ஆனந்த தானா
ஜூன் 18, மாலை, சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி

கொடிது கொடிது வறுமை கொடிது.
அதனினும் கொடிது முதுமையில் வறுமை
அதனினும் கொடிது முதுமையில் தனிமை


முதுமையை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால் வறுமையையும் தனிமையையும் நீக்கி முதுமையை இனிமையாக்க உருவானது 'சென்னை ஆனந்தம்'.

சென்னை ஆனந்தமும், சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சதானந்தமும் இணைந்து நிதி திரட்டுவதற்காக நடத்திய கலை நிகழ்ச்சி ஜுன் 18, 2023 அன்று மாலை ஐசிசி, மில்பிடாஸ் அரங்கத்தில் இனிதே நிகழ்ந்தது. நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் பின்னணியைச் சற்றே பார்ப்போம்.

நடுத்தரக் குடும்பத் தலைவி பாகீரதி (இன்று பாகி அக்கா) பயணம். இருபது ஆண்டுகள் முன் தொடங்கியது.

அன்று மாதத்தின் முதல் நாள். வங்கியின் முன்னே காலை நாலு மணிக்கே பென்ஷன் வாங்க வரிசையில் நின்ற முதியோரின் நிலை பாகி அக்காவின் மனதைப் பிசைந்தது.

ஒரு முதியவரிடம் அவர் கேட்டார், "ஏன் இப்போதே இங்கு நிற்கிறீர்கள். பத்து மணிக்குதானே வங்கி திறக்கும்?"

"தெரியும் அம்மா. ஆனால் எங்க புள்ளைங்க பத்து மணிக்கு வந்து பென்ஷன் பணத்தைப் பிடுங்கிப்பாங்க. அதுக்குள்ள நாங்க போயிடணும்."



"என்ன கொடுமை! தந்தை யின் பென்ஷனைப் பிடுங்கும் மகன்?" பென்ஷன் பிரிவில் பணி செய்த அந்தப் பெண் அதிகாரிக்கு இப்படிப் பல அனுபவங்கள். பிள்ளைகள் இருந்த பெற்றோருக்கே இந்த நிலை என்றால் யாருமில்லா முதியோரின் நிலை! பரிதாபம்தான்.

ஒரே மகளை இழந்து பல மாதங்கள் மன உளைச்சலில் வீட்டில் அடைந்து கிடந்த பெற்றோரை பாகீரதியும் அவர் நண்பர்களும் சந்தித்தபோது "நாங்கள் அனாதை, எங்களுக்கு இனி வாழ என்ன இருக்கிறது?" என்று அழுதார்கள். "உங்களுக்கு நான் இருக்கிறேன் அப்பா" என்று பாகீரதி சொன்ன அந்த சொற்களில் 'ஆனந்தம்' உதயமானது. ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் மனதில் ஏற்பட்ட நம்பிக்கையும், பல நல்ல உள்ளங்களின் ஆதரவும் ஒரு சிறிய குடியிருப்பில் 'ஆனந்தத்தை' உருவாக்கியது.

இருபது வருடங்களில் நூறுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள், பல அறைகள் நிறைந்த கட்டிடத்தில், ஆரோக்கியமான சூழலில் மருத்துவ வசதிகளுடன் ஆனந்தமாக வாழ்கிறார்கள். பாகி அக்காவும் அவர் கணவர் ராமமூர்த்தியும் மற்ற நண்பர்களுடன் ஆனந்தத்தை நடத்துகிறார்கள். அங்கிருக்கும் பெரியோர்களும் தங்களால் முடிந்த எல்லா வேலைகளைச் செய்து கொள்கிறார்கள்.

ஆனந்தம் என்கிற ஆலமரமத்தின் புதிய விழுதுகள் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச ட்யூஷன், மாலை உணவு, ஏழைப் பெற்றோருக்கு மருத்துவ வசதி போன்றவை. இன்னும் பல விழுதுகள் வளர்ந்து வருகின்றன.

சுமார் முன்னூறு நன்கொடை யாளருடனும், புரவலர்களுடனும், கலை நிகழ்ச்சிகள் அற்புதமாக நடந்தன.

சதானந்தாவின் வெங்கடகிருஷ்ணன்ராமன் (என்கிற பாலாவும்) விழாக்குழு தலைவர் கோபால் ராமானுஜமும் இணைந்து விழாவை வெற்றிகரமாக நடத்தினர்.



கலா நிகேதனின் நாட்டிய நிகழ்ச்சியில் குரு செல்வி பிரகாசம், குரு லாவண்யா கோபால் தங்கள் குழுவுடன் மரபுக்கலைகளை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்தனர். பின்னர்'தமிழ்ச் சங்கை' முழங்கினர்.

எட்டு வயது குட்டிப் பெண் நவ்யா சகலகலாவல்லியாக ஹரிகதா காலேட்சபமும், நடனமும் சேர்த்து வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள்.

நிகழ்ச்சியின் உச்சமாக, சென்னையிலிருந்து நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த கர்நாடக இசைக்கலைஞர் விதுஷி காயத்ரி வெங்கடராகவன், வயலின் - வித்துவான் ஸ்ரீகாந்த், மிருதங்க வித்துவான் பி. சிவராமன் இசைமழை பொழிந்தனர்.

விரிகுடாப் பகுதியின் கொடையாளர் Dr. யோகம் பல வருடங்களாக ஆனந்தத்துடன் பயணித்துள்ளார். அவருடைய வருகையால் மேடை மேலும் பொலிவுற்றது.

'ஆராலிட்டி' ஸ்ரீ ஸ்ரீ னிவாசா தன் இயல்பான நகைச்சுவையுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பல நிறுவனங்களும் நல்ல உள்ளங்கள் உதவிக்கரம் நீட்ட விழா இனிதே நிறைவுற்றது.

மேலும் விவரங்களுக்கும் நன்கொடை அளிக்கவும்: www.sadananda.org

ராஜ நாராயணன்

© TamilOnline.com