ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20H)
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாங்களே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதற்கு உங்கள் பரிந்துரை என்ன?

கதிரவனின் பதில்:
ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:

* சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள்
* நிறுவனர் குழுவைச் சேர்த்தல்
* உங்கள் யோசனையைச் சோதித்து சீர்படுத்தல்
* முதல்நிலை நிதி திரட்டல்
* முதல்நிலை திசை மாற்றல் (initial pivoting)
* முதல் சில வாடிக்கையாளர்கள்
* விதைநிலை நிதி திரட்டல்
* வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை
* சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை மாற்றல்
* முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல்
* குழுவுக்குள் கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிதல்
* வெற்றிக் கோட்டைத் தாண்டுவதில் தடங்கல்கள்

சென்ற பகுதிகளில், குடும்ப நிதிநிலை இன்னல்கள் என்னென்ன நேரக்கூடும் என்பதைப் பற்றியும், அடுத்து நிறுவனக் குழுவைச் சேர்க்கும் முயற்சியில் நேரக் கூடிய இன்னல்களைப் பற்றியும் புதிய தலைமை மேலாளரால் எழக்கூடிய சிக்கல்களைப் பற்றியும் விவரித்தோம். இப்போது உங்கள் ஆரம்ப யோசனையைச் சோதித்து சீர்படுத்துவதில் எழக்கூடிய சிக்கல்களை விவரிப்போம்.

உங்கள் யோசனையைப் பற்றிக் கலந்தாலோசிக்க ஒரு நிபுணருடன் தொடர்பு கொள்வது கடினம் என்றும் எப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும், அப்படியே தொடர்பு கொண்டாலும், அவரைக் கலந்தாலோசனைக்கு சம்மதிக்க வைப்பது இன்னும் கடினம், அதையும் எப்படி அணுகினால் வாய்ப்பு அதிகம் என்றும் கண்டோம். மேலும், உங்கள் யோசனையை அந்த நிபுணர் நன்கு புரிந்து கொள்ளும்படி விளக்குவது உங்கள் பொறுப்பு என்றும் விவரித்தோம்.

அப்படியே நீங்கள் நன்கு விவரித்தாலும் சில நிபுணர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது குறுகிய அம்சத்தை மட்டும் உணர்ந்து கொண்டோ சரியாக ஆலோசனை அளிக்காமல் போகலாம் என்றும் விளக்கினோம். அதனால், ஒரு நிபுணருடன் மட்டும் கலந்தாலோசித்தால் போதாது, ஒன்றுக்கு மேற்பட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பலதரப்பட்ட ஆலோசனைகளையும் அலசி, உங்கள் யோசனைகளின் பல கோணங்களையும் ஆராய்ந்து, யோசனையைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் துறை நிபுணர்களை மட்டும் கலந்தாலோசித்தால் போதாது. உங்கள் யோசனையால் உருவாகும் விற்பொருளை வாங்கிப் பயன்படுத்தக் கூடிய பல வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் நன்கு விற்பனையாகும் படியான விற்பொருளை உருவாக்க இயலும். மேலும், வாடிக்கையாளர் நிறுவனங்களில் எவர் உங்கள் பொருளை விலை கொடுத்து வாங்குபவர் என்பதும் புரியும். ஏனெனில் சிலமுறை உங்கள் பொருளைப் பயன் படுத்துபவர் வேறாகவும், அதற்கு விலை கொடுத்து வாங்கும் அதிகாரமுடையவர் வேறாகவும் இருக்கக் கூடும்! அவர்கள் இருவரையும் அணுகும் முறையை அதற்கு ஏற்றபடி கூர்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்களை அணுகுவதும் தொடர்பு கொண்டு கலந்தாலோசிப்பதும். நிபுணர்களைப் பிடிப்பதைவிடக் கடினம்! ஆனாலும் நிபுணர்களைக் கலந்தாலோசிக்கும் அதே யுக்திகளை வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்கும் கையாளலாம்.

நிபுணர்கள், வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், உங்கள் துறைக்கு உரித்தான மூலதனத்தாரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் தேவதை (angel) மூலதனத்தாராக இருக்கக் கூடும், அல்லது நிறுவன (institutional) மூலதனத்தாராக இருக்கக் கூடும். அவர்கள் உங்களைப் போன்ற பலப்பல தொழில்முனைவோர்களைச் சந்தித்து உரையாடுகிறார்கள். அவர்களிடமிருந்து உங்கள் துறையில் ஏற்கனவே மிகையாக மூலதனம் இடப்பட்டுவிட்டதா என்று அறிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் துறையிலேயே மூலதனமிட ஆர்வம் அதிகமாக உள்ளதா, அதனால், உடனே மூலதனம் இடாவிட்டாலும், உங்களுக்கு சிலவித உதவிகளைச் செய்ய முன்வருவார்களா என்றும் பார்க்கலாம். உதாரணமாக வாடிக்கையாளர் மற்றும் நிபுணர்க்ளுடன் கலந்தாலோசிக்க உதவக்கூடும்.

