பகீரதன்
எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல களங்களில் இயங்கிப் பெயர் பெற்றவர் பகீரதன். இயற்பெயர் மகாலிங்கம். இவர் டிசம்பர் 18, 1919ல் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பிறந்தார். பள்ளிக் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்டார். பள்ளிக் கல்வியை முடித்தபின் காங்கிரஸ் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். வார்தாவில் காந்தியிடம் மூன்று மாதம் நேரடியாகப் பயிற்சி பெற்றார். எளிய வாழ்க்கை வாழ்ந்தார். தனது திருமணத்தின் போது கதர் ஆடைகளை மட்டுமே சீதனமாக ஏற்றார். மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள்.

ராஜாஜி, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், காமராஜர் போன்றோரது நட்பை பகீரதன் பெற்றிருந்தார். ராஜாஜி மூலம் கல்கியின் அறிமுகம் கிடைத்தது. மகாலிங்கத்தின் திறமை மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட கல்கி, கல்கி இதழுக்கு அவரை உதவி ஆசிரியராக நியமித்ததுடன், 'பகீரதன்' என்ற புனைபெயரையும் சூட்டினார். பகீரதன் கல்கியால் பட்டை தீட்டப்பட்டார். இதழியல் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். கல்கியின் அன்புக்குரியவர்களுள் ஒருவரானார். கல்கி இதழில் கதைகள், கட்டுரைகள், ஆன்மீகத் தகவல்கள், துணுக்குகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல பிரிவுகளில் பங்களித்தார். கல்கி இதழில் பகீரதன் எழுதிய வட இந்திய யாத்திரை, ஈழ நாட்டுப் பிரயாணம் போன்ற பயணக் கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து பல பயணக் கட்டுரைகளை எழுதினார். பகீரதனின் படைப்புகள் கல்கி, ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார் உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றன. சுமார் 18 ஆண்டுக் காலம் கல்கி இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் பகீரதன்.



அடிப்படையில் மிகுந்த ஆன்மீக ஆர்வம் கொண்டவர் பகீரதன். ராமலிங்க வள்ளலார் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவரை, வள்ளலாரைப் போற்றும் அருட்செல்வர் நா. மகாலிங்கம், 'ஓம்சக்தி' மாத இதழின் ஆசிரியராக நியமித்தார். நா. மகாலிங்கம் அமைத்த ராமலிங்கர் பணிமன்றத்தின் செயலாளராகவும் நியமித்தார். அதன் மூலம் பல ஆன்மீக, சமுதாய, கல்விப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். 14 ஆண்டுகள் ஓம்சக்தி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தொடர்ந்து 'Kisan World' என்ற ஆங்கில இதழின் இணையாசிரியராகச் சுமார் நான்காண்டு காலம் பணிபுரிந்தர். 'பகீரதன்' என்ற தனது பெயருக்குப் பொருத்தமாக, 1983-ல், 'கங்கை' என்னும் ஆன்மீக மாத இதழைத் தொடங்கினார். கங்கை சில ஆண்டுகளுக்குப் பின் 'சத்ய கங்கை' ஆனது. ஆன்மீகத் தகவல்கள், பெரியோர் வரலாறுகள், தத்துவக் கட்டுரைகள் எனப் பல்சுவை இதழாகச் சத்யகங்கை வெளிவந்தது. நெ.து. சுந்தரவடிவேலுவின் நினைவலைகள் வாழ்க்கை வரலாறு 'சத்யகங்கை' இதழில்தான் தொடராக வெளியானது. 'சக்தி வழிபாடு' என்ற தொடர் உட்படப் பல்வேறு தொடர்களை, கட்டுரைகளைச் சத்யகங்கை இதழில் எழுதினார் பகீரதன். சுமார் 33 ஆண்டுகள் மாதமிரு முறை இதழாகச் சத்ய கங்கை வெளிவந்தது.



இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த பகீரதன், தொல்காப்பியத்தை ஆராய்ந்து ஆய்வுநூல் ஒன்றை வெளியிட்டார். 'திருவருட்பா மூன்றாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி' என்ற தனது ஆய்வுநூலில் 'வடமொழி' என்றால் என்ன என்பதுபற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர், "வடமொழி என்பது வடதேசத்து மொழி அல்ல; அது தமிழர்களாகிய தென்னவர்களால் ஓசைக்குற்றம் இன்றி உருவாக்கப்பட்ட மொழி; அதற்குப் பெயர் வடமொழியன்று; 'வடல்மொழி'. 'வடல்மொழி' என்பது வடு அல் மொழி; அதாவது, 'குற்றமற்ற மொழி' என்று பொருள்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பகீரதன், 14 புதினங்கள், 4 சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ளார். பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறார் படைப்புகள் என்று நிறைய எழுதியுள்ளார். 'தேன்மொழியாள்', 'உழைப்பால் உயர்ந்த ஏழை', 'முல்லை வனத்து மோகினி' போன்றவை இவரது புதினங்களில் குறிப்பிடத் தகுந்தவை. 'கைதி சொன்ன கதை' என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. இவரது 'தேன்மொழியாள்' புதினம் நாடகமாகவும் மேடையேறியது. இந்தியா முழுவதும் இருநூறு முறைக்கு மேல் அரங்கேறிய அந்த நாடகத்தில், நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த ராமசாமி, அவர் நடித்த 'சோ' என்னும் பாத்திரத்தின் மூலம் 'சோ' ராமசாமி என்று அதன் பின்னர் அழைக்கப்பட்டு, அது 'சோ' ஆக சுருங்கிப் போனது.

பகீரதனின் படைப்புகள்
நாவல்கள்: தேன்மொழியாள், உழைப்பால் உயர்ந்த ஏழை, முல்லை வனத்து மோகினி மற்றும் பல.
சிறுகதைத் தொகுப்புகள்: கைதி சொன்ன கதை மற்றும் பல.
பயணக் கட்டுரை நூல்கள்: வட இந்திய யாத்திரை, ஈழ நாட்டுப் பிரயாணம், பாதாள நீரோடை.
வாழ்க்கை வரலாறு: கல்கி நினைவுகள், அழகப்பரின் அதிசய சாதனைகள், சர்தார் வேதரத்தினம் வாழ்க்கை வரலாறு.
ஆன்மீக நூல்கள்: சக்தி வழிபாடு, திருவருட்பா மூன்றாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி, ஜோதி வழியில் வள்ளலார்.


பகீரதன் மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ஆங்கில ஆன்மீக நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஞானபாரதி, முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்ச் செல்வர் உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றவர். தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவரைத் தேடி வந்தது. பாரதியார் சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.

காந்தீய நெறியில், கொள்கைகளில் வழுவாது, இறுதிவரை கதர் அணிந்து, எளிய வாழ்க்கை வாழ்ந்த பகீரதன் பிப்ரவரி 7, 2001 அன்று, 81-ம் வயதில் காலமானார். காந்தீய எழுத்தாளர் வரிசையில் என்றும் நினைவில் வைக்கத் தக்கவர் பகீரதன்.

அரவிந்த்

© TamilOnline.com