திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண் தலத்தில் இந்தத் திருக்கோவில் உள்ளது. மூலவர், ஆதிநாராயணப் பெருமாள். தாயார், ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் வன்னிமரம். ஆகமம் வைகானசம்.
திருக்கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பது வழக்கம். அவர் எதிரில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்களில் பெருமாள் கருடன்மீது எழுந்தருளுவார். இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு விரைந்து அருள்வதற்காக கருடன்மீது வந்ததால், மூல ஸ்தானத்திலும் கருட வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். கருடனும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். இது காணற்கரிய காட்சி. சோழர்கள் கட்டிய கோவில் இது.
ஒருகாலத்தில் வன்னி மரக்காடாக இவ்விடம் இருந்தது. பிருகு முனிவர் ஸ்ரீமன் நாராயணரைக் குறித்துத் தவமிருக்கையில், சோழ அரசன் சிங்க வேட்டை ஆடப் படைகளுடன் வந்தான். அதனால் தவம் கலைந்த முனிவர் அவனைச் சிங்க முகத்தோடு அலையுமாறு சாபமிட்டார். அரசன் முனிவரிடம் சாபவிமோசனம் அருளுமாறு வேண்ட, வெட்டாற்றில் நீராடி எண்கண்ணில் வழிபடக் கூறினார். அவ்வண்ணமே அவன் வழிபட, கருட வாகனத்தில் எம்பெருமான் நாராயணனும், மயில்வாகனத்தில் முருகப் பெருமானும் தோன்றி அவனது சாபத்தை நீக்கினர்.
ஆலயத்தின் பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன், கருடன் சன்னிதிகள் உள்ளன. மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாகதோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேர நினைப்பவர்கள், அடிக்கடி மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் உள்ளவர்கள் பௌர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்குத் திருமஞ்சனம், அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கிறது. ஆதிநாராயணப் பெருமாளுக்கு தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல், அதிரசம், பால் பாயாசம் போன்ற இனிப்பு வகைகள் நிவேதனம் செய்யப்படுகின்றன. மிருகண்டு மகரிஷி இத்தலப் பெருமாளை தினமும் அரூபமாக வழிபடுவதாக ஐதீகம்.
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. - பெருமாள் திருமொழி (குலசேகராழ்வார்)
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |