தமிழ் விக்கி - தூரன் விருது
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில், கவிஞர், எழுத்தாளர், ஆய்வியல் அறிஞர் பெரியசாமித்தூரன் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையான பெரியசாமித்தூரனின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இவ்விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐம்பது வயதுக்கு உட்பட்ட, பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்தப் பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருது, ரூபாய் இரண்டு லட்சமும், சிலையும் அடங்கியது.

சென்ற ஆண்டு (2022) இவ்விருது ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர், ஆய்வாளர், முனைவர் மு. இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் மு. இளங்கோவன் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார். தமிழறிஞர்களின் வாழ்க்கையை, இசைக் கலைஞர்களின் வரலாற்றைத் தேடிப் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். பாரதிதாசனின் படைப்புகள் அதிகம் வெளிவந்த பொன்னி இதழ்களைத் தொகுத்துள்ளது இவரது மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பணியாகும். கணினித் தமிழ் வளர்ச்சிக்கும் மு. இளங்கோவன் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்த மு. இளங்கோவன் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இவ்வாண்டில், சிறப்பு விருதாக ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.ஜே. சிவசங்கருக்கும் தமிழ்விக்கி - தூரன் விருது வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. சிவசங்கர் மொழிபெயர்ப்பாளர், சிறுகதையாசிரியர். ஆய்வாளராகக் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மு. இளங்கோவன், எஸ்.ஜே. சிவசங்கர் இருவருக்கும் தென்றலின் வாழ்த்துக்கள்

© TamilOnline.com