சாயி தரிசனம் பகவான் சாயிநாதர், நரசிம்ம சுவாமியை ஆட்கொண்டார். சாயிநாதரைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவரது சீடரானார் நரசிம்மசுவாமி. சாயிநாதரின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் ஆகியவை பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டார். மராத்தி மொழி அறிந்தவர் என்பதால் அவருக்கு உரையாடுவதில் தடை ஏதும் இருக்கவில்லை. குருநாதர் வாழ்ந்த அந்தப் புனிதத் தலமான ஷீரடியிலேயே தங்கி எஞ்சிய வாழ்நாளைக் கழித்துவிட எண்ணினார். அதே சமயம், பல ஆன்மீக குருநாதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கும் தான், பாபாவின் வரலாற்றையும் விரிவாக எழுதி ஆவணப்படுத்த உறுதி கொண்டார். மானசீகமாகப் பிரார்த்தித்து அதற்கு பகவான் சாயிநாதரின் உத்தரவையும் பெற்றார்.
பூஜை முறையில் மாறுதல்கள் அதே சமயம் ஷீரடி ஆலயத்தில் நடந்த வழிபாட்டு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர நரசிம்ம சுவாமி விரும்பினார்.சாயி சமஸ்தானத்தினரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். பூஜா முறைகள் பண்டைக் காலத்தில் இருந்தது போன்ற வழிபாட்டு முறையாக மாற்றப்பட்டது. குறிப்பாக, ஆரத்தி வழிபாட்டில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார் சுவாமிஜி. 'சாயி அஷ்டோத்திரம்' என்ற துதியை நரசிம்மசுவாமியே இயற்றி, அதனை வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கொண்டு வந்தார்.
சாயிநாதர் பற்றிய நூல் முயற்சிகள் முன்பு பகவான் ரமணர், நரசிம்ம சுவாமியிடம் சொன்ன சொற்கள் அவருக்கு நினைவுக்கு வந்தன. அதன்படி சாயிநாருடைய புகழை இந்தியா முழுவதிலும் பரப்ப வேண்டும்; அதற்கு முன்னால், அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதவேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டது. சாயிநாதருடன் தொடர்பில் இருந்த பல கிராம மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்குச் சென்று அவர்களுடன் உரையாடினார். பல்வேறு தகவல்களைத் திரட்டினார். துவாரகாமாயியை தினமும் பெருக்கி, துடைத்து, சுத்தம் செய்து, செடிகளைப் பராமரித்து வந்த அப்துல்லா பாபா, பாபாவின் பெருமையை உபன்யாசமாகச் செய்து வந்த தாஸ்கணு மகராஜ், சாயியின் பக்தர் எம்.கே. ரெகே போன்றோரிடமிருந்தும் தகவல் திரட்டினார். தாஸ்கணு மகராஜ் ஏற்கனவே 'சாயி லீலாம்ருதம்' என்ற நூலை மராத்தியில் எழுதியிருந்தார். அது நரசிம்ம சுவாமிக்குப் பேருதவியாக இருந்தது. மேலும் சில சாயி பக்தர்கள் எழுதியிருந்த'ஸ்ரீ சாயி சரிதா', 'ஆன்மீக ஒளியின் சிதறல்கள்' போன்ற நூல்கள் பாபாவின் லீலைகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள உதவின.
ராமராகவும், கிருஷ்ணராகவும் வந்தவர் எவரோ அவரே சாயிநாதராக அவதரித்திருக்கிறார் என்ற உண்மையை நரசிம்ம சுவாமி அறிந்துகொண்டார். அதனை அடிப்படையாகக் கொண்டும், மக்களிடமிருந்து திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்தும், முதலில் 'பக்தர்களின் அனுபவங்கள்' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூல்களை எழுதினார். பாபா பற்றிய அப்புத்தகம் பின்னர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது. தான் செல்லும் இடங்களில் எல்லாம் சாயிநாதரின் புகழைப் பரப்பினார். பல்வேறு மேடைகளில் சாயிநாதரைப் பற்றிப் பேசி அவரது பிரசாரகராக விளங்கினார்.
பாபாவிற்குப் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் பெருகினர். பல இல்லங்களில், சிறு மண்டபங்களில், பாபாவின் பக்தர்கள் ஒன்றுகூடி அவரை வணங்கினர். ஆரத்தி, பூஜைகள் நடந்தன. பாபா கூறிய அருளுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. 1938ல் 'சண்டே டைம்ஸ்' இதழில் சாயிநாதரின் வாழ்க்கையைத் தொடராக எழுதினார் நரசிம்ம சுவாமி. அதற்கு மிக்க நல்ல வரவேற்புக் கிடைத்தது. நாடெங்கிலும் பாபாவிற்கு பக்தர்கள் பெருகினர், ஷீரடிக்கு வந்து வணங்கத் தொடங்கினர்.
