ஜூலை 2023: வாசகர் கடிதம்
தென்றல் பேசிய செங்கோலும்
நன்றே எழுத்தாளர் சீனுவாசனும்
பாகீரதியம்மாள் நேர்காணலும்
பாலைவனச்சோலை இளந்தென்றலும்

பகையும் நட்பும் சிறுகதையும் - நம்
பாபா அவர்தம் சின்னக்கதையும்
சாதனை மாதவன் கோபியையும்
சமயத்தில் பிரம்மதேச ஆலயமும்

அமரர் காரைக்குடி மணி அஞ்சலியும்
நமது கதிரவனைக் கேட்ட மூலதனமும்
முத்தமிழ் இதழ் இத்திங்கள் தென்றலில்,
எத்திக்கும் புகழ் மணக்க வீசிடுதே .

அமெரிக்க மண்ணதனில் அழகுறவே
அழகான தென்றல் இதழ் வடிவமைத்து
ஆண்டுபல தொடரும் பணி ஆற்றிவரும்
ஆசிரியர் குழுவினருக்கு என் வணக்கம்

பாவலர் தஞ்சை தர்மராசன் (B.Lit; M.A., B.Ed.),
பால்வின், மிசௌரி

★★★★★


மே மாதத் 'தென்றல்' இதழில் பலரது படைப்புக்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் நேர்காணல் சிறப்பு.

ஜூன் இதழில் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவைப் பற்றிய தலையங்கம் மிகவும் சிறப்பானது. பாகீரதி சேஷப்பன் நேர்காணல் படித்தேன். அவர்களது நாடகங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். மிகவும் சிறப்பானவை. பல ஜாம்பவான்கள் நடிக்க முயற்சித்த, கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைச் சரியாக, சுருக்கமாக, தைரியமாக முதன்முதலில் நாடகமாக்கி ரசிகர்களை மகிழ்வித்த சாதனையாளர் அவர். விரிகுடாப் பகுதியையே ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கவைத்த பெருமை பாகீரதி சேஷப்பன் அவர்களைச் சேரும்.

வருடங்கள் பல கடந்தாலும் இன்றுவரை பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் வேடத்தில் நடித்தவரைச் சந்திக்கும்போது அந்தப் பெயரிலேயே அவரிடம் பேசுவேன். அந்த அளவிற்கு அதில் நடித்த அத்தனை நண்பர்களும் அந்தந்தக் கதாபாத்திரங்களை மனதில் இருத்தி அதியற்புதமாக நடித்தனர் என்றால் மிகையாகாது. பகீரதப் பிரயத்தனம் என்பது இவருக்கும், இவர் பெயருக்கும் உள்ள பெரிய ஒற்றுமை. அவரைப்பற்றி மேலும் அறிய உதவியதற்கு மிக்க நன்றி.

சாதனையாளர் மாதவன் கோபி கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com