அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம்
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் ஆலயம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ளது. தல இறைவன்: ஸ்ரீகிருஷ்ணர். தாயார்: பாமா, ருக்மிணி. தீர்த்தம்: மத்ய தீர்த்தம். தலத்தின் புராணப் பெயர்: திருப்பாடகம்.

தலச் சிறப்பு
ஸ்ரீகிருஷ்ணர், ஆலயத்தின் மூல ஸ்தானத்தில் 25 அடி உயரமுள்ளவராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சம். பாண்டவர்களுக்காகத் துரியோதனிடம் தூது சென்ற கிருஷ்ணர், கௌரவர்கள் சரியான ஆசனம் அளிக்காததால், விஸ்வரூபமெடுத்து தானே ஓர் ஆசனத்தை உருவாக்கி அதில் அமர்ந்தார். அந்த விஸ்வரூபக் கோலத்தில் இங்கே காட்சி தருகிறார். மூலவர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார். இவ்வாலயம் பல்லவர் கால ஆலயமாகும். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49வது திவ்ய தேசம். மங்களாசாசனம் செய்தவர்கள்: பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்.திருவிழாக்கள்
திருமழிசை ஆழ்வார் திருவிழா, கிருஷ்ண ஜயந்தி, தீபாவளி, முக்கொடி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப் பெருமாள், எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து பாண்டவ தூதனான ஸ்ரீ கிருஷ்ணனைத் தரிசித்தால் கஷ்டங்கள் விலகிவிடும்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை.
மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரை.

திருப்பாடகம்:
நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து
அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே!
(திருச்சந்த விருத்தம்-64)


சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com