அந்தரங்கம்
அன்று முழுவதும் சாவித்திரிக்கு ஒரே உற்சாகம்; சாதாரணமாக, நாணமும், அடக்கமான சுபாவமும் உடைய அவள், பள்ளி செல்லும் சிறுமிபோல, அவ்வளவு குதூகலத்துடன் விளங்கினாள். சின்னஞ்சிறு புள்ளினங்களின் இன்பகரமான கீதத்தைப் போன்ற சிறு சிறு பாட்டுக்கள் அவள் நெஞ்சில் பொங்கி எழுந்து, உருக்கமான, மெதுவான இசைத் துண்டுகளாக வெளிவந்தன. அவள் மாமியார் தன் பெண்ணுடன் ஒரு பதினைந்து நாள் தங்கியிருக்கச் சென்றிருந்தாள். ஆக, சாவித்திரிக்கு வீடும் சரி, புருஷனும் சரி, அப்போது ஏக போக உரிமை!

பிரகதீச்வரனுக்கும், சாவித்திரிக்கும் கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகிறது. கல்யாணம் நடந்து, மணக்கோலத்தில் பிள்ளையும், பெண்ணும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓர் உள்ளூர்ப் பத்திரிகையின் விளம்பரப் பத்தியில் வெளிவருவது இப்போது வெகு சகஜம். இவர்களுடைய கல்யாணம், சாந்தி கல்யாணம் இரண்டுமே இந்த விதத்தில் நடக்கவில்லை. நாதசுரக்காரரின் இன்னிசை, புரோகிதர்களின் மந்திர கோஷம், பாராட்ட வந்திருக்கும் நண்பர்கள், உறவினர் ஆகியோர் அளிக்கும் கல்யாணப் பரிசுகள் முதலிய அம்சங்களுடன் பழைய, வைதீக முறையிலேதான் நடைபெற்றது. இந்த விதத்தில் அவர்களுக்கு விவாகமும், பின்னர் சாந்தி கல்யாணமும் நடந்தேறின. இருவருடைய தேக வனப்பினாலும், வலுவுணர்வினாலும் உண்டாகும் முற்றும் சரீர சம்பந்தமான பரிவு உணர்வைக் கொண்டு, ஒருவருக்கொருவர் இளமையின் பூரண இன்பத்தையும் வழங்கிக்கொண்டனர். சாவித்திரியோ, தன்புருஷனுடன் கூட இருக்கும் அந்த அற்புதமான வேளைகளில், சூரியனைக் கண்ட சூரிய காந்திப் புஷ்பம்போல் விளங்கினாள்; புலனறிவுக்கு அதீதமான அதிசய உலகங்களையெல்லாம் எட்டிப் பிடித்தாள். விசித்திரமான ஒருவித பார்வையுடன் புருஷனைப் பார்த்து, மனத்துக்குள்ளேயே விஷமத்தனமாகச் சிரித்துக்கொண்டாள். அவனையும் அவனுடைய விசித்திரப் பழக்க வழக்கங்களையும் நையாண்டி செய்தாள்; மொத்தத்தில், ஏதோ ஒரு மந்திர சக்தியில் கட்டுண்டவளைப் போலத் தோன்றினாள்.

பிரகதீச்வரன், பாவம், திகைத்துப் போய்விட்டான். மனைவியிடம், "என்ன, இன்றைக்கு உனக்கு ஒரே குஷி?" என்று கேட்டான்.

"எப்போதும் எனக்குக் குஷிதான்; இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லையே!"

"பொய், பொய்! நிஜத்தைச் சொல்லு."