நரசிம்ம சுவாமி எழுதிய நூல்கள்
அகில இந்திய சாயி சமாஜம் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் பயணித்து பகவான் சாயிநாதரின் புகழைப் பரப்பிய நரசிம்ம சுவாமி, 1939-ல், தமிழ்நாட்டுக்கு வந்தார். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாயிநாதரின் புகழைப் பரப்பினார். 1941ல் சாயி பாபா பற்றிய பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் 'அகில இந்திய சாயி சமாஜம்' என்ற அமைப்பை நரசிம்ம சுவாமி தோற்றுவித்தார். வழக்குரைஞரான வரதராவ் அதன் செயலாளராகவும் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். சாயிநாதரின் உருவப் படங்களையும், அருளுரைகளையும், அஷ்டோத்திர நூலையும் சிறு பிரசுரங்களாக வெளியிட்டார். நாடெங்கிலும் பயணம் செய்து உப-சமாஜங்கள் பலவற்றை நிறுவினார். அவை அனைத்தும் சென்னை சாயி சமாஜத்தின் கிளைகளாகச் செயல்பட்டன.
சாயி சுதா மாத இதழ் சாயி பாபா பற்றிப் பலரும் அறிந்துகொள்வதற்காக 'சாயி சுதா' என்ற மாத இதழைத் தொடங்கினார் நரசிம்ம சுவாமி. அதில் சாயிநாதர் பற்றிய பல கட்டுரைகள், நிகழ்த்திய அற்புதங்கள், பக்தர்களின் அனுபவங்கள், சாயி சமாஜப் பணிகள் எனப் பல செய்திக் கட்டுரைகள் வெளியாகின.
நாக சாயி ஆலயம் 1943ல், ஜனவரி 7 அன்று கோவையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஒரு மைதானத்தில் நடந்த சாயி பஜனையில், மக்கள் கொண்டுவந்து அளித்த பூக்களின் இடையே சாயிநாதரின் உருவப் படத்திற்கு முன்பாக சங்கும் சக்கரமும் உள்ள தலையைக் கொண்ட ஒரு நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியது. சுமார் 24 மணிநேரம் அங்கு இருந்த பின், தானாக அங்கிருந்து சென்றுவிட்டது. அந்த அதிசயக் காட்சியைக் கண்ட மக்கள், சாயிநாதரே பாம்பு உருவில் வந்தார் என மகிழ்ந்தனர். பின்னர் அந்த மைதானம் வாங்கப்பட்டு அந்த இடத்தில் சாயி பாபாவுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. அதுவே கோவையின் புகழ்பெற்ற நாக சாயி ஆலயம்.
சாயிநாதர் துதி நூல்கள் சாயிநாதரின் புகழைப் பரப்பும் வகையில் நரசிம்ம சுவாமி, ஷீரடி சாயிபாபா அஷ்டோத்திரம், சகஸ்ரநாம ஸ்தோத்திரம், சஹஸ்ர நாமாவளி, பூஜா விதானம் போன்ற நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் மட்டுமல்லாமல் அவை தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகின.
அகில இந்திய சாயி சமாஜ பஜனை மண்டலி 1944ல் சென்னையில் அகில இந்திய சாயி சமாஜ பஜனை மண்டலி ஏற்படுத்தப்பட்டது. சாயிநாதரின் உருவப் படத்துடன் பக்தர்களின் இல்லந்தோறும் சென்று பஜனை நடத்தப்பட்டது. சாயி பிரச்சாரத்தின் விளைவாக இந்தியா முழுதிலும் பல இடங்களில் சாயிபாபா கோவில்களும், பஜனை மடங்களும், சாயி நிலையங்களும் தோன்றின. பாபாவைப் பற்றிய சிறு சிறு பிரசுரங்களும், உதி, டாலர், லாக்கெட் போன்றவை பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
மயிலை கோவில் சன்னிதி மற்றும் மயிலை ஷீரடி சாயி பாபா
மயிலாப்பூர் சாயி பாபா ஆலயம் சென்னையின் பல்வேறு இடங்களில், வாடகைக் கட்டடங்களில் சாயி சமாஜம் இயங்கி வந்தது. சொந்த இடம் அமைய வேண்டும் என்பதும், அங்கு பாபாவுக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்பதும் நரசிம்ம சுவாமியின் விருப்பமாக இருந்தது. பாபாவிடம் அதற்காகப் பிரார்த்தித்து வந்தார். பாபாவின் உத்தரவும் அதற்குக் கிடைத்தது.
