போதை தெளிந்தது
வீட்டிற்குச் சரியான நேரத்தில் திரும்பி வராத விக்னேஷைத் தேடி எங்கே போவது என யோசித்துக் கொண்டிருந்தாள் உமா.

வேலைக்குப் போன கணவனின் அலுவலகத்திற்கு ஃபோன் பண்ணியபோது "அப்போதே கிளம்பி விட்டாரே ராஜன்" என்ற பதில் கிடைத்தது. ராஜன் நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு வீட்டிற்கு வர, விடிந்துவிடும். விக்னேஷை எங்கே போய்த் தேடுவது!

விக்னேஷ் படிக்கும் பள்ளிக்கும் நண்பர்கள் வீட்டிற்கும் ஃபோன் பண்ணி அலுத்துப் போனாள் உமா. நான்கு மணிக்குப் பள்ளி முடிந்ததும் உற்சாகமாக வீட்டிற்கு ஓடி வந்து 'அம்மா' என்று கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் விக்னேஷை இப்போது எங்கே போய்த் தேடுவது?

நேரம் போகப் போக அவளுக்குப் பயம் அதிகரித்தது. அண்ணன் வீட்டிற்கு ஃபோன் பண்ணி விக்னேஷைக் காணவில்லை என்று சொல்லலாமா? சே! ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கி இருக்கும் அவரை இப்போது தொந்தரவு பண்ணி அவரையும் பயம் கொள்ளச் செய்யவேண்டுமா? வேறு வழி தெரியவில்லையே. கடவுளே! இந்தப் பட்டணத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கூட அதிகப் பழக்கமில்லாமல் போனதே. கோபமும், எரிச்சலும்தான் மேலோங்கியது உமாவுக்கு.

ராஜனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது, இந்தக் குடிப் பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று. ஆனால் அவனோ தினமும் குடித்துவிட்டு இரவு பதினோரு மணிக்குப் பிறகுதான் வீட்டிற்கு வருவான். உங்களுக்கெல்லாம் குடும்பம் குட்டி எதற்கு என்று சண்டை போட்டு அலுத்துப் போய்விட்டது.

அழுது அழுது கன்னத்தில் கண்ணீர் காய்ந்து போக, வேறு வழி தெரியாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள். "அண்ணா, அவர் இன்னும் வேலைக்குப் போய்விட்டு வரவில்லை. விக்னேஷ் ஸ்கூலுக்குப் போனவன் இன்னும் திரும்பி வரவில்லை. இந்த சிட்டியிலே எனக்கு உறவு என்று யாருமில்லை. கொஞ்சம் அவனைத் தேடிப்பார்க்க வழி சொல்ல முடியுமா?" என்று அழுகையோடு பக்கத்து வீட்டு சுமனிடம் கேட்டாள்.

"கொஞ்சம் இருங்கள் சிஸ்டர். என் நண்பர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறார். அங்கே ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்து விடுவோம்" என்றான் சுமன்.

"போலீஸ் எல்லாம் வேண்டாம். என் விக்னேஷ் ஸ்கூலிலிருந்து வந்தவன் எப்படியோ எங்கோ வழிமாறிப் போய்விட்டான் போல. அவனைத் தேடித்தான் பார்க்க வேண்டும்" என்று சொன்னபோது அவளுக்கு மீண்டும் அழுகை எட்டிப் பார்த்தது.

"உங்கள் விருப்பப்படி வேண்டுமானால் பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் தேடிப் பார்க்கலாம். ஆனால் என்னிடம் ஸ்கூட்டர் தானிருக்கிறது. என்னோடு இந்த இரவு வேளையிலே நீங்கள் ஸ்கூட்டரில் வரமுடியாதே."

"கொஞ்சம் ஆட்டோவிலே போய்த் தேடிப் பார்க்கலாமே."

"சரி, இருங்கள்" என்றபடி சுமன் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு புறப்பட இருவரும் ஆட்டோவில் ஏறினர். பள்ளி செல்லும் வழியிலிருந்து விக்னேஷின் நண்பர்கள் வீடு என ஒவ்வோர் இடமாகத் தேடிப் பார்த்து சலித்துப் போனார்கள். உமா முந்தனையை வாய்க்குள் வைத்து அழுகையை அடக்கிக் கொண்டே வீடு திரும்பினாள். அங்கே கையில் காலில் சின்ன சிறாய்ப்புக் காயங்களுடன் ரத்தம் சட்டையில் சிதறியிருக்க, சீருடை முழுவதும் மண்ணாகி, கண் சிவந்து அழுது கொண்டிருந்த விக்னேஷைப் பார்த்ததும் ஓடிப் போய்க் கட்டிக்கொண்டாள் உமா.

"என்னடா கண்ணா! என்னாச்சு?" என்று கேட்டபடி உமா ஓவென்று அழ ஆரம்பித்தாள். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து என்னவென்று விசாரிக்க, விக்னேஷ் திருதிருவென்று விழித்தான்.

"சிஸ்டர் நீங்கள் வீட்டிற்குள் போங்கள். விக்னேஷ்தான் வந்து சேர்ந்து விட்டானல்லவா?" என்றான் சுமன்.

பக்கத்து வீட்டு மனிதர்களைக் கூட்டமாகப் பார்த்ததும், தயங்கி வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு "எங்கே கண்ணா போய்ட்டே?" என்றாள் அவனை அணைத்துக் கொண்டே.

"மம்மி, ஒரு காரிலே ரெண்டு பேர் என்னை இழுத்துக் கொண்டு போனார்கள். வீட்டிலே ஃபோன் இருக்கா? என்றார்கள். இல்லை என்றேன். உன்னை வச்சிச் சம்பாதிக்கப் போறோன் அப்படீன்னாங்க. எனக்கு ஒரே அழுகையா வந்துச்சு. நான் மெதுவா அங்கேயிருந்து தப்பிச்சு ஓடி வரும்போது நம்ம ஸ்கூலுக்கு வரும் அங்கிளோட ஆட்டோவிலே மோதிட்டேன். அதுதான் காயம். அவர்தான் என்னை வீட்டுக்குக் கூட்டிவந்து விட்டுட்டுப் போனார்" என்றான், இன்னும் பயம் நீங்காமல்.

வீட்டுக்கு வராத ராஜனை நினைத்து உமாவுக்குக் கோபம் அதிகரித்தது.

"அம்மா பசிக்குது" என்றான் விக்னேஷ். "இதோ சாப்பாடு போடறேண்டா" என்றபோது கதவைத் தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்தாள் உமா.

போதையோடு உள்ளே வந்த ராஜன், விக்னேஷின் கோலத்தைப் பார்த்துப் பதறிப்போய் என்னவென்று கேட்டான். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள் உமா.

அவளைத் தேற்றி எல்லாம் விஷயங்களையும் கேட்டான் ராஜன். அவனுடைய போதை தெளிந்தது. "சாரி உமா, இனி இப்படி உன்னைத் தவிக்க விடமாட்டேன். குடிப் பழக்கத்தை இன்னியோட விட்டுடறேன். நீ விக்னேஷைத் தேடி எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாய்? சாரி உமா. வெரி சாரி. இனி அலுவலகம் விட்டால் நேராக வீடுதான். என்னை மன்னித்து விடு" என்று அவளைத் தட்டிக்கொடுத்தான். முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து விக்னேஷுக்கு மருந்து போட ஆரம்பித்தான்.

இரஜகை நிலவன்,
மும்பை

© TamilOnline.com