இதற்குப் பதிலாக, அவள் இன்னும் விஷமத்தனமாகச் சிரித்தாள்; அவன் கன்னத்தில் மெதுவாகத் தட்டிக்கொண்டே, காதோடு ரகசியம் பேசினாள். "இன்று ராத்திரி, உங்களுக்கு ரகசியம் தானே தெரியவரும். மனைவிகள், தங்களுடைய உள்ளத்தின் அந்தரங்கத்திலே இருப்பதைச் சொல்வது கிடையாது. பெண்களுக்குத் தெய்வம் கொடுத்த வரப்பிரசாதமாக, அவர்களுக்கு ஒரு காப்புக் கவசம் இருக்கிறது. ஆனால், உங்களுடைய வெள்ளை மனமும், குன்றாத காதலும், அந்தக் கவசத்தில் ஒரு விரிசலை ஏற்படுத்தி விட்டன."

பிரகதீச்வரனுக்கு இதெல்லாம் ஒரே மர்மமாகத் தோன்றியது. "அப்போது, என்னுடைய குன்றாத காதலையும், வெள்ளை மனத்தையும் உணர, உனக்கு இரண்டு வருஷம் பிடித்ததாக்கும், பாசாங்குக் கள்ளி!" என்றான்.

வெகு அமர்த்தலாக அவள் தலையை அசைத்தாள்.

சூர்ய அஸ்தமனத்தில் மட்டுமே பூரண வனப்பும், பிரகாசமும் நிறைந்து விளங்குகின்றன சில மலர்கள்: அந்திமல்லி இந்த வகையைச் சேர்ந்தது; காடுகளில், இரவு நேரங்களில் பளபளவென்று மின்னும் கண்களை உடைய புலிகளும் இருக்கின்றன அல்லவா? ஸ்திரீகளுக்கும் இரவு நேரத்தில்தான் ஆதிக்க சக்தி அதிகம்; இரவுக்கு அவர்கள் அதிதேவதைகள். எவ்வளவுக்கெவ்வளவு கற்புப் பண்பு அதிகமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களுடைய கம்பீரத் தன்மையும் அதிகப்படுகிறது. கறுப்புநிற 'வெல்வெட்'டின் பின்னணியிலே தான் ரத்தினத்தின் கண்ணைப்பறிக்கும் பிரகாசம் நூறு மடங்காகிறது. அதேபோல ஸ்திரீ ரத்தினங்கள், அவர்களுடைய மனத்துணிவிலும், கூச்சமற்ற தன்மையிலும், வேட்கையின் பல்வேறு நிலைகளிலும், பொற்கொல்லனின் அருங்கலையை நினைப்பூட்டுகின்றனர். சாவித்திரி, பொற்கொல்லனின் அந்த அருங்கலையைப் பெற்றிருக்கவில்லை. சூரிய அஸ்தமனத்திலே பூரண வனப்பையும், பிரகாசத்தையும் பெறும் அபூர்வ புஷ்பம் அவள்.

அவர்கள் மேல்மாடியில் இருந்தார்கள்; அவன் உடம்பை நீட்டிக்கொண்டு, சந்திரனைப் பார்த்தவாறு படுத்திருந்தான். கிராமாந்தரப் பிரதேசங்களுக்கும், பட்டணத்தின் சந்தடிகளுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டும் குளிர்மையான இந்த வெள்ளி உலகின்பால், எப்போதுமே அவனுக்கு ஓர் அலாதிக் கவர்ச்சி உண்டு; அவள், அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்; அவள் மடியில் அவர்களுடைய ஆண் குழந்தை படுத்திருந்தது. அந்தச் சிறுவன் தூங்கிப்போயிருந்தான்.

அவன், அவளுடைய முகத்தைப் பார்த்து, புன்சிரிப்புச் சிரித்தான். "சாவித்திரி, ரகசியத்தை இன்னும் ஒரு நிமிஷம் நிறுத்தி வை. என் இன்பத்துக்கெல்லாம் காரணமான இந்த அற்புதச் சந்திரனுக்கு நான் எவ்வளவு கடமைப்பட் டிருக்கிறேன், தெரியுமா?"

"ஆமாம்" என்று, அவனைக் கவர்ந்திழுக்கக் கூடிய விதத்தில் பார்த்துக்கொண்டே கூறினாள் அவள். அவளுடைய வசீகரம் அவனை மயக்கியது; அவள் தொடர்ந்து கூறினாள்: "சந்திரனுக்கு மட்டுமா? அல்ல, அல்ல. வாசனைத் தைலம் தயாரிக்கும் யாரோ ஓர் ஆசாமி, உங்கள் சகோதரி, தன் வாழ்வின் இன்பத்தையே ஒருமுறை பணயம் வைத்திருந்த ஓர் இளம்பெண் ஆகியோருக்கும்தான்."

அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். கேள்வி கேட்கும் பாவனையில்.

"அட, அசட்டுப் பிராமணா! சாந்தி கல்யாண இரவில், வெளியில் கணவன் அவளை எப்படி நெருங்குவது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் போது, எந்தப் பெண்ணாவது தூங்க நினைப்பாளா? நீங்கள் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பினதாகத்தானே நினைத்தீர்கள்?"

"அடி போக்கிலிக் கழுதை! பின்னே, நான் என் தலையணைகளை எடுத்துப்போக வந்தபோது நீ தூங்கிக்கொண்டிருக்கவில்லை, இல்லையா?"

வாசனையும், தாபமும் நிறைந்து விளங்கிய அந்த இரவு, அவனுடைய வாழ்க்கையிலேயே மகத்தானதான அந்த இரவு, அவனுடைய மனத்திலே பளிச்சிட்டது - பட்டப்பகலைப் போல்.

"ஆமாம்; நான் தூங்கவே இல்லை. நீங்கள் வெளியே போனபோது, சீக்கிரம் திரும்பி விடுவீர்களென்று எதிர்பார்த்து, கதவண்டையிலேயே நின்றிருந்தேன். நீங்களோ, ஏதோ இந்தியாவின் தலைவிதியையே நிர்ணயிக்க வேண்டி வந்ததைப் போல் மேலும் கீழுமாக உலாத்திக் கொண்டேயிருந்தீர்கள்; கொஞ்ச நேரத்தில் நான் ‘சோபா’ அண்டை போய், அதில் உட்கார்ந்துகொண்டேன்.எவ்வளவு நேரமென்று எனக்கே தெரியாது. சீக்கிரம், நான் விசித்து விசித்து அழ ஆரம்பித்துவிட்டேன். உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ, நீங்கள் என்னை விரும்பவில்லையோ, அல்லது உங்கள் கல்லூரியைச் சேர்ந்த எந்தப் பெண்ணையாவது காதலித்து, என்னைத் தொலைத்துத் தலைமுழுக முயலுகிறீர்களோ... என்றெல்லாம் எண்ணினேன். திறந்த வெளிக்கு வந்துவிடக்கூட நினைத்து, கதவு வரையிலும் வந்தேன். ஆனால், கடைசி நிமிஷத்தில் என் தைரியம் பறந்தோடிப் போயிற்று. எனக்கு என்னதான் நேரப்போகிறது என்று தெரியாமல், அவ்வளவு தூரம் நான் மனம் நொந்து போனேன். உங்கள் சகோதரி - ஆஹா! அவள் எவ்வளவு அருமையானவள்! என்னை எவ்வளவு பிரியத்துடனும், பட்சத்துடனும் நடத்தினாள்! அவள் உங்களுடைய பைத்தியக்காரத்தனமான போக்குகளைப் பற்றி என்னை எச்சரித்து, அவைகளைப் பொருட்படுத்த வேண்டாமென்றும் சொல்லியிருந்தாள்.

