வட அமெரிக்காவில் வாழும் தமிழர் களுக்கு தமிழகம் மற்றும் இலங்கைக் கடலோரப் பகுதிகளில் சுனாமியின் தாக்குதலின் தீவிரம் தொடக்கத்தில் அவ்வளவாகத் தெரியவில்லை. சி.என்,என்., எம்.எஸ்.என்.பி.சி. போன்ற நிலையங்களில் பெரிய நில நடுக்கம் பற்றிய செய்தி உடனுக்குடன் வந்து விட்டது.
நில நடுக்கத்தின் அதிர்வு எண் முதலில் 8.5 ரிக்டர் என்று அறிவித்தாலும் சற்று நேரத்தில் அமெரிக்கப் புவியியல் அளவைய கத்தின் வலைத்தளத்தில் (earthquake.usgs.gov) 9.0 ரிக்டர் என்று உயர்த்திய அறிவுப்பு வந்தது. 7.9 ரிக்டருக்கு மேற்பட்ட அதிர்வு என்றால் சுனாமி ஆபத்து இருக்கிறது என்றாலும், அதற்கான தடயங்கள் ஏதும் பசி·பிக் கடல் பகுதிகளில் காணவில்லை என்று ஒரு குறிப்பும் இருந்தது. இந்தியா விலோ, கடல் கொந்தளிப்பையும், நில நடுக்கத்தையும் தொடர்புபடுத்தி, தாக்கியது சுனாமிதான் என்று அடையாளம் காட்டச் சற்று நேரமாகியது.
தொலைக்காட்சி நிலையங்கள் படங்களை நம்பிப் பிழைப்பவை. எங்கே பரப்பரப்பான படங்கள் கிடைக்கின்றனவோ அங்கே தான் செய்தி. இருந்தாலும் சுனாமியைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அதை அருகிலிருந்து படம் பிடித்தவர்கள் யாரும் பிழைத்திருக்க முடியாது என்றே தோன்றியது. முதலில் வரத்தொடங்கிய படங்கள் தாய்லாந்தில் விடுமுறைக்குச் சென்றிருந்த ஐரோப்பிய, அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் எடுத்தவை.
பிரமிக்கத்தக்க அந்தப் படங்கள் வரத் தொடங்கியபோதுதான் சுனாமித் தாக்குதலின் முழு ஆபத்தும் தெரியத் தொடங்கியது. இருப்பினும் தமிழகத்திலும் இலங்கையிலும், குறிப்பாகச் சென்னைக்கு வெளியே என்ன நடந்தது என்ற செய்திகள் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் வரவில்லை. மேலும், ஐரோப்பியச் சுற்றுப் பயணிகள் பற்றிய செய்திகள்தாம் அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் கவனத்தை ஈர்த்தன.
தமிழகத்தில் வாழும் தங்கள் உறவினர் களைப் பற்றிக் கவலை கொண்ட வட அமெரிக்கத் தமிழர்கள் நேரடியாகத் தொலைபேசித் தொடர்பு மூலமே செய்தி அறிந்து கொள்ள முடிந்தது. தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் பதற்றத்துக்கு எல்லையே இல்லை.
24 மணி நேரமும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும், விளம்பரங்களையும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் சன் தொலைக்காட்சி நிறுவனம், இந்த நேரத்தில் தனது தோழமை நிலையமான சன் செய்தியின் நேரடி ஒளிபரப்பை அளித்திருந்தால், நேயர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். 12 மணி நேர இடைவெளியுடன் நேற்றைய செய்திகளை அவ்வப்போது கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒளிபரப்பியது சன் டிவி. செயற்கைக்கோள் வழியாக ஒளிபரப்பும் நிலையங்கள் உடனடியாகத் தங்கள் ஒளிபரப்பை மாற்றுவது கடினம். இருப்பினும், செப்டம்பர் 11க்குப் பிறகு சமூகப் பொறுப்புள்ள அமெரிக்க நிலையங்கள் கேளிக்கைகளைத் தவிர்த்து முழு நேரச் செய்திகளை ஒளிபரப்பியது போல் சன் டிவியும் செய்திருக்கலாம்.
முதன்முதலில் சென்னை பற்றிய படங்கள் வரத் தொடங்கியது தினகரன் (www.dinakaran.com), தினமலர் (www.dinamalar.com), வலைச் செய்தித்தளங்களில்தாம்.
அதிலும், தினகரனில் வெளிவந்த படங்கள் சுனாமியின் கோரத்தாண்டவத்தின் முழுமையையும் காட்டின. தெருவெல்லாம் உடல்கள் கிடப்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்த தினகரனின் படங்களைப் பார்த்த பல அமெரிக்க ஊடகங்கள் அவ்வளவு கோரமான படங்களைத் தங்கள் நேயர்கள் விரும்ப மாட்டார்கள் என்றனர்.
