என். பழநிவேலு
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தொழில் மற்றும் வேலை நிமித்தம் புலம் பெயர்ந்தவர்களில் பலர் சிறந்த படைப்பாளிகளாகப் பரிணமித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் ந. பழநிவேலு. இவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர், நாடக இயக்குநர் எனப் பல களங்களில் செயல்பட்டவர்.

ந. பழநிவேலு, ஜூன் 26, 1908 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிக்கலில் நடேசன்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். நாகப்பட்டினத்தில் பள்ளியிறுதிக் கல்விவரை பயின்றார். 1930ல், மலேயாவுக்கு வந்தார். அங்கு ஓராண்டுக் காலம் வசித்த பின்னர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராகப் பணியாற்றினார். 1949 முதல், 'ரேடியோ மலாயா' என்னும் மலாயா வானொலியில் ஒலிபரப்பாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். 1968ல் பணி ஓய்வு பெற்றார். மனைவி, சம்பூர்ணம்மாள். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள்.

நூல்கள்
சிறார் நூல்: பாப்பா பாடல்கள்
கவிதைத் தொகுப்பு: கவிதை மலர்கள்
சிறுகதைத் தொகுப்பு: காதற் கிளியும் தியாகக் குயிலும்
கட்டுரை நூல்கள்: கவிஞர் ந. பழநிவேலு படைப்புக் களஞ்சியம் (இரண்டு பாகங்கள்), பாவலர் ந. பழநிவேலுவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில முத்துக்கள்.
கவிதை நாடகம்: கவியின் நிலவு; சாகுந்தலம்; கடல்


பழநிவேலுவின், 'வலிமை' என்னும் முதல் கவிதை, 1931ல் 'நவநீதம்' இதழில் வெளியானது. 1937ல், தமிழ் முரசு இதழில் சிறாருக்கான பாடல்களை எழுதினார். 'இழந்த நகைகள்', 'கீரியும் பாம்பும்' போன்ற சிறுகதைகள் 1939ல் தமிழ் முரசில் பிரசுரமாகின. தொடர்ந்து பல கவிதைகளையும், சிறுகதைகளையும், சிறார் பாடல்களையும் எழுதினார். பழநிவேலு எழுதிய முதல் நாடகம், 'ஜானி ஆலம்' 1934ல் அரங்கேற்றம் கண்டது. தொடர்ந்து 'சுகுணசுந்தரம் அல்லது சாதிபேதக் கொடுமை' 1936ல் மேடையேறியது. தமிழர் சீர்திருத்த நிதிக்காக, தமிழவேள் கோ. சாரங்கபாணியின் வேண்டுகோளுக்கிணங்க இவர் எழுதிய 'கௌரி சங்கர் அல்லது கிழமணக் கொடுமை' என்னும் நாடகம் 1937ல் அரங்கேறியது. தொடர்ந்து சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். வானொலிக்காகவும், மேடைகளில் நடிக்கவும் 50க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார், இயக்கினார், நடித்தார். திராவிட இயக்க ஆதரவாளராகவும், சுயமரியாதை இயக்கச் சிந்தனை கொண்டவராகவும் இருந்தார் பழநிவேலு.



இவர் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப காலம் முதலே இலக்கியப் பங்காற்றியவர். சிறுவர்களுக்காகப் பல படைப்புகளை எழுதினார். இவரது சிறார் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகி வரவேற்பைப் பெற்றன. கவிதைகள் தொகுக்கப்பட்டு, 1947-ல், தமிழ் முரசு மூலம் நூலாக வெளிவந்தன. கவிதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளில் சில சிங்கப்பூர் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றன. இவரது படைப்புகள் குறித்து ஆய்வரங்குகளும், கருத்தரங்குகளும் நிகழ்ந்தன.

தனது இலக்கிய முயற்சிகளுக்காகப் பழநிவேலு பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். சிங்கப்பூர் பாஸ்கர் நாடக அகாடமி 'நாடக சிகாமணி' விருது வழங்கிச் சிறப்பித்தது. சிங்கப்பூர்த் தமிழர் சங்கம் 'முத்தமிழ் வித்தகர்' விருதளித்துப் பாராட்டியது. சிங்கப்பூர் அரசு கலாச்சாரப் பதக்கம் அளித்துச் சிறப்பித்தது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் 'கலாரத்னா' விருது வழங்கியது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 'தமிழவேள் விருது' வழங்கி கௌரவித்தது.

நாடகங்கள்
ஜானி ஆலம், சுகுண சுந்தரம் அல்லது சாதிபேதக் கொடுமை, கௌரிசங்கர் அல்லது கிழமணக் கொடுமை, நட்பு, ரகசியம், எதிர்வீடு, ஒரே நாள், கல்லில் நார், சந்தேகம், பட்டாசு, பாசப் போக்கு, மியாவ்... மியாவ்..., மாப்பிள்ளை விஜயம், முரட்டு மாப்பிள்ளை, வசிய மருந்து, கைக்கிளை, பாடும் மாப்பிள்ளை, இரு நண்பர்கள், மயக்கமும் தெளிவும், ஏமாற்றம், உழைப்பின் உயர்வு, உறுதி, கடிதக் காதலி, காதல் நாடகம், துணிந்தவர்க்கு..., புலவரும் புரவலனும், கயமனார், பிசிராந்தையார், பெருந்தலை சாத்தனார், குமணன், பொற்கைப்பாண்டியன், வாலி, கும்பகர்ணன், பழிக்குப்பழி, ரிஷ்யசிருங்கர், அகமும் புறமும், சாதனை, சோர்விலாப் பெண், காளிதாசன், குமரகுருபரர், தாயுமானவடிகள், மனோன்மணியம், யானைக்கும் அடி சறுக்கும், இன்பம் எங்கு உள்ளது?


இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்று பல களங்களில் இலக்கியத்துக்குப் பங்காற்றிய ந. பழநிவேலு, நவம்பர் 11, 2000 அன்று, 92ம் வயதில் சிங்கப்பூரில் காலமானார். சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவராக ந. பழநிவேலு மதிப்பிடப்படுகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com