தமிழில் நேரடியாக எழுதாமலேயே, தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர் மஞ்சேரி எஸ். ஈச்வரன். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர் எனப் பல திறக்குகளில் இயங்கிய ஈச்வரனின் தாய்மொழி மலையாளம். மஞ்சேரி சுந்தர்ராமன் ஈச்வரன் என்னும் மஞ்சேரி எஸ். ஈச்வரன், ஜூன் 16, 1910-ல், தஞ்சாவூரில் பிறந்தார். தந்தையின் பணி நிமித்தம் கேரள மாநிலம் மஞ்சேரியில் வளர்ந்தார். அங்கு பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். டாக்டர் வே. ராகவன், எ. சலபதிராவ் ஆகிய சம்ஸ்கிருத அறிஞர்களை முன்னோடியாகக் கொண்டார்.
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் அறிந்த ஈச்வரன் பணிக்குச் செல்வதை விரும்பவில்லை. சுதந்திர எழுத்தாளராக இயங்கினார். அவருக்கு மிகவும் இயல்பான மொழியாக ஆங்கிலம் இருந்ததால் அம்மொழியிலேயே எழுதினார். இவரது படைப்புகள் அக்காலத்தின் புகழ்பெற்ற இதழான திரிவேணியில் தொடர்ந்து வெளியாகின. கி. சந்திரசேகரன், நா. ரகுநாதய்யர் ஆகியோரின் நண்பராக இருந்தார். அவர்களது ஊக்கத்தால் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதினார். காசா சுப்பாராவின் நட்புக் கிடைத்தது. சுப்பாராவ் நடத்தி வந்த 'ஸ்வதந்த்ரா' இதழில் தொடர்ந்து எழுதினார். அவ்விதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார்.
மஞ்சேரி ஈச்வரனுக்கு, தமிழ் நாவலாசிரியரும், ஆங்கிலத்தில் நாவல்களும் கதை, கட்டுரைகளும் எழுதி வந்த கா.சி. வேங்கடரமணியின் நட்பு கிடைத்தது. கவிதைகளையே அதிகம் எழுதி வந்த ஈச்வரனை, வேங்கடரமணி, சிறுகதைகள் எழுதத் தூண்டினார். ஈச்வரனின் முதல் சிறுகதையான 'ட்ராம்வண்டிக்காரன்' டிசம்பர் 15, 1933 தேதியிட்ட சுதந்திரச்சங்கு இதழில் வெளியானது. கா.சி. வேங்கடரமணி, மஞ்சேரி ஈச்வரனின் சிறுகதைகளை வே. ராகவனைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்துத் தனது 'பாரதமணி' இதழில் வெளியிட்டார். அக்கதைகளைக் கண்டு வியந்த தி.ஜ. ரங்கநாதன், ஈச்வரனின் நண்பரானார். சக்தி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவந்த ரங்கநாதன், ஈச்வரனைத் தொடர்ந்து எழுதத் தூண்டினார். ஈசவரன் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளைத் தானே தமிழில் மொழிபெயர்த்து சக்தி இதழில் வெளியிட்டார்.
சிறுகதைத் தொகுப்புகள் கொலு, சிங்காரி , ராஜகுமாரியின் தீபாவளி
ஈச்வரனின் சிறுகதைகள் அக்காலத்தில் கற்றறிந்த சான்றோரால், சக எழுத்தாளர்களால் வரவேற்கப்பட்டன. குறிப்பாக ஈச்வரனின் ஆங்கிலச் சிறுகதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் கவித்துவமான நடைக்காகவும், செறிவான உள்ளடக்கத்திற்காகவும், தேர்ந்த மொழிக்காகவும் பாராட்டப்பெற்றன. ஈச்வரன், ஆங்கிலச் சிறுகதை ஆசிரியர்களோடு ஒப்பிடப்பட்டுப் புகழ்ந்துரைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் எழுதிய இந்தோ-ஆங்கில எழுத்தாள முன்னோடிகளுள் ஒருவராக மதிக்கப்பட்டார். ஈச்வரனின் கவிதை நூல்கள் கேரளக் கல்லூரிகள் சிலவற்றில் பாட நூலாக இடம்பெற்றன.
