அரங்கேற்றம்: சம்யுக்தா சித்தூர்
மே 7, 2023 அன்று பாலோ ஆல்டோ கபர்லி அரங்கத்தில் செல்வி. சம்யுக்தா சித்தூரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. குரு சேதனா சாஸ்திரி அவர்களிடம் வழுவூர் பாணியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியம் பயின்று வருகிறார் சம்யுக்தா. திருமதி. ஸ்நிக்தா வேங்கடரமணி (குரலிசை), திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திரு. விக்ரம் ரகுகுமார் (வயலின்), திரு. அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் சிறப்பாகப் பின்னணி இசை வழங்கினர்.



சம்யுக்தாவின் நடனம் கவினுற அமைந்து இருந்தது. தாள, அபிநய நேர்த்தியுடன் ஆடிப் பெரும் பாராட்டைப் பெற்றார். அவருடைய முகபாவங்கள் வர்ணத்தில் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. அவருடைய கதை சொல்லும் திறன் ஒவ்வோர் அசைவிலும் வெளிப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம் என்று எல்லா மொழிகளிலும் பாடல்கள் தெரிவு செய்யப்பட்டது மிகச் சிறப்பு. சுவாதித் திருநாள், சுப்புடு, சூர்தாஸ், புரந்தரதாசர் என்று புகழ்பெற்ற பாடலாசிரியர்களின் பாடல்கள் கேட்க இனிமையாக இருந்தன. திரு. பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் கதனகுதூகலத் தில்லானாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

பாகீரதி சேஷப்பன்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com