பாலைவனச் சோலை (அத்தியாயம் 7)
மறுநாள் அருண் அதிகாலையிலேயே எழுந்து விட்டான். இரவில் அம்மா போன பின்னர் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. எப்படியாவது அம்மாவிடம் செய்தித்தாளில் பார்த்த விடுதி குறித்த விளம்பரம் ஒரு மோசடி என்று நிரூபிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

மணியைப் பார்த்தான். பள்ளிக்கூடம் கிளம்ப இன்னும் 2 மணி நேரமாவது இருந்தது. அவன் அவசரப்பட வேண்டியதில்லை. காலைக் கடன்களை படபடவென்று முடித்தான். தனது அறையிலேயே ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.

அதில் என்னென்ன அந்த வாரத்தில் செய்யவேண்டும் என்று எழுத ஆரம்பித்தான். To-do list என்று சொல்வார்களே, அதுதான். அம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்காதவன், அன்று ஏதோ கர்மவீரன் போலச் செயல்பட்டான்.

பட்டியல் போட்டான்.
1. சீக்கிரமாக வீட்டுப்பாடம் முடிக்க வேண்டும்.
2. இந்த வாரத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்.
3. சந்தேகத்துக்குரிய விளம்பரம் குறித்து ஆராய வேண்டும். (எப்படி? யாரைக் கேட்பது?)
3.அ. தினமும் கொஞ்ச நேரம் ஆராய வேண்டும். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம். (கூகுள் தேடலா? உள்ளூர் ஆவணக் காப்பகத்திலா?)
3.ஆ. நண்பர்களிடம் பேசி அதிகத் தகவல் சேகரிக்க வேண்டும்.
3.இ. பொது வெளியில் விவாதம் தொடங்க வேண்டும். (கவனமாக, சாமர்த்தியமாக)

தனக்குத் தானே சபாஷ் சொல்லிக்கொண்டான். அவனுக்கு பாடங்கள் பற்றி அதிகம் கவலை இல்லை. எல்லாவற்றிலும் நன்றாகத்தான் செய்துகொண்டு இருக்கிறான். அவனது குறி எல்லாம் இந்தப் பட்டியலின் மூன்றாவது விஷயத்தின் பேரில்தான். எப்படியாவது மோசடி என்று நிரூபித்தாக வேண்டும். அவனுள் ஒருவன் இது சதி என்று குரல் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

பள்ளிக்கூட planner-ஐ எடுத்து அன்றைய வாரப் பள்ளிக்கூட வேலை எல்லாம் பண்ணிவிட்டோமா என்று பார்த்தான். தேவைப்பட்ட எல்லாம் முடித்திருந்தான். திருப்தியாக இருந்தது. வாரத் தேர்வுகளுக்கு ஒழுங்காகத் தயாரித்திருந்தான். இருந்தாலும் வீட்டில் கொஞ்சம் பிராக்டிஸ் செய்யவேண்டும் என்று எழுதிக்கொண்டான்.

'சந்தேகத்துக்குரிய விளம்பரம் குறித்து ஆராய வேண்டும். (எப்படி? யாரைக் கேட்பது?)' - மீண்டும் படித்துப் பார்த்தான்.

என்னதான் துப்பறியும் காரியங்கள் பலவற்றைச் செய்திருந்தாலும், அவை எல்லாம் எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்தவுடனேயே மோசடி என்று தெரிந்தது. அவனுக்கு உதவியும் எங்கிருந்தெல்லாமோ கிடைத்தது. இந்தத் தடவை அப்படி இல்லை. ஒரு சாதாரணமான விளம்பரத்தை மோசடி என்று சொல்லிவிட முடியாது. அதற்குத் தக்க ஆதாரம் வேண்டும். தப்பாகப் போனால் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்து விடுவார்கள். அம்மா அப்பாவுக்கு தேவையில்லாத தலைவலி ஆகிவிடும்.

இது மோசடின்னு உள்ளுணர்வு சொல்லுது. ஆனா என்ன ஆதாரம் இருக்கு? தப்பாச்சுன்னா செம அடி விழும் எனக்கு. தனக்குத்தானே பேசிக் கொண்டான். தனது நோட்புக் கணினியை எடுத்தான். அதில் கூகுளில் தேடினான்.

'Housing development in Earthampton dry lands.'

எதிர்பார்த்தபடியே பல தொடர்புகள் கிடைத்தன. பாதிக்குமேல் எல்லாம் sponsored links என்பார்களே அது. அதில் சிலவற்றை கிளிக் செய்து படித்ததில் ஆஹா ஓஹோ என்று எழுதப்பட்டிருந்தது. எப்படி ஒரு பாலைவனமாக இருந்த இடம் ஒரு சோலையாக மாறப்போகிறது என்று புகழ்ந்து இருந்தார்கள்.

ஏதாவது சுற்றுச்சூழல் கமிஷன் அறிக்கைகள், குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். ஒன்றுமே தென்படவில்லை. கட்டாயமாக இருக்கவேண்டும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். நிலப் பயன்பாடு சம்பந்தமான எந்த விஷயத்துக்கும் ஓர் அணுகுமுறை உண்டு. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்காமல் அனுமதி கொடுக்கவே மாட்டார்கள்.

வேறு விதமாகத் தேடினான்: 'environmental impact study on earthampton dry lands.'

அருண் எதிர்பார்த்தது போல சில விஷயங்கள் கிடைத்தன. அதில் ஒன்றை கிளிக் செய்யப் போனான். அப்பொழுது பார்த்து அலாரம் அடித்து, மணி 7.30 என்று நினைவூட்டியது. சாயந்திரம் பள்ளியிலிருந்து வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, அந்தப் பக்கத்தை bookmark செய்து கொண்டான். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு குளிக்கப் போனான்.

கொஞ்ச நேரம் கழித்து பள்ளிக்குப் போவதற்குத் தயாராக கீழே இறங்கி வந்தான். உடைகள் மிடுக்காக இருந்தன. தலையை நன்றாக வாரி இருந்தான்.

"குட் மார்னிங் கண்ணா. நல்லா தூங்கினயா? காலையில சீக்கிரமே எழுந்திட்ட போல இருக்கே?"

அருண் வேண்டிய சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு, ஜூஸ் இருக்கிறதா என்று ஃப்ரிட்ஜைத் திறந்து தேடினான்.

"கண்ணா…"

அம்மாவிடம் 'ஒரு நிமிடம்' என்று செய்கையால் காட்டினான். கீதா சிரித்துக் கொண்டார். அன்று என்னமோ திருஷ்டி படும்போல எல்லாமே ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. "சொல்லுங்கம்மா, இப்ப நான் ரெடி."சாப்பிட்டுக்கொண்டே அம்மாவிடம் பேசினான். மிகவும் புத்துணர்ச்சியோடு காணப்பட்டான். இன்னொரு பழக்கமும் புதிதாக இருந்தது அருணிடம். அவன் அன்று கையில் மொபைல் வைத்திருக்கவில்லை. எப்போதும் கையில் இருந்துகொண்டே இருக்கும் வஸ்து அது. கீதாவின் கேள்விகளை நன்கு கவனித்து பதில் சொன்னான்.

"என்ன கண்ணா, உன்னோட உயிர்த் தோழனைக் காணோம்?"கீதா புன்னகையோடு கண் சிமிட்டிக் கேட்டார்.

அருணுக்கு அவர் கேட்டது புரியவில்லை. சந்தேகக் குறியுடன் அம்மாவைப் பார்த்தான்.

"அதான் கண்ணா, எப்பவும் கையிலேயே இருப்பானே உன் உயிர்த் தோழன். அவனைக்கூட தட்டிகிட்டே இருப்பயே…"

அருணுக்கு அம்மாவின் சீண்டல் புரிந்தது. பதிலுக்கு அம்மாவைச் சீண்டினான்.

"அம்மா, ஓ அவனா, அவன் என் பையில இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கான். நான் பைக் ஓட்டும்போது என் கையில் மறக்காம வந்திருவான். இங்க இருந்தா உங்ககிட்ட பயம் அவனுக்கு."

"அப்படியா?"

சீண்டுதல் போதும் என்று தன் காரியத்திற்கு வந்தான். "அம்மா, நான் ஒரு திட்டம் போட்டு இந்த வறண்ட நிலத் திட்டம் பத்தி ஆராய்ச்சி பண்ணப்போறேன். என் திட்டம் நிச்சயம் வெற்றி அடையும்."

கீதாவுக்கு அவன் பேசியது மிகவம் பிடித்திருந்தது. அவன் தொடரட்டும் என்று காத்திருந்தார்.

"அம்மா, அந்த வறண்ட நிலப் பணித்திட்டம் பத்தி சுற்றுச்சூழல் கமிஷன் கண்டுபிடிப்பு இருக்குதான்னு தேடிப் பார்த்தேன். நான் எதிர்பார்த்ததுக்கு மேலாகவே நிறையக் கிடைச்சுது. அதை நான் ஆழப் படிச்சு தெரிஞ்சுக்கப் போறேன். விஷயத்தை நல்லாத் தெரிஞ்சுகிட்டு அப்பறமா நாலு பேருகிட்ட அதைப்பத்தி பேசப்போறேன். Knowledge is power, you know?"

கீதா அருண் முதுகில் செல்லமாகத் தட்டினார். "கண்ணா. நீ சொல்றது சரிதான்."

"கிடைக்கிற ஃப்ரீ டயத்துல நான் இதைப்பத்தி படிக்கப் போறேன். நான் தப்பாக்கூட இருக்கலாம். இந்தத் திட்டம் உண்மையிலேயே ஒரு நல்ல திட்டமாக, நம்ம ஊருக்கு நல்லது பண்ற திட்டமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் எனக்கு இது ஒரு கற்றல் அனுபவம் ஆகத்தான் இருக்கும்."

சாப்பிட்டு முடித்து, தட்டை அழகாகக் கழுவி வைத்தான். ஜூஸ் குடித்த கப்பையும் கழுவி, இரண்டையும் கவிழ்த்தான். அன்று நடந்த மாற்றத்தில் கீதா மெய் சிலிர்த்துப் போனார்.

"பை அம்மா. சாயந்திரம் பாக்கலாம்."

அருண் நிமிடத்தில் அங்கிருந்து காணாமல் போனான்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com