'Saffron and Gold and Other Poems' என்பது மஞ்சேரி ஈச்வரனின் முதல் கவிதைத் தொகுப்பு. தொடர்ந்து எட்டுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. 'Naked Shingles' என்பது ஈசவரனுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகின. தமிழில் வெளியான ஈச்வரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'கொலு'. 1944ல் சக்தி காரியாலயம் இதை வெளியிட்டது. தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள், நாடகங்களை ஈச்வரன் எழுதினார். புதுமைப்பித்தன் மறைவையொட்டி ஈச்வரன் எழுதிய அஞ்சலிக் குறிப்பு, புதுமைப்பித்தனை மிகச்சரியாக மதிப்பீடு செய்து எழுதப்பட்டிருந்தது. மஞ்சேரி எஸ். ஈச்வரன், வள்ளத்தோல், குமாரன் ஆசான் உள்ளிட்ட பலரது படைப்புகளை மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். 'Short Story' என்ற இதழின் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். லா.ச. ராமாமிர்தம் எழுதிய முதல் ஆங்கிலச் சிறுகதை அவ்விதழில் தான் வெளியானது.
மஞ்சேரி ஈச்வரன் திரைப்படங்களிலும் பங்களித்தார். 1938-ல் வெளியான, நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட 'ஜலஜா' என்ற திரைப்படத்தின் கதை வசனத்தை டாக்டர் வி.ராகவன் மற்றும் ஜி.கே. சேஷகிரியுடன் இணைந்து எழுதியிருந்தார். படத்தை ஜி.கே.சேஷகிரி மற்றும் ஆர்.ஆர்.கௌதம் இணைந்து இயக்கியிருந்தனர். ஈச்வரன் இப்படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். ஈச்வரனின் மகத்தான படைப்பாக 'Immersion' என்ற நீண்ட சிறுகதை போற்றப்பட்டது. அது சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், 1979ல் 'நிமஜ்ஜனம்' (Nimajjanam) என்ற தலைப்பில் தெலுங்கில் திரைப்படமாகவும் வெளியானது. ஜனாதிபதியின் பரிசையும் பெற்றது.
ஈச்வரனின் படைப்புகள் இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கும் பிந்தைய காலனித்துவ சகாப்தத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டன. இவரது பல்வேறு கவிதைகளும் சிறுகதைகளும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் வேதனையையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுதுவனவாக அமைந்திருந்தன. சாதி அமைப்பையும், பிராமண விதவைகளின் அவலத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் தனது படைப்புகளில் விமர்சித்து எழுதியிருந்தார். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும், இவரது பெரும்பாலான கதைகள் தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டவை. அன்றைய உயர்மத்திய வர்க்க மக்களின் மனோநிலையைப் பிரதிபலிப்பவையாகப் பல படைப்புகள் இருந்தன. “தமிழனின் உணர்ச்சிகளைப் பிரதிபலித்து கவிதா சக்தியுடன் தமிழ்நாட்டுக் காட்சிகளை வர்ணிக்கும் அற்புதமான பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்” என்று மஞ்சேரி எஸ். ஈச்வரனைத் தி.ஜ. ரங்கநாதன் மதிப்பிடுகிறார்.
ஆங்கில நூல்கள் Naked Shingles, Saffron and Gold and Other Poems, The Neem is a Lady and Other Poems, Sinning Heaven and Other Poems, Yama and Yami, Song of the Gipsy maiden, S. Venkataramani: Writer and Thinker-An Appreciation, Angry Dust, Ricksha wallah, Fancy Tales, No Ankletbells for Her, Immersion, Painted Tigers, A Madras Admiral, A Stillness at Sunset, Sivaratri, Altar of Flowers, Catguts, Brief Orisons, The Fourth Avtar, Oblivion, Penumbra, And More
மஞ்சேரி ஈச்வரன் பிற்காலத்தில் புதுதில்லியில் உள்ள தேசியப் புத்தக அறக்கட்டளையின் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) செயலாளராகவும் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். மனைவி அன்னபூர்ணா ஈச்வரனும் ஓர் எழுத்தாளர். 'விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள்' உள்ளிட்ட பல நூல்களை அவர் எழுதியுள்ளார். மகன் பிரகாஷ் ஈச்வரன் பொறியாளர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
மஞ்சேரி எஸ். ஈஸ்வரன், டிசம்பர் 12, 1966-ல், காலமானார்.
அரவிந்த் |