செப்டம்பர் 2023: வாசகர் கடிதம்
ஆகஸ்ட் மாத தென்றல் இதழில் சந்திரயான் 3 பற்றிய விவரங்களும், இந்தியா பெற்றுள்ள வல்லமைகளும், பாரதத்தின் வானியல் சாதனைகளும் படிக்கும்போது இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவரும் பெருமிதம் தரக்கூடிய விஷயங்களாகும்.

இதயக்கோவிலில் ஹரிஜனப் பிரவேசம், "சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுக்கு அற்புதமான நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளார் ரா. கனகலிங்கம்.

சனாதன சாரதியின் எண்ணமும் பார்வையும் பற்றிய சின்னக்கதையில் ஸ்ரீராமர் கொடுத்த விளக்கம் மிகமிக அற்புதம். மேலோர் வாழ்வில் பி.வி. நரசிம்ம சுவாமியின் வாழ்க்கை வரலாறு, தெரியாத ஒன்றைத் தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பாக, வியப்பாக, அமைந்துள்ளது.

சதுரங்கம் ஆடுவதும், சொல்லிக் கொடுப்பதும் அவ்வளவு சுலபமில்லை. அதிலே சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் தம்பதிகள் R.P. ரமேஷ், ஆர்த்தி ராமசாமி ஆகியோருக்கு, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

தமிழனின் உணர்ச்சிகளைப் பிரதிபலித்து, கவிதா சக்தியுடன், தமிழ் நாட்டுக் காட்சிகளை வர்ணிக்கும் அற்புதமான சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியவர் என்று தி.ஜ. ரங்கநாதன் மதிப்பிட்டவரான மஞ்சேரி S. ஈஸ்வரன் அவர்களை எழுத்தாளர் பகுதியில் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com