ஆனாலும் என்னால் இந்த நிலைமையைச் சகிக்க முடியவில்லை. நீங்கள் எப்போதாவது உள்ளே வரத்தான் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்களோ, உள்ளே வந்து, நான் விழித்துக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டால், என்னுடன் பேச வேண்டி வரும். அதைத் தவிர்ப்பதற்காக, மறுபடியும் வெளியில் போய்விடுவீர்களோ என்றும் பயந்தேன். என்னுடைய கடைசி நம்பிக்கையும் அப்போது போய்விடும். ஆகையால் விளக்கைச் சிறிதாக்கிவிட்டு, உங்களைக் கவனித்துக்கொண்டே படுக்கையில் கிடந்தேன். உங்கள் சகோதரி, உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வாசனைத் தைலத்தைக் கொடுத்திருந்தாள். நான், கையோடு கொண்டுவந்திருந்த ஒரு சிறிய கண்ணாடியைத் தலையணைக்கு அடியில் மறைத்து வைத்திருந்தேன். முகத்திலும், தலையிலும் தைலத்தைத் தடவிக் கொண்டு காத்திருந்தேன்.

அறைக்குள் நிலவு புகுந்தபோது, கண்ணாடியின் மூலமாக நான் உங்களைக் கவனித்தேன். ஒருமுறை நீங்கள் அறைக் கதவுப் பக்கம் வரப் பார்த்தீர்கள்; நீங்கள் திரும்பிச் சென்றவுடன் நான் எழுந்து விளக்கை ஊதி அணைத்தேன். மறுபடியும் படுத்துக் கொண்டு உங்களை இன்னொரு முறை உள்ளே வரச் செய்யும்படி தெய்வத்தைப் பிரார்த்தித்துக்கொண்டேன். உங்கள் தலையணையோடு கொஞ்சம் ஒட்டிச் சேர்ந்திருக்கும்படி என் தலையை வைத்துக்கொண்டேன். கடைசியாக நீங்கள் அறைக்குள் நுழைந்தபோது, ஆழ்ந்து தூங்குவதாகப் பாசாங்கு செய்துகொண்டே, பாதி மூடிய கண்களால் உங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன். நீங்களோ மேலே போட்டிருந்த அங்கவஸ்திரத்தை எடுத்துச் சோபாவில் வைத்ததைப் பார்த்ததும், நீங்கள் படுக்கைக்கு வரவில்லை என்று கண்டுகொண்டேன். எனக்கு அழுகை அழுகையாய் அப்படியே பீறிட்டுக்கொண்டு வந்தது; நெஞ்சு அடைத்துக்கொண்டது; மடை திறந்த வெள்ளம்போல் பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக்கொண்டேன். அப்படியிருந்தும் ஒரு கணம்கூட உங்களை விட்டு என் பார்வையை அகற்றவில்லை. நம்பிக்கையெல்லாம் இழந்துவிட்ட போதிலும், தலைப் பின்னலையும், கழுத்துச் சங்கிலியையும் சரிப்படுத்திக் கொண்டேன். முகத்தையும் உடம்பையும் நிலவொளி படும்படி வைத்துக்கொண்டேன். இதயத்தின் துடிப்பை என்னால் அடக்கக் கூடவில்லை. அது அடிக்கும் படபடப்புச் சத்தம் உங்களுக்குக் கேட்டுவிடுமோ என்று கூடப் பயந்தேன்.

தலையணையை எடுத்துச் செல்வதற்காக நீங்கள் திரும்பி வந்தபோது, உடம்பை அசையாமல் இருக்கச் செய்து, ஓர் ஆட்டுக் குட்டி மாதிரி அசங்காமல், சாதுவாய்ப் படுத்துக் கிடக்க நான் எவ்வளவோ சிரமப்பட வேண்டியிருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டேன். ஆனாலும், உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் என்னால் உணர முடிந்தது. நீங்கள் படுக்கையில் உட்காரும் சப்தம் காதில் விழுந்தது. உங்கள் கண்ணுக்கு நான் ஓர் அழகியாகப் படவேண்டுமென்று என் குல தெய்வங்களை யெல்லாம் எவ்வளவோ உருக்கமாக வேண்டிக் கொண்டேன். அதுதான் என்னுடைய கடைசி வாய்ப்பு. நீங்கள் என்மேல் குனிந்து சாய்ந்தபோது என் தெய்வம் உங்களைத் தன் வசப்படுத்திக் கொண்டுவிட்டது என்பதையும், என் கையில் சிக்கிக் கொண்டீர்களென்பதையும் அறிந்துகொண்டேன். உண்மையிலேயே என் மனம் அமைதி பெற்றது; அப்போதும், அவ்வளவு சீக்கிரத்தில் கண்ணைத் திறந்துவிடக் கூடாது என்று தெரிந்திருந்தேன். என் உதட்டை நீங்கள் ஸ்பரிசித்தபோது, என் தேகத்தின் ஊடுபாய்ந்து ஓடிய புல்லரிப்பை நான் அமுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுபவள் போல், சரியான நேரத்தில் என் கண்ணைத் திறக்க வேண்டியிருந்தது. கண்ணைத் திறந்து, உங்களைப் பார்த்தபோது, இனி, இனி எப்போதுமே, நீங்கள் என்னுடையவர் என்பதை உணர்ந்துவிட்டேன்."

பிரகதீச்வரன் ஒரு நீண்ட பெருமூச்சு - வியப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த பெருமூச்சு - விட் டான். "அப்படியானால் அத்தனை நேரமும் நீ நடித்துக்கொண்டிருந்திருக்கிறாய், இல்லையா? பாசாங்குக் கள்ளி! உன்னை என் தயவில் வாழ்கிற, யோக்கியமான, குடும்பப் பெண் என்றல்லவா நினைத்தேன்!" என்றான்.

"உங்கள் தயவிலா?" என்று சொல்லி, அவள் சிரித்தாள். "அட, அப்பாவி மனுஷரே! முழுக்க முழுக்க என் தயவில் நீங்கள் இருந்திருக்கிறீர்களாக்கும்! நீங்கள் 'சோபா'வுக்குப் போயிருந்தால்கூட, நான் உங்களை என்னிடம் வருவிக்க முடிந்திருக்காதென்றா நினைக்கிறீர்கள்?"

"எப்படி?"

"எப்படியா?- எழுந்திருந்து விளக்கை ஏற்றுவேன். என் திறமையின் சிகரத்தை எட்டும் படியான ஒரு புன்னகை புரிந்த வண்ணம் உங்களண்டை வருவேன். அந்த நிலையை நீங்கள் சமாளித்திருக்க முடியுமென்றா நினைக்கிறீர்கள்?"

"இல்லை, என்னால் முடிந்திருக்காதுதான்!"

சாவித்திரி, குழந்தையைப் படுக்கையில் இருத்திவிட்டு, அதன் தலையைத் தன் மடியில் சாய்த்து வைத்துக்கொண்டாள். அன்பு கனிந்த பார்வையுடன் அதைப் பார்த்துக்கொண்டே, அதன் முகத்தை வருடியவாறு சொன்னாள்:

"இதோ பாருங்கள்! தொட்டிலை ஆட்ட வேண்டுமென்று இந்தக் கைகள் நிரம்பவும் துடிதுடித்தன."

தாழ்ந்த குரலில் ஏதோ ஒரு தாலாட்டுப் பாடிக்கொண்டே மெதுவாகச் சிரித்தாள். பிறகு, அவளுடைய முகம் அப்படியே இளகிப்போய் அவன் முகத்துடன் இணைந்து கலந்துவிடப் போவதுபோல், அவன் மீது அவள் குனிந்தாள்.

பிரகதீச்வரனோ பெண்ணினத்தின் முரண்பட்ட போக்கையும், ஆணினத்தில் உள்ள கலப்பற்ற ஆண் தன்மையை வழிபடுவதில் பெண்கள் கொண்டிருக்கும் குழைவான, நம்பிச்சார்ந்து நிற்கும் தன்மையான இயல்பையும் எண்ணி எண்ணி, சிந்தனையில் ஆழ்ந்து போனான்.

மஞ்சேரி எஸ். ஈச்வரன்
தமிழில்: தி.ஜ. ரங்கநாதன்

© TamilOnline.com