இறுதியாக உங்கள் துறையில் உள்ள பெரும் நிறுவனங்களில் உயர் பொறுப்பு உள்ளவர்களிடம் அந்நிறுவனங்கள் உங்கள் யோசனையின் திக்கில் என்ன திட்டமிட்டுள்ளன, அவர்களின் விற்பொருளுக்கு மதிப்பூட்டும் வகையில் உங்கள் யோசனையை எவ்வாறு மெருகேற்றிக் கொள்ளலாம், அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்குமா என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. பெரும் நிறுவனங்கள் உங்கள் யோசனையைத் திருடி உடனே செயலாற்ற முடியாது. அதனால் தைரியமாகக் கலந்தாலோசிக்கலாம்!

எல்லா கலந்தாலோசனைகளையும் சரியான கோணத்தில் ஆராய்ந்து யோசனையைச் சீர்திருத்துவது முக்கியம். ஏனெனில் பல தொழில்முனைவோர்கள் தங்கள் யோசனையை அப்படியே ஆதரிக்கும் ஆலோசனை அம்சங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு மற்றக் கருத்துக்களை உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். இதை ஆதரிப்பு மனப்பாங்கு (confirmation bias) என்று கூறுவார்கள். இது நல்ல கருத்துக்களை வீணாக்குவது மட்டுமல்லாமல் உங்கள் நிறுவனத்தையே கவிழ்த்து விடக் கூடிய அபாயமான நோக்கு. மொத்தமாக ஆதரிக்காமல் அளிக்கும் ஆலோசனைகளில் பொன் போன்ற நல்ல கருத்துக்கள் கிடைக்கும். உங்கள் யோசனையை எப்படி சிறிது மாற்றினால் பலன் அதிகரிக்கக் கூடும், விற்பனை எளிதாகக் கூடும் என்று அறிந்து கொள்ளலாம். யோசனையே சரிபட்டு வராது, வேறு திக்கில் செல்ல வேண்டும் என்றுகூட உணர்ந்து பல வருடங்களை வீணாக்குவதைத் தவிர்க்கவும் கூடும்!

என் அனுபவத்தில்கூட அப்படி நடந்துள்ளது. ஒரு முறை, விளையாட்டரங்கங்களில் பல கோணங்களில் விளையாட்டை நல்ல தரமான விதத்தில் பார்ப்பது, உணவு அல்லது பான வகைகளை வரவழைப்பது போன்ற யோசனையை இரு மிக அனுபவமுள்ள தொழில்முனைவர்களோடு சேர்ந்து ஆராய்ந்து வந்தோம். சில கலந்தாலோசனைகள் நல்ல வரவேற்பளிப்பதாகவே இருந்தன. ஆனால் சிலர் இந்த யோசனை தொழில்நுட்ப ரீதியாகவும், நுகர்வோருக்குப் பலனளிப்பதாகவும் இருந்தாலும், விளையாட்டு அரங்கங்கள் சில நிறுவனங்களின் இரும்புப் பிடியில் இருப்பதால் வணிகரீதியில் பெரிய தடங்கல்கள் இருப்பதால் வெற்றியடைவது மிகக் கடினம் என்று உணர்த்தினர்.

அக்கருத்து மிகக் கசப்பாக இருந்தாலும், அதன் உண்மையை நாங்கள் உணர்ந்து கொண்டு அந்த யோசனையைத் தவிர்த்து, பல வருட உழைப்பு வீண்போகாமல் தவிர்த்து வேறு திக்கில் சென்றோம். அப்படி ஒரேயடியாக மாறாவிட்டாலும் மாற்றுக் கருத்துக்களால் யோசனையை மெருகேற்றிக் கொண்டால் வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்வது சாத்தியம்.

யோசனை சீர்திருத்த முயற்சி இன்னல்களைப் பற்றிய விளக்கத்தை இத்தோடு முடித்துக் கொள்வோம். அடுத்த பகுதியில் மற்றொரு இன்னலைப் பற்றி விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com