ஆலய கும்பாபிஷேகம் பக்தர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. அதைக் கொண்டு மயிலாப்பூரில் ஒரிடத்தை விலைக்கு வாங்கி, பாபாவுக்கென்று ஓர் ஆலயம் கட்ட ஆரம்பித்தார். அக்டோபர் 19, 1953 அன்று காலை 11.00 மணிக்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. அன்று விடியற்காலை நரசிம்ம சுவாமி முன் தோன்றிய ஷீரடி பாபா, "உன்னால் கும்பாபிஷேகம் செய்ய இயலாது. நீ உடனே கலச பூஜை செய்" என்று ஆணையிட்டார். அதன்படி காலை 7.30 மணிக்கு நரசிம்ம சுவாமி கலசங்களுக்கு பூஜை செய்தார். 8.30 மணிக்கு, கும்பாபிஷேகத்திற்கான ஐந்து கலசங்களின் ஊர்வலம் புறப்பட்டது. 12 மணிக்குக் கும்பாபிஷேகம் நிறைவேறியது.
ஆனால், அதில் நரசிம்ம சுவாமி கலந்துகொள்ள இயலவில்லை. காரணம், காலை 8.30க்கு குளியலறை சென்ற அவர் அங்கே வழுக்கி விழுந்து விட்டார். சிகிச்சைக்காக அவர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் அவரால், தான் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக அவரது சீடர் ராதாகிருஷ்ண சுவாமிஜி கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
ஆனால், இதனை சூட்சுமமாக பாபா ஏற்கனவே நரசிம்ம சுவாமிக்கு உணர்த்தி விட்டதால் நரசிம்ம சுவாமி வருந்தவில்லை. 'எல்லாம் பாபாவின் அருள்' என்பதாகவே அவரது எண்ணங்கள் இருந்தன. தொடை எலும்பு முறிந்து சுமார் எட்டு வாரங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நாளடைவில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. மயிலை சாயி பாபா கோயில் மேலும் விரிவடைந்து சென்னை நகரின் முக்கியமானதொரு அடையாளமானது.
ஷீரடி சாயியும் ஆர்தர் ஆஸ்பர்னும் ரமண பகவானின் வெளிநாட்டு பக்தர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஆர்தர் ஆஸ்பர்ன். பகவான் ரமணரைப் பற்றிப் பல நூல்கள் எழுதியவர். பகவானின் அன்புக்குப் பாத்திரமானவர். ஆச்ரமம் சார்பாக முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட 'மௌண்டன் பாத்' ஆங்கில இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர்.
பகவான் ரமணர் மகாசமாதி அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமயம் கனவொன்று கண்டார் ஆஸ்பர்ன். அக்கனவில் தோன்றிய பகவான் ரமணர் ஆஸ்பர்னிடம், "நீ ஷீரடி பாபா ஆலயத்துக்குச் சென்று பாபாவைத் தரிசித்து, பாபாவின் வாழ்க்கை வரலாற்றை எழுது" என்று பணித்தார். அதற்கு ஆஸ்பர்ன், "எனக்கு என்ன எழுதுவதென்று தெரியாதே, பகவான்!" என்றார். ரமணர் மீண்டும், "பாபாவைப் பற்றி மேற்குலகத்தினரும் அறிய வேண்டும். ஆகவே அவர் வரலாற்றை நீ எழுது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதற்கு பாபாவே உனக்கு வழிகாட்டுவார்" என்றார்.
அதுமுதல் ஆர்தர் ஆஸ்பனுக்கு ஷீரடி செல்லும் ஆர்வம் உண்டானது. ஒருநாள் புறப்பட்டு ஷீரடிக்குச் சென்றார். பாபாவை தரிசனம் செய்தார். பாபா அங்கே உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தார். பாபாவின் அருளைப் பெற்றுச் சென்னைக்குத் திரும்பினார். நண்பர்கள் மூலம் பி.வி. நரசிம்ம சுவாமி பற்றி அறிந்தார். சுவாமிகளைச் சென்று சந்தித்தார். பகவான் ரமண மகரிஷிகளின் அருளாணைப்படி பாபாவின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் விருப்பத்தைத் தெரிவித்தார்.
தம் இறுதிக்காலத்தில் இருந்த சுவாமிகள், சாயி சமாஜ வெளியீடுகள் அனைத்தையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படிச் சொல்லி அவற்றை ஆஸ்பர்னிடம் கையளித்தார். அவற்றை அடிப்படையாக வைத்து 'The Incredible Sai Baba' என்ற நூலை எழுதினார் ஆஸ்பர்ன்.
