எண்ணமும் பார்வையும்
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த வீரதீரச் செயல்களைப்பற்றி ராமதாசர் பாடினார். அதில், அங்கிருந்த வெள்ளல்லிப் பூக்களைப் பற்றிப் பாடினார். அவர் பாடுவதைக் கேட்ட ஆஞ்சநேயர் இந்த விவரணை சரியல்ல என்று கூறினார். அங்கே ஒரே ஒரு வெண்ணிற அல்லிப் பூவைக் கூடப் பார்க்கவில்லை என்று கூறினார். இலங்கையில் இருந்த அல்லிப் பூக்கள் சிவப்பானவை என்று அவர் உறுதியாகக் கூறினார். அவை வெள்ளைதான் என ராமதாசர் வாதிட்டார்.

ஆஞ்சநேயருக்கு எரிச்சலாகி விட்டது. நான் நேராகப் பார்த்தேன் அப்படியிருக்க இந்தக் கவிஞர் எப்படித் தனது கற்பனையால் அதை மாற்றிச் சொல்லலாம் என்று கேட்டார். ஸ்ரீராமர் குறுக்கிட்டு எது சரியென்று தீர்மானிக்க வேண்டும் என வேண்டினார். ஸ்ரீராமரோ ராமதாசர் கூறியதே சரி என்றார்! ராட்சசக் கூட்டத்தின் மீது கொண்ட ராஜஸீகமான கோபத்தால் ஆஞ்சநேயரின் பார்வை பாதிக்கப் பட்டிருந்ததால் அவருக்கு அந்தப் பூக்கள் சிவப்பாகத் தெரிந்தன என்று ஸ்ரீராமர் கூறினார்!

நன்றி: சனாதன சாரதி, மே 2023

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com