என்றுமே கனடா வந்தோரை வரவேற்று வாழவைக்கும் நாடுதான். அதிலும் அவர்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் கலை விழாக்களை நடத்தி மகிழ்விப்பதில் அதற்கு ஈடு கிடையாது. இவ்வகையில் மே மாதத்தில் ஆசியப் பாரம்பரிய விழாவைக் கோலாகலமாக நடத்தியது கனடா. அதைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சந்திரா ஆர்யா மேற்பார்வையில் கனடியப் பாராளுமன்றத்திலேயே நடத்தியது.
கிழக்காசிய மக்கள் விழாவாக இதைக் கொண்டாடினர். அந்தந்த நாட்டின் பிரதிநிதிகள் அதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். திரு. சந்திரா ஆர்யா முன்னின்று நடத்த, சீனா, பிலிப்பைன்ஸ், கொரியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேசம், ஶ்ரீலங்கா ஆகிய நாட்டினர் பங்கேற்ற பெருவிழாவாக இது நடைபெற்றது. முதலில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகளுக்குச் சந்திரா ஆர்யா மாலை அணிவித்து, கேடயங்கள் அளித்து மரியாதை செய்தார். பிறகு கலைவிழா ஆரம்பமானது.
முதலில் சீன நடனம் நடைபெற்றது. ஒரே ஒரு வண்ண விசிறியை வைத்துக் கொண்டு அன்ன நடையில் ஆரம்பித்த நடனமணி, பம்பரம் போலச் சுழன்று பார்வையாளர்களையும் சுழல வைத்துவிட்டார்.
அடுத்து இந்திய நடனம். அமிதா பிஸ்தாவும் சங்கீதா ராஜுவும் ஒடிய நடனத்தை பிரமிக்க வைக்கும் அசைவுகளுடன் ஆடினர். அந்தக் கழுத்தின் நகர்வுகளும் இடுப்பின் துவளலும் மலைக்க வைத்தன. பிறகு வந்த நேபாள நடனம் மற்றோர் உச்சம். 12 வயதே ஆன அவர்களின் குதிப்பும் சீண்டலும் புன்னகையை வரவைத்தன.
பாகிஸ்தானி நடனத்தைத் தொடர்ந்து வந்தது கம்பு நடனம். கம்பைக் கையில் எடுக்கவில்லை, ஆனால் கால்களால் ஆடினர் தினிடி, கிளாப். வனீசா, க்ரிச்டீன் ஆகியோர். 3 1/2 அடி நீளக் கம்புகளைத் தரையில் வைத்து, நால்வர் தாளமிட, அந்த குக்கு கட்டைகளுக்கு நடுவில் நடனமாடினர். ஆ! எப்போது கட்டை காலில் தட்டுமோ, எப்படி விழாமல் ஆடுவார்களோ என்ற பதட்டம் அரங்கம் முழுதும் நிலவியது. மெதுவாக ஆரம்பித்த நடனம் முழு வேகமெடுத்து ஆட ஆரம்பித்ததும் "ஹா ஓஒ" என்று ஒலி எழுப்பினர் பார்வையாளர்கள்.
இலங்கையின் நடனம் தொடர்ந்தது. அவர்களுக்கே உரிய கிரீடத்துடன் நக்னுதி, காவிடி நேகா, ஹேசனா மற்றும் பலர் மிக அழகாக வளைந்து நிமிர்ந்து ஆடினர். பிறகு வந்தது தமிழ் நடனம். அரங்கமே மேடையேறி விட்டதோ என்ற பிரமையை ஏற்படுத்தியது ஆடவந்த சிறுவர் கூட்டம். அபீசன். அகிலன், ஸ்னோஜன், அச்வின் இலக்கியன், அச்வந்த், பிரசீத் மற்றும் பலர் பங்குபெற்றனர். வேகமும் துடிப்பும் கொண்ட நடனம் அது. வாள், வேல், அம்பு மற்றும் பல ஆயுதங்களை ஏந்தி, சிறு தவறும் செய்யாமல் சுழற்றி ஆடினர். வியக்க வைத்த ஒன்றுதான்.
பிறகு சந்திரா நன்றி நவில விழா முடிவுற்றது. ஒரு பெண்மணி "சந்திரா ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்தவர்தான். ஆனல் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் உதவி என்று கேட்டு வந்தாலும் தயங்காமல் தன்னால் முடிந்த எல்லாம் செய்து கொடுப்பார். அத்தனை கனிந்த உள்ளம் படைத்தவர்" என்றார். அதுதானே இந்தியனின் பெருமை.
அலமேலு மணி |