தென்றல் பேசுகிறது...
தமிழகத்தில் வேர்கொண்டவர்கள் பெருஞ் சாதனையாளர்களாக முன்னிற்கும் காலம் இது. முதலில் கவனத்துக்கு வருபவர் 'சந்திரயான்-3' விண்கலத்தை ஏவி, நிலவின் தென் துருவத்தில் அதனை கால் பதிக்கச் செய்த முதல் மற்றும் ஒரே நாடு என்னும் பெருமையை பாரதத்துக்கு ஈட்டித் தந்த அறிவியலார் குழுவின் தலைவரான P. வீரமுத்துவேல். விண்வெளி வல்லரசுகள் பட்டியலில் பாரதம் இப்போது நான்காவது நாடாகச் சேர்ந்துள்ளது. மதியில் இறங்கிய நிலவுலவியின் (Moon Rover) பெயர் பிரக்ஞான்.

★★★★★


பிரக்ஞான் என்றதும், பிரக்ஞானந்தா நினைவுக்கு வருகிறார்.18 வயதே ஆன FIDE உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வழியில் பல ஜாம்பவான்களை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறார். பலரும் அஞ்சுகின்ற மேக்னஸ் கார்ல்ஸனுடன் மூன்று முறை மோதி, 3வது டைபிரேக்கரிலும் டிரா செய்து, இரண்டாம் இடத்தை வென்றிருக்கிறார். இதுவும் இணையற்ற சாதனைதான். "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" என்ற வள்ளுவன் வாக்கு நினைவுக்கு வருகிறது.

★★★★★


அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விவாதச் சுற்றுகளில் விரைந்து முன்னேறிவரும் கோடீஸ்வரத் தொழிலதிபரான விவேக் ராமசுவாமிக்குத் தமிழ்த் தொடர்பு உண்டு. அவரது தெளிவான, ஒளிவு மறைவில்லாத, புள்ளிவிவரங்களோடு கூடிய பேச்சு பலரையும் கவர்ந்துள்ளது. அதேபோல மற்றொரு போட்டியாளரான நிக்கி ஹேலி, 1960களில் அமெரிக்காவில் குடியேறிய பஞ்சாபிப் பெற்றோருக்குப் பிறந்தவர். இருவருமே நமக்குப் பெருமை சேர்ப்பவர்கள்தாம்.

★★★★★


ஓவியர் மணிகண்டன் இளைஞர், வறுமையை வண்ணங்களால் நிரப்பப் பழகி தானே கற்றுக்கொண்டவர். கனவுகளில் இருந்து காவிய வாழ்க்கையை நோக்கி ஓவியப்பயணம் செல்பவர். முன்னோடி ஜெகவீர பாண்டியனார், எழுத்தாளர் சு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கருத்தில் வைக்கத் தக்க சான்றோர். மஹாமஹோபாத்யாய என்றெல்லாம் அழைக்கப்பட்ட உ.வே.சா. அவர்களும் தன் தமிழறிவை நிறுவ எத்தனை பாடுபட வேண்டியிருந்தது என்பதை 'அலமாரி' சொல்கிறது.

வாசகர்களுக்கு கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, மிலாடி நபி வாழ்த்துகள்.

தென்றல்
செப்டம்பர் 2023

© TamilOnline.com