FeTNA தமிழ்விழா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் வெள்ளிவிழா கண்ட சாக்ரமென்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ்விழாவை கலிஃபோர்னியாவின் தலைநகர் சாக்ரமென்டோவில் ஜூன் 30, ஜூலை 1-2 தேதிகளில் 'தொன்மை, தமிழரின் பெருமை' என்ற கருப்பொருளுடன் மிக விமர்சையாக நடத்தின.

இந்த மாபெரும் தமிழ்விழா பலவிதமான போட்டிகள், நடனம், நாடகம், பட்டிமன்றம், யோகம், மரபு சார்ந்த கலைகள், கலந்துரையாடல் ஆகியவற்றுடன் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் மூன்று நாட்களும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கின. தமிழகத்திலிருந்து வருகை தந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களின் தமிழிசை மற்றும் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசைக்குழுவினருடன் பின்னணிப் பாடகி சித்ரா, மூக்குத்தி முருகன்,வேல்முருகன், சூப்பர் சிங்கர் விஜய் பிரகாஷ், பிரியங்கா, மானசி ஆகியோர் வழங்கிய மெல்லிசை அருமையான விருந்தாக அமைந்தது.



பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அளித்த 'பாட்டுக்குப் பாட்டு' சுவையாக இருந்தது. பிரதீப் ஸ்வாமிநாதன் இசையோடு கொடுத்த திருக்குறள் அழகுக்கு அழகு சேர்த்தது. மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை ஃபெட்னா நிர்வாகக் குழு விழாவில் மேடையேற்றி அழகுபார்த்தது. அவர்களின் கலைத்திறன் நெஞ்சை அள்ளியது. விழாவில் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் இணையம் வழியே சிறப்புரை ஆற்றினார்.தமிழகக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் வருகை தந்து சிறப்பித்தார்.

சிறந்த பேச்சாளரான பர்வீன் சுல்தானா மற்றும் சுகி சிவம் பட்டிமன்றம் நடத்தியதோடு மேலும் சில நிகழ்ச்சிகளில் சிறப்புரை ஆற்றினர். திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனரும் நடிகருமான சசிகுமார், கரு பழனியப்பன், சந்தானம் , ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் துணைநடிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் விழாவை வண்ணமயம் ஆக்கினர்.

தகவல்: சந்தியா நவீன்

© TamilOnline.com