தற்செயலாக அல்லது மர்மமாக நடப்பது போலத் தோன்றினாலும் எதுவுமே சரியான காரணமில்லாமல் நடப்பதில்லை. ஆழமாகச் செல்லும் வேர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.
ஸ்ரீராமரும் படைகளும் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை செல்வதற்காக ஜலசந்தியில் பாலம் கட்டிய நேரம் அது. வானரங்கள் குன்றுகளைப் பிடுங்கித் தோள்களில் வைத்துக்கொண்டு நெடுந்தொலைவு தாவிக் குதித்தன. 'ராமர் பாலம்' கட்டுவதற்காக அவற்றைக் கடலுக்குள் எறிந்தன. இமாலயம் தொடங்கி, பாலம் உருவாகிக் கொண்டிருந்த தென்கோடி வரை அவை நெடுக வரிசையில் நின்றிருந்தன. பாலத்தைக் கட்டி முடித்ததும், இனிமேல் குன்றுகள் தேவையில்லை என்ற சொல் விரைந்து அந்த வரிசை வழியே பரவியது. வானரங்கள் எங்கே நின்றிருந்தனவோ அங்கேயே தோளில் இருந்த குன்றுகளைக் கீழே இறக்கி வைத்தன.
ஒரே ஒரு குன்று மட்டும் அமைதியாக இருக்கவில்லை. அது தன் விதியை நொந்து புலம்பியது. "என்னை நான் இருந்த இடத்திலிருந்து எடுப்பானேன் பின்னர் வேண்டாம் என்பானேன்? ஐயோ, தெய்வத்தின் பணியில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்ததாக நான் மகிழ்ந்தேனே! ராமரின் சைன்யமும் ராமரும் என்மீது நடப்பார்கள் என்று பெருமகிழ்ச்சி கொண்டேனே. இப்போது நான் அங்குமில்லை, முன்னிருந்த இடத்திலும் இல்லை!" என்றது. ஏராளமாகக் கண்ணீர் வடித்தது.
இந்தச் செய்தி ஸ்ரீராமரின் செவிகளை எட்டியது. அவர் கருணா மூர்த்தி. "நான் மீண்டும் மனிதனாக அவதாரம் எடுத்து வருவேன், அப்போது உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன்" என்று செய்தி கூறி அனுப்பினார்.
கிருஷ்ணாவதாரத்தில் சுண்டுவிரலால் தூக்கி, முழுதாக ஏழு நாட்களுக்கு உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த கோவர்த்தன கிரி இதுதான். இதனைப் பிடித்துதான் அவர் கோகுலத்தின் இடையர்களை இந்திரனின் கோபத்தால் கொட்டிய மழையில் இருந்து காத்தார்!
நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2023
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |