பகவானைப் போற்றிப் புகழவென உங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, உடல், புலன்கள், புத்தி, சித்தம் ஆகியவற்றையும் அவரது சேவைக்கு இன்றியமையாத கர்மேந்திரியங்களையும் ஞானேந்திரியங்களையும் நீங்கள் மதிப்பீர்கள். மற்றவர்கள் கர்வத்தின் போதையில் இருக்கும்போது, பக்தன் பிரேமையின் (களங்கமற்ற அன்பின்) போதையில் இருப்பான். தெய்வீக இடையன் புல்லாங்குழலை இசைத்தபோது, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், ஏன் பிருந்தாவனத்தின் மாடு கன்றுகளும்கூட அவனது தெய்வீக நாதத்தின் தவிர்க்க முடியாத ஜாலத்தால் ஈர்க்கப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த நாதம் மகிழ்ச்சி, துக்கம் என்று நாம் அழைக்கும் அனைத்துக் கொந்தளிப்புகளையும் அமைதிப் படுத்திவிடும்.
கோபியரும் கோபாலரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். தெய்வத்தின் சன்னிதியை அடைவதைத் தவிர வேறெந்த எண்ணமும் அவர்களுக்கு இருக்கவில்லை. கால்நடைகள் மேய்வதை நிறுத்தின. கன்றுகள் பால் குடிப்பதை நிறுத்தின.
கிருஷ்ணர் மற்றும் கோபியர்களின் கதை ஓர் ஆழமான உட்பொருளைக் கொண்டது. பிருந்தாவனம் என்பது வரைபடத்தில் ஒரு திட்டவட்டமான இடம் அல்ல, அது இந்தப் பிரபஞ்சமே. மனிதர் அனைவரும் மேய்ப்பர்கள்தாம். எல்லா மிருகங்களும் பசுக்கள்தாம். ஒவ்வோர் இதயமும் பிரபுவுக்கான ஏக்கத்தால் நிறைந்திருக்கிறது.
புல்லாங்குழல் என்பது இறைவனின் அழைப்பு; ராசக்ரீடை என்பது பாலகிருஷ்ணன் கோபியருடன் ஆடிய விளையாட்டு நடனம். இதில் பகவான் கிருஷ்ணர் நிலவொளியில் ஆய்ச்சியருடன் நடனமாடுவதாக விவரிக்கப்படுகிறார். நடனமாடும் ஒவ்வொரு கோபிகையும் ஒரு பாலகிருஷ்ணனைக் கொண்டுள்ளார்; இது அவரது சன்னிதியை அடைவதை நோக்கமாகக் கொண்டவர்கள் சுமக்கின்ற ஏக்கம் மற்றும் தாபத்தின் அடையாளமாகும். உங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு பிரபு இருக்கும் அளவுக்கு அப்பேர்ப்பட்ட கருணையை அவர் வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் பெறும்போது, உங்களோடு அவர் இல்லை என்று வருத்தப்பட வேண்டியதில்லை. என்னுடன் இருக்கிறார், அதே நேரத்தில் வேறு யாருடனும் இல்லை என்று நீங்கள் பெருமைப்படவும் தேவையில்லை!
படைத்தவர் உங்கள் இதய பீடத்தில் குடியேறி இருக்கிறார்.
(சனாதன சாரதி, ஏப்ரல் 2023
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |