ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20G)
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாங்களே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதற்கு உங்கள் பரிந்துரை என்ன?
கதிரவனின் பதில்: ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம்.

இதோ அந்த இன்னல் பட்டியல்:
* சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள்
* நிறுவனர் குழுவைச் சேர்த்தல்
* உங்கள் யோசனையைச் சோதித்து சீர்படுத்தல்
* முதல்நிலை நிதி திரட்டல்
* முதல்நிலை திசை மாற்றல் (initial pivoting)
* முதல் சில வாடிக்கையாளர்கள்
* விதைநிலை நிதி திரட்டல்
* வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை
* சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை மாற்றல்
* முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல்
* குழுவுக்குள் கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிதல்
* வெற்றிக் கோட்டைத் தாண்டுவதில் தடங்கல்கள்

சென்ற பகுதிகளில், குடும்ப நிதிநிலை இன்னல்கள் என்னென்ன நேரக்கூடும் என்பதைப் பற்றியும், அடுத்து நிறுவனக் குழுவைச் சேர்க்கும் முயற்சியில் நேரக் கூடிய இன்னல்களைப் பற்றியும் புதிய தலைமை மேலாளரால் எழக்கூடிய சிக்கல்களைப் பற்றியும் விவரித்தோம். இப்போது உங்கள் ஆரம்ப யோசனையைச் சோதித்து சீர்படுத்துவதில் எழக்கூடிய சிக்கல்களை விவரிப்போம்.

யோசனையைச் செம்மைப்படுத்த வேண்டுமானால் உங்கள் துறையில் உள்ள நிபுணர்களோடு கலந்தாலோசிக்க வேண்டும், ஆனால் நிபுணர்களை அணுகி அவர்களை நேரம் ஒதுக்க ஒப்புக்கொள்ளச் செய்வது கடினம் என்று குறிப்பிட்டோம். நிபுணர்களிடம் ஓரளவு பரிச்சயம் இருந்தால் மின்னஞ்சல், linked-in மற்றும் தொலைபேசி மூலம் முயற்சிக்கலாம் என்று கண்டோம். பரிச்சயமில்லாவிட்டால் கருத்தரங்குகளில் அறிமுகம் செய்து கொண்டு பிறகு அவ்வாறு முயற்சிக்கலாம் என்றும் குறிப்பிட்டோம். அதுவும் நடக்காவிட்டால் வலை விரிக்க வேண்டும் என்று கூறினோம்.



இங்கு நாம் குறிப்பிடும் வலை, நூலால் பின்னப்பட்ட வலையல்ல! தொழில் தொடர்புகள், நண்பர்கள் அல்லது உறவினர்களின் பிணைப்புக்களால் பின்னப்பட்ட மனித வலை! தொழில் முனைவோர்களுக்கு அத்தகைய மனித வலை இன்றியமையாத, மிக மிக முக்கியமான சொத்து! அதைப் பயன்படுத்தி நமக்குத் தேவைப்பட்ட நிபுணரோடு கலந்தாலோசனை அமைத்துக் கொள்ள முடியக்கூடும்.

கெவின் பேக்கனிடமிருந்து ஆறு பிரிவினையின் ஆறு கட்டங்கள் (Six degrees of separation from Kevin Bacon) என்ற விளையாட்டு ஒன்று உண்டு. உலகில் எல்லாருமே ஆறு தொடர்புகளுக்குள் பிணைக்கப்பட முடியும் என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்துள்ள விளையாட்டு அது. உலகில் யாரையாவது எடுத்துக் கொண்டு அவர்களுடைய எத்தகைய தொடர்புச் சங்கிலியையும் வைத்து ஆறு பிணைப்புகளுக்குள் ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கனோடு இணைக்க வேண்டும்!

