ஜனனி சிவகுமார்
செப்டம்பர் 14, 2023 சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இளைஞர் நிகழ்வில் பேச செல்வி. ஜனனி சிவகுமாரை ஐ.நா. நிறுவனம் அழைத்திருந்தது. அங்கு ஜனனி மக்கள் மற்றும் பூமியின் மீது சிறுதானியங்களின் தாக்கம் என்பது குறித்துப் பேசினார்.

ஐ.நா. நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals-SDGs) வளர்ப்பதற்கான பணிகளைப் பற்றி, குறிப்பாக SDG 3 (சுகாதாரம், நலவாழ்வு) மற்றும் SDG 13 (காலநிலை மாற்றம்) ஆகியவற்றில் 'சிறுதானியங்களின் பங்கு': நிலைத்த எதிர்காலத்திற்கான தீர்வு என்ற தலைப்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023ஐக் கொண்டாடுவதன் மூலம் மக்களையும் பூமியையும் பாதிக்கும் தனது பணிகளைப் பற்றி பேச உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாணவர்களில் ஜனனியும் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜனனி சிவகுமார் (சேப்பல் ஹில்லில் உள்ள வடகரோலினா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி மற்றும் Girls Play Global அமைப்பின் நிறுவனர்)



ஜனனி சிவகுமார் பேசியதன் சாரம்:
உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை பிரச்சினைகள் நமது உலகைத் தொடர்ந்து பாதித்து வருவதால், நமது விவசாயம் மற்றும் நுகர்வுப் பழக்கங்களை மறுபரிசீலனை செய்வது முக்கியம். அதிகமான மக்கள் தாவரம் சார்ந்த வாழ்க்கை மற்றும் உணவு முறைகளுக்கு மாறுவதால், நமது பாரம்பரிய விவசாய முறைகளுடன் மீண்டும் இணைவது முக்கியம்.

ஐ.நா அதிகாரப்பூர்வமாக 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது, இந்தியா இந்தப் பணியின் முக்கியச் சேம்பியனாக இருந்து வருகிறது. சிறுதானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வளர்க்கப்படும் தானிய வகைகள் ஆகும். இந்தப் பகுதிகளில் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுக்குச் சிறுதானியங்களை நம்பியுள்ளனர். இந்தப் பண்டைய உணவு, சூப்பர்ஃபுட் ஆக உலகெங்கிலும் மாறியுள்ளது.

சிறுதானியங்களைப் பயிரிட அரிசியை விடக் கணிசமாக குறைந்த நீரே தேவைப்படுகிறது. இவை வறட்சியைச் சமாளிக்கும் தன்மை கொண்டவை. அவை பச்சையம் இல்லாதவை, நிறையப் புரதச்சத்து கொண்டவை, மேலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் இவை நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கச் சிறந்த தேர்வாக அமைகின்றன.



காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற விளைவுகளை எதிர்கொள்ளப் புதிய வழிகளை நாம் தேடும் இந்தச் சமயத்தில், ஆரோக்கியமான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சிறுதானியம் போன்ற மாற்றுப் பயிர்களைக் கருத்தில் கொள்வது முக்கியம்.

இந்த நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு எங்கள் Girls Play Global அமைப்பின் கால்பந்துப் போட்டி சிறுதானியங்களுக்கான போட்டி (Match for Millets) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டி, நூறுக்கும் மேற்பட்ட சிறுதானிய தூதர்களை உருவாக்கியது. அவர்கள் உள்ளூர் சமூகங்களில் சிறுதானியங்களின் நன்மைகளை ஊக்குவிக்கும் பணியைத் தொடர்வார்கள்.

இளைஞர்களாகிய நாம், மாற்றத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சி மற்றும் சோதிக்கப்பட்ட முறைகளுக்கு அப்பால் செல்வதன் மூலம் நமது உணவு முறைகளை மிகவும் சமத்துவமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதில் முன்னிலை வகிக்க முடியும். சமூகங்களை ஒன்றிணைக்கவும், உணவு பாதுகாப்பின்மை போன்ற உலகளாவிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாகவும் நாங்கள் விளையாட்டை தீவிரமாகப் பயன்படுத்துகிறோம். எனவே அமைதிக்கான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் உலகளவில் இளம்பெண் முன்மாதிரிகளை உருவாக்குவதற்கும் இந்த பணியை தொடர்ந்து முன்னெடுப்பதில் எங்களுடன் இணைந்திருங்கள்.

ஜனனி சிவகுமார் முழு உரையின் வீடியோவைக் காண:


செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com