சுனாமியும்...
சுனாமியின் சீற்றத்தால் பலவாறாகத் துன்புறும் மக்களுக்கு உதவிக் கரங்கள் நீட்டப்பட்டுள்ளன. கனிவுள்ளம் கொண்டு பிறருக்குதவ முன்வந்தோருக்கு எமது நன்றி. இந்தச் சுனாமி என்பது முன்பின் அறிந்திராத ஒன்று என்பதால் அரசு, அறிவியல் / தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் எதேனும் ஒரு வகையில் தவறிவிட்டன. உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் தவிர்த்திருக்கக் கூடியவை என்பது உண்மை. ஆனால் சுனாமியைக் காரணம் காட்டிப் பயனற்ற முதலீடுகளிலும் முயற்சிகளிலும் இறங்கி விடக் கூடாது - கடற்கரையோரம் சுவர் கட்டுவது போன்ற கவைக்குதவாத காரியங்களில் அரசு ஈடுபடக்கூடாது.

ஈராக்கின் பேரழிவு ஆயுதங்களிடமிருந்து உலகைக் காப்பதும், அந்நாட்டில் மக்களாட்சியை மீட்பதையும் புஷ்ஷின் அமெரிக்க அரசு செவ்வனே செய்து முடித்து விட்டபடியால், அடுத்தபடியாக அவர்களது பார்வை ஈரானை நோக்கித் திரும்புகிறது. அமெரிக்க மக்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு இந்த புஷ்ஷாவதாரத்தைக் கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும்.

சில வருடங்களுக்குப் பிறகு பெங்களூருக்குச் செல்ல நேர்ந்தது. சாலைகளில் கார்களின் எண்ணிக்கை பல மடங்காகக் பெருகியிருக்கிறது. ஆனால் சாலைகள் அதே 'அழகில்' தான் இருக்கின்றன. விளைவு? 10 கிமீ செல்ல 100 நிமிடங்களுக்குமேல் ஆனது! இந்தியாவின் சிலிக்கன்வேல்லி என்று சொல்லிப் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் இந்த அடிப்படைவசதிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே தற்கொலைகள் அதிகரிக்கின்றன; குறிப்பாக ஜனவரி - மார்ச் மாத காலத்தில். காரணம்: இறுதி வகுப்புக்களில் ஏற்றப்படும் எதிர்பார்ப்புக்களின் சுமை. சமீபத்திய உதாரணம்: மாதிரிப் பரீட்சைக்குப் படிக்காமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டிக்கப்பட்ட ஒரு சிறுமி. விரைவில் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டாகவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.
பி. அசோகன்
·பெப்ருவரி 2005

© TamilOnline.com