டிசம்பர் 28, நியூயார்க் டைம்ஸின் முகப்புப் பக்கத்தில் வந்த பல குழந்தைகளின் உயிரற்ற உடல்களின் முன் மண்டியிட்டுக் கதறிக் கொண்டிருந்த அன்னையின் படம் வாசகர்களின் கோபத்தைக் கிளறியது. தனிப்பட்ட துயரக்காட்சியை மரியாதையில்லாமல் பயன்படுத்தியது தவறு என்றார்கள் பல வாசகர்கள். டைம்ஸ் ஆசியர் மிகுந்த மனக் கலக்கத்துடன் தான் அந்தப் படத்தை வெளியிட்டோம், ஆனால், ஒரு மாபெரும் பேரிடரால் விளைந்த அவலத்தைச் சித்தரிப்பதற்கேற்ற படம் அது என்றார்.
கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி பற்றிய படங்கள் பெரும்பாலான அமெரிக்க ஊடகங்களில் வரப் பல நாட்களாகின. இதற்கு ஒரு முக்கியமான விதி விலக்கு கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர் (www.csmonitor.com). ஜானகி கிரெம்மர் என்ற அற்புதமான செய்தியாளர் இந்தியாவில் நாச்சம்மை ராமன் உதவியுடன், மேலைநாட்டு ஊடகங்கள் மட்டுமல்ல, இந்தியச் செய்தித்தாள்களும் வெளியிடத் தவறிய செய்திகளை வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புயலினால் வரும் கடல் தாக்குதல்களைத் தணித்து வரும் கடல்தாழை அலையாத்திக் காடுகள் (mangroves) சுனாமியின் தாக்குதலையும் தணித்தன என்றார் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநர் செல்வம். விறகு வெட்டுவோரால் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காடுகளை சுவாமிநாதன் மையம் திருநாள் தோப்பு என்ற மீனவர் கிராமத்தில் மீண்டும் வளர்த்தது. அதனால் 172 குடும்பங்கள் பிழைத்தன என்றது மானிட்டர்.
சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் சிறிய பத்திரிக்கைகள்தாம் உள்ளூர்த் தமிழர்களைத் தொடர்பு கொண்டு சுனாமியின் தாக்கம் இங்கேயும் உண்டு என்று செய்தி வெளியிட்டன.
சான் ·பிரான்சிஸ்கோ கிரானிக்கிள், சான் ·பிரான்சிஸ்கோ எக்சாமினர், சான் ஓசே மெர்க்குரி நியூஸ், பத்திரிக்கைகள் சுனாமி பற்றிய செய்திகளுடன், உள்ளூர் அமெரிக் கத் தமிழர்களின் நிவாரண நிதி திரட்டு முயற்சி பற்றிய செய்திகளையும் வெளி யிட்டனர்.
நியூ கலி·போர்னியா மீடியாவின் பசி·பிக் செய்திச் சேவையகம் (news.ncmonline.com)) சுனாமி நிவாரண முயற்சியில் சிறுபான்மை மொழி ஊடகங்களின் பங்கு பற்றி அலசியிருந்தது. சிறுபான்மை அரசு சாரா தொண்டூழிய அமைப்புகள் தங்கள் மக்களை நம்பித்தான் நிதி திரட்டுகின்றன. புலம் பெயர்ந்த மக்களுக்கும், தாயகத்துக்கும் இடையே பாலமாய் அமையும் இந்த அமைப்புகளில் எவை எங்கே சேவை செய்கின்றன என்பது அந்தந்த மக்களுக்கு மட்டுமே தெரியும்.
சான் ·பிரான்சிஸ்கோ கிரானிக்களும் நியூ கலி·போர்னியா மீடியாவும் இணைந்து நடத்திய சிறுபான்மை மொழி ஊடகங்கள் வட்டமேஜைக் கருத்தரங்கில் அமெரிக்க ஊடகங்கள் எந்தச் செய்தியை வலியுறுத்த வேண்டும் என்பதைப் பற்றிய சிறுபான்மை ஊடகங்களின் கருத்து வரவேற்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானவை கடலோரப் பகுதிகள் மட்டுமே, ஆனால் ஊடகங்களின் பரபரப்புச் செய்தியால் தாக்குதலுக்கு ஆளாகாத இடங்களெல்லாம் வெறிச்சோடிப் போய் விட்டன. இதனால் சுனாமி தாக்குதலோடு பொருளாதாரப் பிரச்சினையும் கூடி விடுகிறது என்றார் இலங்கை மாத இதழ் நிருபர் நிஹால் லக்ஷ்மண் ரத்னபாலா. மறுநாளே, இலங்கையிலும், இந்தியாவிலும் எங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்ற கட்டுரைகள் வெளிவந்தன!
மணி மு. மணிவண்ணன் |