ட்யூலிப் மலர் விழா
இளந்தென்றல் வீசும் காலைப் பொழுதில் மலர்களின் நடுவே கண்குளிர நடப்பதைப்போல் ஓர் இன்பம் வேறு உண்டா? ட்யூலிப் மலர் விழாவில் பங்கேற்றபோது அந்த அனுபவம் கிடைத்தது, இரு வாரங்கள் முன். ஒட்டாவா ட்யூலிப் விழா மே மாதம் 13, 14 தேதிகளில், மூன்று வருட ஓய்வின் பின் முழு வேகத்துடன் நடைபெற்றது.



ட்யூலிப் விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1944-45ல் உலகமே உணவுத் தட்டுப்பாட்டில் தவித்தது. பசியும் பட்டினியும் தலைவிரித்தாடிய காலம். 3.5 மில்லியன் மக்கள் பசியால் வாடியிருந்த நிலையில் கனடா அரசு உணவளிக்க முன்வந்தது. ஏப்ரல் மாதம் போரில் ஜெர்மனி சரணடைந்தது. கனேடியப் படைவீரர் ஆம்ஸ்டர்டாம் வழியாகச் சென்றனர். மக்கள் உணர்ச்சிப் பெருக்கில் அழுது மயங்கினர்.

அந்த நேரத்தில்தான் ஆம்ஸ்டர்டாம் இளவரசி ஜூலியானா தன் இரண்டு குழந்தைக்ளுடன் ஒட்டாவா நகருக்கு, போர்க்கால இக்கட்டிலிருந்து தப்பிக்கத் தஞ்சம் அடைந்தார். அக்காலத்தில் இளவரசி குழந்தைப் பேருக்காக ஒட்டாவா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறக்கும் குழந்தைக்கு டச்சு மண் உரிமை வேண்டும் என்பதற்காக அந்த ஒட்டாவா ஆஸ்பத்திரியை டச்சு மண் என்று அறிவித்தார்கள். அது மட்டுமா! அமைதிக் கோபுரத்தில் டச்சுக் கொடி பறக்க விடப்பட்டது. சுற்றுப்புறமெங்கும் டச்சு நாட்டு இசை ஒலிபரப்பப் பட்டது. அவ்வளவு அருமையாக ராஜ குடும்பத்தினர் பார்த்துக்கொள்ளப் பட்டனர். போர் முடிந்தது. கலவரங்கள் அடங்கி அமைதி திரும்பியது. பிறகுதான் ராஜ குடுமபம் டச்சு நாட்டுக்குத் திரும்பியது.



நாடு திரும்பிய ஜூலியானாவோ குழந்தைகளோ கனடாவை மறக்கவில்லை. இளவரசி மார்கரட் தான் பிறந்த நாட்டைக் காண அடிக்கடி ஒட்டாவா வந்து விடுவார். வரும்போது டச்சு நாட்டிலிருந்து நிறைய ட்யூலிப் கிழங்குகளைக் கொண்டு வந்து பரிசளிப்பார். தாய் நாட்டிலிருந்து தஞ்சம் அளித்த நாட்டிற்கு ஒரு லட்சம், ஆம், ஒரு லட்சம் ட்யூலிப்புகளைக் கொண்டுவந்து பரிசளித்தார்.

1953-ல் ட்யூலிப் விழா ஆரம்பித்தது. வருடா வருடம் மலர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. காணாத கண் என்ன கண்ணே என்னும்படி மனம் கவரும் மலர்களின் அணிவகுப்பு இது.



மலர்கள் வண்ணங்கள் சொல்லி மாளாதபடி பலவிதமாக உள்ளன. சிகப்புக் கம்பளம் விரித்ததுபோல் கண் எட்டும்வரை ட்யூலிப் மலர்கள் மலர்ந்து தலையாட்டின. மாம்பழம்போல மஞ்சள்நிற மலர்கள் மதி மயக்கின. ட்யூலிப் என்றாலே முட்டைபோல் காணப்படும் மொட்டுகள் என்ற தவறான கருத்து உள்ளது, தாமரை போல உள்ள பியோனி மலர்கள் உண்டு. கிளிபோல் உள்ளவையும் உண்டு. ரோஜாவைப் போன்ற மலர் உண்டு. அடுக்கு சாமந்தி போல் ட்யூலிப் உண்டு. ஓரிடத்தில் ஜின்னியா போன்ற மலர்களைக் கண்டு அருகில் சென்று பார்த்தேன். அவையும் ட்யூலிப்களே. படங்களைப் பார்த்தால் பரவசமாகும்.

நடை பயிலும்போது எத்தனை முகங்கள். எத்தனை நாட்டவர். ஒரு குடும்பம் என்னை நிறுத்தி வழி கேட்டார்கள். பதில் சொல்லிவிட்டு "அப்பா, அம்மாவா கூட இருப்பது" என்று கேட்டேன். ஒரே சந்தோஷம் அவர்களுக்கு. எங்கள் மொழி உனக்கு எப்படித் தெரியும் என்று என்னைத் தழுவிக் கொண்டார்கள். கொரிய மொழிபோலத் தமிழிலும் அப்பா அம்மாதான் என்று விளக்கினேன். நல்ல தோழர்கள் ஆனார்கள். இப்படியாக, ட்யூலிப் விழா இனிமையாக முடிந்தது.

அலமேலு மணி

© TamilOnline.com