அந்த நூல் பிரபல ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகத்தால் 1958ல் வெளியானது. அந்நூலுக்கு ஆனந்த ஆஸ்ரமத்தின் தலைவர் பப்பா ராம்தாஸ் சிறப்பான முன்னுரையை எழுதியிருந்தார். ஷீரடி பாபாவின் சன்னிதியில் தனக்கேற்பட்ட ஆன்மீக அனுபவத்தையும், பாபா அச்சமாதியில் உயிர்ப்புடன் இருப்பதையும், அங்கே நிலவும் ஆன்மீக அதிர்வலைகளைப் பற்றியும் சுவாமி ராம்தாஸ் அதில் பதிவு செய்திருந்தார். பிரபல குருவான சுவாமி ராம்தாஸ் அவர்கள் உளமார எழுதியிருந்த அந்த முன்னுரை நூலுக்கு மேலும் வலுச் சேர்த்தது. வெளிநாட்டவர் பலரும் அந்த நூல் மூலம் ஷீரடி சாயிபாபா பற்றி, அவரது மகிமை பற்றி அறிந்துகொண்டனர்.
ஏற்கனவே பகவான் ரமணர் குறித்த நூலை எழுதி நல்ல அறிமுகம் ஆகியிருந்த ஆஸ்பர்ன், இந்த நூலின் மூலம் மேற்குலகில் மேலும் பிரபலமானார்.
baba book by arthur osbern ஆர்தர் ஆஸ்பர்ன் எழுதிய நூல்
நரசிம்ம சுவாமியின் சாயி சமாஜப் பணிகள் நரசிம்ம சுவாமியின் சாயி பிரச்சாரப் பணிகளால் இந்தியா முழுவதிலும் ஷீரடி பாபாவைப் பற்றிப் பலரும் அறிந்து கொண்டனர். ஷீரடி மட்டுமே அறிந்திருந்த சாயிபாபாவின் பெருமை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பரவியது. இந்தியா எங்கிலும் 40க்கும் மேற்பட்ட சாயி சமாஜக் கிளைகள் உருவாகின. நாடெங்கிலும் பலரும் சாயிநாதருக்குக் கோவில்களை எழுப்பினர். சுவாமிகளின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் தலைமைச் சீடராக ராதாகிருஷ்ண சுவாமிஜி விளங்கினார்.
சுவாமிகளின் மறைவு தமது வாழ்நாளை சாயி சேவைக்கே அர்ப்பணித்த நரசிம்ம சுவாமியின் உடல்நலம முதுமை காரணமாகத் தளர்ந்தது. 1956-ம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியன்று நரசிம்ம சுவாமியின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள். அவரது உடல்நலக் குறைவால் அது சாதாரணமாகவே கொண்டாடப்பட்டது. உடல் நிலை மோசமானது. படுத்த படுக்கையானார். ஆனால், அவர் சாயி சேவையை விட்டுவிடவில்லை. படுக்கையில் இருந்தபடியே 'சாயி சுதா' இதழ்ப் பணிகளைச் செய்தார். கடிதங்களுக்குப் பதில் எழுதினார். காண வந்தவர்களுடன் உரையாடி ஆசிர்வதித்தார்.
அக்டோபர் 19, 1956, விடியற்காலை 3.45 மணிக்கு நரசிம்ம சுவாமி சாயிநாதருடன் ஐக்கியமானார். பெங்களூருவில் இருந்த சீடர் ராதாகிருஷ்ண சுவாமிஜிக்கு சூட்சுமமாகத் தன் மறைவை உணர்த்திய நரசிம்ம சுவாமி, தனது சக்திகள் அனைத்தையும் அவரிடம் அளித்துவிட்டு இறையுடன் ஒன்றினார்.
மயிலாப்பூர் கோவிலில் நரசிம்ம சுவாமி
சமாதி நரசிம்ம சுவாமி மறைந்த செய்தி பரவியது. 'ராய்ட்டர்' செய்தி நிறுவனம் அச்செய்தியை உலகம் முழுவதும் பரப்பியது. சாயி சமாஜங்களிலும், உபசமாஜங்களிலும் விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. மறுநாள் சாயி பாபா ஆலயத்தின் பின்புறம் இருந்த, நரசிம்ம சுவாமி வாழ்ந்த சிறுகுடிலில் அவரது உடல் சமாதி செய்விக்கப்பட்டது. நரசிம்ம சுவாமிக்கு, சாயிநாதரை அடையாளம் காட்டிய, 'அவரே உன் குரு' என்று வழிகாட்டிய பகவான் ரமணரது உருவப்படம் ஒன்றும் அங்கு வைக்கப்பட்டது.
இன்றும் அங்கிருந்தபடி சாயி சமாஜத்தை நிர்வகித்துக் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சூட்சும ரீதியாகப் பல்வேறு விதங்களில் நரசிம்ம சுவாமி உதவி வருகிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஓம் சாயிராம்; ஜெய் சாயிராம்.
பா.சு. ரமணன் |