் பங்கு நிலையைக் கடந்து விற்பொருளை உருவாக்கப் பொறியியலாளர்களை அமர்த்திக் கொள்ளும் நிலை வரும்போது நிதி திரட்டித்தான் ஆகவேண்டும். சில நிறுவனர்கள் முன்பே வேறு நிறுவனங்களில் பெருமளவு சம்பாதித்திருந்தால் அவர்களே அந்த நிதியை நிறுவனத்துக்கு மூலதனமாக இடுவார்கள். ஆனால் பெரும்பாலான நிறுவனர்கள் அத்தகைய அதிர்ஷ்ட நிலையில் இருப்பதில்லை. அவர்கள் வெளியாரிடமிருந்து எப்படியாவது மூலதனம் திரட்டியாக வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள்.
அதில் முதல் வழிமுறை, குடும்பத்தாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் (friends and family) சிறிதளவு நிதி திரட்டுவது. இது எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது என்பதால் மேற்கொண்டு விவரிக்காமல் அடுத்த முறைகளுக்குச் செல்வோம்.
அடுத்த வழிமுறை, தேவதை மூலதனத்தாரிடமிருந்து (angel investors) திரட்டுவது. அது என்ன தேவதை மூலதனம் என்கிறீர்களா? விளக்குகிறேன். ஆரம்பநிலை நிறுவனங்களுக்கும் வளர்ச்சிநிலை நிறுவனங்களுக்கும் மூலதனமளிக்கும் நிறுவனங்கள், அதையே தொழில்முறையாகச் செய்பவர்கள். தாங்கள் நிதியளித்த மூலதனத்தார் லாபம் ஈட்டும்போது அதில் பங்கு பெறுவதுதான் அவர்களுக்கு முதல் முனைப்பு. அதிலேதான் அவர்கள் குறியாக இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு நிறுவனத்தை ஆரம்பித்தவர்களை அரவணைத்து வளர்ப்பது இரண்டாம் பட்சம்தான். மூலதனம் இடுவது மட்டுமன்றி, நிறுவனருக்குத் துணையாகவும் இருந்து வழிநடத்தும் தனியாரை தேவதை மூலதனத்தார் என்று அழைத்தனர்.
பொதுவாக, தேவதை மூலதனத்தார், நிறுவனத் தொழிலைப் பற்றிச் சற்றேனும் உணர்ந்த தனியார்களாக இருப்பது நல்லது. வெறும் நிதி மட்டும் அளிக்கும் தேவதைகளிடமிருந்தும் தேவையானால் ஓரளவு நிதி திரட்டலாம். ஆனால் தங்கள் நிதிக்காகத் தாங்களே பாடுபட்டு உதவக் கூடிய, உங்கள் நிறுவனத் துறையில் திறனுள்ள தேவதைகளைத் தேடி அவர்களிடமிருந்து நிதி பெறுவது இன்னும் சிறப்பானது. ஆனால் அது அவ்வளவு எளிதன்று. யோசனை சீர்படுத்தலுக்காக நிபுணர்களைச் சந்திப்பது எவ்வளவு கடினம் என்று ஏற்கனவே கண்டோம். பல்லாயிரக் கணக்கில் மூலதனமிடக் கூடிய தேவதைகளைச் சந்தித்து அவர்களுக்கு உங்கள்மேல் நம்பிக்கை வரவைத்து மூலதனம் பெறுவது அதைவிடக் கடினம்!
ஆனால் அதைச் சற்றே எளிதாக்கச் சில தேவதைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தேவதைகள் சேர்ந்து குழு அமைத்து மாதம் ஒருமுறை நிறுவனங்கள் நிதி கேட்கும் நிகழ்வை நடத்துவார்கள். அவர்களில் யாராவது ஒருவர், உங்கள் நிறுவனத்த்துக்காகப் பரிந்துரைத்தால் நீங்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு நிறுவனத்தைப் பற்றி விவரித்து நிதி கேட்கலாம். ஒவ்வொரு நிகழ்விலும் நிதி கேட்ட நிறுவனங்களில் சில அதிர்ஷடமுள்ளவை, குழுவில் சிலரேனும் ஆர்வம் காட்டினால் மேற்கொண்டு பரிசீலித்து தேவையான அளவுக்கு நம்பிக்கை வளர்ந்தால் பலர் சேர்ந்து நிதியளிப்பார்கள். ஆனால் பரிந்துரைக்கும் உறுப்பினரை எப்படிக் கண்டறிவது? அதுவும் எளிதல்ல. ஆனால் நிபுணர்களுக்கு வலை விரிப்பது என்று முன்பு கூறினோம் அல்லவா? அதேபோல் எந்த தேவதைக் குழுவில் யார் இருக்கிறார் என்பதை மின்வலையில் அலசி ஆராய்ந்து அவர்களில் ஒருவரை எப்படியாவது சந்தித்துப் பரிந்துரைக்குச் சம்மதிக்க வைக்கவேண்டும்.
அதை இன்னும் சிறிது எளிதாக்குவதற்குச் சில இணைய சேவைகள் உள்ளன. ஏஞ்சல் லிஸ்ட் எனப்படும் சேவை ஓர் உதாரணம். அதில் தேவதை உறுப்பினர்கள் பலர் உள்ளனர். நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றி அந்த தளத்தில் விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் உங்கள் துறையில் ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்கு செய்தியனுப்பப் படும். அவர்களில் சிலர் ஆர்வம் காட்டினால் மேற்கொண்டு நிதி திரட்டும் வழிமுறை அமலாக்கப்படும்.
இவ்வாறு நிறுவனத்துக்கு முதல்நிதி திரட்டுவத்ற்குப் பல விதங்களில் முயன்று, பல இன்னல்களைக் கடந்த பின்னர் ஓரளவு முதல்நிதி கிட்டும்!
அடுத்து, முதல்நிலை திசை திருப்பலைக் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |