பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2)
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப் பேசிக் கொண்டனர். சில வருடங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்குச் செய்தி தெரிய வந்தது. பி.வி. நரசிம்ம சுவாமி, ஷீரடி பாபாவின் பக்தராக மாறியதையும், பாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதியிருப்பதையும் அறிந்து வியப்புற்றனர். ரமண பக்தராக இருந்தவர், எப்படி ஷீரடி பாபா பக்தராக ஆனார் என்பது பல பக்தர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

விடை கிடைத்தது
பகவான் ரமணரின் அத்யந்த பக்தர்களுள் ஒருவர் டி.பி. ராமச்சந்திர ஐயர். இவர் ஒருநாள் ரயிலில் போய்க் கொண்டிருந்தார். அதே ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பி.வி. நரசிம்மசுவாமியைக் கண்டார். ஆச்சரியமுற்றவர், அவரிடம் நெருங்கிச் சென்று பேசினார். உடல் நலம் பற்றி விசாரித்தார். பின் ரமண பக்தர்கள் பலரது மனதில் இருந்த அந்தக் கேள்வியைக் கேட்டார்: "பகவானின் அத்யந்த பக்தரான நீங்கள் ஏன் திடீரென அவரை விட்டுவிட்டு ஷீரடிபாபாவிடம் போய் விட்டீர்கள்?"

சற்றுத் தயங்கிய நரசிம்ம சுவாமி பின், "ஒருநாள் நானும் பகவானும் தனியா இருக்கறப்ப எனக்கு நாம சங்கீர்த்தனத்துல இருக்குற ஆர்வத்தைப் பத்தி அவர்ட்ட சொன்னேன். அதுக்கு பகவான், 'ஷீரடிக்குப் போ! சாயி பாபாதான் உன் குரு! சாயி பாபா சரித்திரத்தை எழுது! அவர் புகழை எல்லா இடத்துலயும் பரப்பு! இந்தியா முழுதும் தெரிய வை! உன் நேரத்தையெல்லாம் அதுக்கே செலவு பண்ணு. ஆடறேன், பாடறேன், பஜனை பண்றேன்னு திரிஞ்சிண்டிருக்காதே! முதல்ல ஷீரடிக்குக் கிளம்பு'ன்னார். நானும் வடநாட்டுக்குக் கிளம்பிப் போனேன். ஆனா ஷீரடி சாயி பாபா 1918லேயே விதேகமாயிட்டதுனாலே அவரால எனக்கு வழிகாட்ட முடியாதுன்னு நினைச்சு பகவானோட உத்தரவை அப்போ நான் பெருசா எடுத்துக்கலே. அங்கயும் இங்கயுமா சாதுக்கள், கோயில்கள்னு அலைஞ்சுண்டு இருந்தேன். ஒருநாள் கார்த்தால நான் ரோட்ல நடந்து போயிண்டிருக்கும்போது, பக்கிரி மாதிரி இருந்த ஒரு பெரியவர் வந்து, 'பாபாட்ட போ. ஷீரடிக்கு போ. பக்கத்துலதான் அவர் சமாதி இருக்கு'ன்னு சொன்னார். திரும்பவும் எனக்கு ஷீரடி பாபாவப் பத்தி ஒருத்தர் வந்து சொன்னதுனாலயும், உபாசினி பாபாவோட வழிகாட்டுதல்னாலயும் நான் ஷீரடிக்குப் புறப்பட்டுப் போனேன். அங்க போய் அவர் சமாதிக்கு முன்னால நின்னதும், ரமண பகவான் என்கிட்ட சொன்னது மறுபடியும் என் காதுல கேட்டது. பாபாவோட தரிசனமும் கிடைச்சுது. அவரைப் பத்தி எழுதறதுக்கு அவரோட அனுமதியும், ஆசிர்வாதமும் கிடச்சுது. பாபாதான் என் குருன்னு தெரிஞ்சிண்டேன். அவர் பக்தரானேன். அவரோட வாழ்க்கை வரலாற்றை எழுதினேன். பகவானோட ஆசிர்வாதம்தான் என்னை பாபா கிட்ட சேர்த்தது" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இதைக் கேட்டு வியந்து போனார் டி.பி.ராமச்சந்திர ஐயர். ரமணாச்ரமம் திரும்பியதும் அவர், அடியவர்களிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பின்னொரு சமயம் ரமணாச்ரமத்தில், பி.வி. நரசிம்ம சுவாமி பாபாவிடம் சென்றது குறித்த விவாதம் நிகழ்ந்தபொழுது பகவான் ரமணர், "ம்…ம்... அவரோட ஆள். அவர்கிட்டயே போயிட்டார். இதுல என்ன இருக்கு?" என்று சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நரசிம்மசுவாமி பாபாவைச் சரணடையவும், அவர் வாழ்க்கை வரலாறு தமிழில் எழுதப்படவும் பகவான் ரமணர் காரணமானார். தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்தில் ஷீரடி பாபாவின் வாழ்க்கை வரலாறு எழுதப்படவும் பகவான் ரமணரே காரணமாய் அமைந்தார். அதைப் பின்னால் பார்க்கலாம். தற்பொழுது ஷீரடி பாபாவை பி.வி. நரசிம்ம சுவாமி தேடிச் சரணடைந்த விதத்தை விரிவாகப் பார்ப்போம்.

குருவைத் தேடி...
"ஷீரடிக்குப் போ! சாயிபாபா தான் உன் குரு! சாயிபாபா சரித்திரத்தை எழுது. அவர் புகழை எல்லா இடத்துலயும் பரப்பு!" என்ற பகவான் ரமணரின் வாக்கை குருவாக்காக ஏற்றுத் தன் பயணத்தைத் தொடங்கினார் நரசிம்ம சுவாமி. அவரது எண்ணமெல்லாம் பாபாவே ஆக்ரமித்திருந்தார். பாபாவைத் தரிசிக்க வேண்டும்; அவரிடமிருந்து ஆத்மஞானம் பெற வேண்டும் என்பதே நரசிம்ம சுவாமியின் ஆரம்பகால லட்சியமாக இருந்தது. ஷீரடி வடநாட்டில் இருந்தது. நரசிம்ம சுவாமியோ காசு, பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளும் வழக்கம் உடையவர் அல்ல. 'எல்லாம் இறைவன் செயல்' என்ற அர்ப்பணிப்புடன் அவர் தனது குருவைத் தேடிப் புறப்பட்டார். போக்குவரத்து வண்டிகள், சுமை ஏற்றுச் செல்லும் லாரிகள், கால்நடை என்று பலவாறாகப் பயணப்பட்டார். எவராவது உணவு தந்தால் உண்பார் . இல்லை என்றால் பட்டினி கிடப்பார். அவர் அதிகம் உண்பவரோ, உணவில் நாட்டமுடையவரோ அல்ல என்பதால் உணவு குறித்துக் கவலைப்படாமல் பலநாள் பட்டினியுடன் பயணம் செய்ய முடிந்தது.

ஒரு சமயம், லாரி ஓட்டுநர் ஒருவர் நரசிம்ம சுவாமியை வண்டியில் ஏற்றிக் கொண்டார். சுவாமிக்கு டீயும், பிஸ்கட்டும் வாங்கித் தந்தார். பின் சுவாமிகளிடம், தாம் ஹுப்ளி நகருக்கு செல்வதாகவும், அந்த ஊரில் சித்தாச்ரமம் உள்ளதாகவும், அங்கு சித்தாரூட சுவாமி என்னும் மகான் வசிப்பதாகவும் தெரிவித்தார். சுவாமிகள் விரும்பினால் அங்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். நரசிம்ம சுவாமியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

லாரி ஓட்டுநர் சுவாமிகளை சித்தாச்ரமத்தில் சேர்ப்பித்தார். அங்கிருந்த மகான் சித்தாரூடர் நரசிம்ம சுவாமியை அன்புடன் வரவேற்றார். நரசிம்ம சுவாமியைப் பார்த்தவுடனேயே அவரது பரிபக்குவத்தை உணர்ந்துகொண்டவர், அங்கே தங்க இடமளித்தார். நரசிம்ம சுவாமி அங்கு சில மாதங்கள் தங்கினார். சம்ஸ்கிருத மொழியையும், அம்மொழி சார்ந்த இலக்கியங்கள் சிலவற்றையும் கற்றுக் கொண்டார். பேரானந்த நிலை என்றால் என்ன என்பதை அங்கு தனித்திருந்து தவம் செய்யும்போது உணர்ந்துகொண்டார். பின் சித்தாரூட சுவாமிகளின் மறைவுக்குப் பின் சித்தாச்ரமம் விட்டு நீங்கினார். குருவைத் தேடித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.



பண்டரிபுரத்தில்...
நரசிம்ம சுவாமி பலநாள் பயணப்பட்டு பண்டரிபுரம் சென்றடைந்தார். பகவான் பாண்டுரங்கனின் பிரசித்த பெற்ற தலமான அதில் எங்கும் நடந்த பஜனைத் திருவிழாக்களைக் கண்டு மனம் மகிழ்ந்தார். அங்கிருந்த தர்ம சத்திரத்தில் சுமார் ஓராண்டுக் காலம் தங்கி தினந்தோறும் விட்டலனை வணங்கி, தனக்கு மிகவும் பிடித்த பஜனைப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து வாழ்ந்தார். மராட்டி மொழியை அக்காலத்தில் நன்றாகக் கற்றுக் கொண்டார். அதே சமயம் தனது தேடலையும் மறக்கவில்லை. மீண்டும் குருவைத் தேடிப் பயணம் போவது என்று முடிவு செய்தபோது உடன் சத்திரத்தில் வசித்த நண்பர் ஒருவர் மூலம், பாபுமாயி என்ற யோகினியைப் பற்றி அறிந்தார். அவரின் ஆசி பெற்றுப் புறப்படலாம் என்று முடிவு செய்தவராய் அவரைத் தேடிச் சென்றார்.

பெண் சித்தர் பாபுமாயி
பாபுமாயி ஒரு பெண் சித்தர். அழுக்கடைந்த துணிகளுடன், சிக்குப் பிடித்த தலைமுடியுடன் காட்சி அளிப்பார். அழுக்கு துணி ஒன்றில் மூன்று கட்டைகளை முடித்து வைத்திருப்பார். யாத்ரீகர்களிடம் ஒரே ஒரு காசு மட்டும் யாசிப்பார். அந்தக் காசுகளை மொத்தமாகச் சேர்த்து அவ்வூரில் உள்ள சந்திரபாகா நதியில் விட்டெறிந்துவிடுவார். பெரும்பாலும் சுடுகாட்டிலேயே தங்குவார்.

யோகினி பாபுமாயியைத் தேடிச் சென்ற நரசிம்ம சுவாமி, விட்டலர் ஆலயம் அருகே அவரைக் கண்டார். அவரைப் பின்தொடர்ந்து சென்றார். தன்னைப் பின் தொடர்வதைக் கவனித்த யோகினி, "ஏன் என்னைப் பின் தொடர்கிறாய், நீ யார்?" என்று கேட்டார். தான் ஒரு வழிப்போக்கன் என்றும், தனக்குப் போக்கிடம் ஏதும் இல்லை என்றும் நரசிம்ம சுவாமி பதில் சொன்னார். உடனே யோகினி, "நான் சுடுகாட்டிற்குச் செல்கிறேன்" என்றார். நரசிம்ம சுவாமியோ பதிலுக்கு "எனக்கு எந்த அச்சமும் இல்லை. நானும் வருகிறேன்" என்றவாறே பின் தொடர்ந்தார்.

வந்தது யார்?
யோகினி வழக்கம்போல் சந்திரபாகா நதிக்குச் சென்று தன்னிடம் இருந்த காசுகளை எல்லாம் நதியில் போட்டுவிட்டு, "அம்மா இதை பத்திரமாகப் பார்த்துக்கொள்" எனக் கூறினார். பின் அவ்வூர்ச் சுடுகாட்டை அடைந்தார். அங்கு சென்றதும் நரசிம்ம சுவாமியைப் பார்த்து "உனக்குப் பசிக்கிறதா?" என்று அன்புடன் கேட்டார். சுவாமிகள் "ஆம்" என்று சொல்லவும், யோகினி தலையை அசைத்தார். உடன் திடீரென எங்கிருந்தோ ஒருவர் சாதம், பருப்பு, சப்பாத்தி, இனிப்பு போன்ற பல பண்டங்களைக் கொண்டு வந்து யோகினி முன் வைத்தார். யோகினி அவற்றை உண்ணுமாறு நரசிம்ம சுவாமியிடம் சொன்னார். வியப்பு மாறாமல் அவற்றை உண்டார் நரசிம்ம சுவாமி. அவர் சாப்பிட்டு முடித்ததும், வந்த மனிதர் சென்றுவிட்டார்.

அதைக் கண்டு நரசிம்ம சுவாமி ஆச்சரியப்பட்டார். யார் இவர், எங்கிருந்து இவ்வளவு உணவு வகைகளைக் கொண்டு வந்தார் என்று கேட்க நினைத்தார். அதற்குள் யோகினி, நரசிம்ம சுவாமியிடம், "இப்போது உனக்குத் திருப்தியா, வேறென்ன வேண்டும்?" என்று கேட்டார்.

அதற்கு நரசிம்ம சுவாமி, "எனக்குக் கடவுளைக் காண வேண்டும்" என்றார்.

யோகினி சிரித்தவாறே, "சரிதான். நீ என்னப்பா இவ்வளவு முட்டாளாக இருக்கிறாய்! இப்போதுதானே உனக்கு விட்டோபாவே வந்து உணவு தந்துவிட்டுப் போனார். நீயும் உண்டாய். ஆனாலும் அவரை உன்னால் அடையாளம் காண முடியவில்லையே! இந்த இடத்தில் பகவான் விட்டோபவைத் தவிர வேறு யாரப்பா வந்து உனக்கு உணவு தர முடியும்?" என்றார்.

திகைத்துப் போனார் நரசிம்மசுவாமி. விட்டோபா வந்தும் அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று வருந்தினார். யோகினி அவரைத் தேற்றினார். "மகனே, கவலைப்படாதே . இந்தப் பரந்த உலகத்தில் அனைத்து இடத்திலும், எங்கும் நீக்கமற நிறைந்து வியாபித்துள்ள கடவுளைக் காண உனக்கு இன்னமும் நேரம் வரவில்லை. உன்னுடைய வருகைக்காக உனது குரு வட நாட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார். அங்கு போ. அவரே உனக்கு வழி காட்டுவார்" என்று கூறி ஆசிர்வதித்தார்.

யோகினியை வணங்கி விடைபெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார் நரசிம்ம சுவாமி.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com