அருள்மிகு சாஸ்தா (ஸ்ரீ ஐயப்பா சொசைட்டி ஆஃப் டேம்பா) கோவில் சார்பில் நிதி திரட்டும் முயற்சியாக, ஃப்ளோரிடா மாகாணம் டேம்பாவில் (Tampa, Florida) மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி ஜூலை 22ஆம் தேதி மாலை 6:30 முதல் லேக்லேண்ட் ஆர்பி ஃபண்டிங் மைய வளாகத்தில் (Lakeland RP Funding Center) கோலாகலமாக நடைபெற்றது.
ஜூலை 21, வெள்ளிக்கிழமை அன்று இளையராஜா மற்றும் அவரது நாற்பதுக்கும் மேற்பட்ட இசைக்குழுவினர், பின்னணிப் பாடகர்கள் மனோ, S.P.B. சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா, சுனிதா, விபவாரி, பிரியா, சூர்முகி, மற்றும் அனிதா ஆகியோர் டேம்பா வந்தடைந்தனர். அன்று முதல் கட்டமாக, இளையராஜா மற்றும் குழுவினர், அருள்மிகு டேம்பா ஐயப்பன் ஆலயத்திற்கு வந்து ஐயப்பனை வழிபட்டனர். அவர்களை சாஸ்தா (SASTA) ஐயப்பன் கோவில் அறங்காவலர் குழு சார்பாக, செயல்குழுத் தலைவர் விஜயராகவன் நாராயணஸ்வாமி மற்றும் கோவில் குருக்கள், பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
இளையராஜா குழுவினரின் பிரதான இன்னிசை நிகழ்ச்சி ஜூலை 22 சனிக்கிழமை மாலை 6:30 மணி வாக்கில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 2300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டேம்பா, சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட வடஅமெரிக்கா மாநிலங்களில் இருந்தும் வந்திருந்து இசை நிகழ்ச்சியை ரசித்தனர்.
குழுவினர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். என்றென்றும் மறக்க முடியாத பாடல் வரிசையில் ஜனனி ஜனனி, ஒம் சிவோஹம், வளை ஓசை கலகலவென, தென்றல் வந்து என்னைத் தொடும், சின்ன மணி குயிலே உட்படப் பல மொழிப் பாடல்களைப் பாடிப் பிரமிக்க வைத்தனர்.
இசைஞானியின் 80-வது பிறந்த வருடக் கொண்டாட்டத்திற்கு மகுடம் சேர்க்கும் விதமாக, 'சாஸ்தா' சங்கீதா ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்க, 2300க்கும் மேற்பட்ட இசைப்பிரியர்கள் ஒன்றிணைந்து 9 மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்துரைத்து உலக சாதனை ஏற்படுத்த முயன்றனர்.
இதுவொரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
சங்கீதா ரவிச்சந்திரன், டேம்பா, ஃப்ளோரிடா |