அதுபோல் உங்கள் இலக்காக உள்ள நிபுணருக்கும் உங்களுக்கும் எப்படியாவது ஒரு தொடர்புச் சங்கிலியைக் கண்டுபிடித்து அதை நகர்த்தி நிபுணரை அணுக வேண்டும். உங்கள் தொடர்பு ஒரே ஒரு பலமான பிணைப்பு, அதாவது உங்களுக்கு நெருங்கியவர் ஒருவர் அந்த நிபுணருக்கும் நெருங்கியவர் என்றால் அதைப் பயன்படுத்திக் கலந்தாலோசனையை அமைத்துக் கொள்ளவும் முடியும். ஆனால் அந்த நிபுணர் உங்களுக்குத் தெரிந்தவருக்குத் தெரிந்தவருடைய தொடர்பு என்றால் அறிமுகம் மட்டுமே கிட்டக்கூடும். அதற்குப் பிறகு முன் குறிப்பிட்ட ஊடகங்கள் மூலம் நிபுணரை அணுக முயலலாம்.

மேற்குறிப்பிட்ட முறைகளில் எப்படியாவது நிபுணருடன் தொடர்பு கிடைத்தாலும் அடுத்த கட்ட இன்னல் அவரைக் கலந்தாலோசனைக்கு ஒப்புக் கொள்ளச் செய்வது! முன்பே குறிப்பிட்டபடி அத்தகையத் துறை நிபுணர்களைப் பற்பல ஆரம்பநிலை நிறுவனங்கள் நாடும். அதனால், அவருடைய சொந்த வேலைக்கான நேரம் விட்டு எஞ்சிய நேரத்துக்குள் எந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கலந்தாலோசிப்பது என்பது பெரிய பிரச்சனை.

அதனால், உங்கள் நிறுவனம் அவருக்கு எந்த வகையிலாவது முக்கியத்துவம் உடையதாக இருக்கச் செய்யவேண்டும். முன்பு குறிப்பிட்ட படி, யாராவது ஒருவர் இருவருக்கும் நெருங்கியவரானால் அவர் உங்கள் கோரிக்கைக்குத் தூது சென்று கலந்தாலோசனைக்கு இணங்கச் செய்யக்கூடும். அல்லது உங்கள் நிறுவனர் குழுவின் அனுபவம் அல்லது தொழில்ரீதிப் பிரபலம் அவரை ஈர்க்கக் கூடும். அல்லது உங்கள் யோசனை அவருக்கு மிகவும் தேவைப்பட்டதாக, சுவாரஸ்யமானதாகத் தோன்றக்கூடும். அந்தத் துறையில் எதாவது ஆரம்பநிலை நிறுவனத்துக்கு ஆலோசகராக இருந்து அதில் ஓரளவாவது பங்குகள் பெறும் ஆர்வமும் அவருக்கு ஏற்கனவே இருக்கலாம், அல்லது நீங்கள் அத்தகைய ஆர்வத்தைத் தூண்டலாம்.

எப்படியோ கலந்தாலோசனைக்கு அந்த நிபுணர் இணங்கியதும், அடுத்த கட்ட இன்னல் நேர்கிறது. அதுதான் உங்கள் யோசனையை அவருக்குச் சரியாக விளக்கி அவரிடமிருந்து சரியான ஆலோசனை பெறுவது. அவர் என்னதான் உங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் உங்கள் யோசனை எதிர்காலத்தை நோக்குவதால் அவருக்கு ஏற்கனவே நன்கு புரிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.

அதனால் அதைச் சரியாக விளக்குவது உங்கள் பொறுப்பு. அவருக்கு உடனே புரிந்துவிடும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்ல. என் அனுபவத்தில், நிபுணர்களுக்கும் பொறுமையாக விவரமாக விளக்கினால்தான் உங்கள் யோசனை அவர்கள் மனத்தில் பதியும். மேலும், சில முறை, நிபுணர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு தவறாகப் புரிந்துகொண்டு விடுவார்கள். அல்லது உங்கள் யோசனையின் விரிவான எதிர்கால நோக்கைக் கோட்டை விட்டுவிட்டு மிகவும் குறுகிய அம்சத்தின்மேல் தம் கவனைத்தை நிறுத்தி அதையே ஆழ்ந்து அலச ஆரம்பிப்பார்கள். அப்படி நடக்காமல் விரிவாகவும் ஆழமாகவும் விளக்குவது உங்கள் பொறுப்பு. இருந்தாலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதால், பல நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.

அடுத்து நிபுணர்கள் தரும் ஆலோசனைகளைச் சரியாகப் புரிந்து கொள்வதைப் பற்றியும் மற்ற இன்னல்களைப் பற்றியும் விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com