பாலைவனச் சோலை (அத்தியாயம் 6)
அன்றும் இரவு தூங்கு முன்னர் அருண் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அம்மாவுக்காகக் காத்திருந்தான். ஒரு கதைப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். கதவு தட்டும் ஓசை கேட்டது. அம்மா கீதா அறையின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

"என்னப்பா படிச்சிட்டு இருக்க?"

"கிராஃபிக் நாவல்."

"நம்ம ஒரு ஒப்பந்தம் போட்டோமே, கிராஃபிக் நாவல் படிக்க மாட்டோம்னு."

"ரொம்ப நாளைக்கு அப்புறமா படிக்கிறேம்மா. 5 நிமிஷம்?"

கீதா கூடாது என்று மறுத்தார்.

"அம்மா, ப்ளீஸ்…"

"நான் உள்ளே வரணும்னா கிராஃபிக் நாவல் கூடாது. நீ தீர்மானம் பண்ணிக்கோ."

அருண் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிக் கீழே வைத்தான். "இப்ப சொல்லுங்கம்மா. அந்த விளம்பரம் பத்தி நான் சந்தேகப்படறது சரிதானே?"

"எனக்கு என்னமோ நீ தப்பாப் புரிஞ்சிட்டு இருக்கியோன்னு தோணுது. நான் சொன்னேனே, இது ஒரு பாதுகாவல் முயற்சியாகூட இருக்கலாம். இந்த மாதிரி குடியிருப்புகளைக் கட்டி, அதுல வர வருமானத்துல எர்த்தாம்ப்டன் ஊருக்காக உபயோகிக்கறது சரியான திட்டம்தானே?"

"இல்ல அம்மா. அப்படிச் சொன்னாதான் நம்புவாங்க. அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா ஏதாச்சும் கட்டிட்டு நிறைய இடத்தை வளைச்சுப் போட ஆரம்பிச்சுடுவானுக இவனுக."

"அது எப்படி, இவ்வளவு உறுதியா சொல்ற? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நம்ம ஊருல நடந்தது இல்லையே?"

அருண் சற்று யோசித்தான். ஏதோ ஒரு யூகத்தில் ஒரு நிரூபணமும் இல்லாமல் அப்படி சொல்வது நியாயமில்லை என்று அவனுக்கே பட்டது.

"என்ன கண்ணா, என்ன பேசாம இருக்க? நான் சொல்றதுல நியாயம் இருக்கா?"

"இருந்தாலும்…"

கீதா புன்னகையோடு அருணைப் பார்த்தார். அவன் என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லை. ஒன்று நினைத்து விட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று நினைப்பவன். தன்னிடம் தப்பே கிடையாது என்று மூன்று காலில் நிற்பவன். இந்தச் சிறிய வயதிலேயே இவ்வளவு திண்ணக்கம் இருப்பது கொஞ்சம் அபாயம் தான்.

"அம்மா, அந்த conservation and preservation பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்…"

"அதான் அப்பவே சொன்னேனே கண்ணா, அமெரிக்காவிலே public land policy பத்தி தீர்மானம் பண்ணினதுல இரண்டு பக்கமும் நிறைய விவாதம் நடந்தது. அதைப்பத்தி முழு விவரமும் விக்கிபீடியால இருக்கு."

"அம்மா, நான் என்னமோ preservation policy தான் நல்லதுன்னு நினைக்கிறேன். நம்ம ஊரோட இடங்கள் எல்லாத்தையும் வணிகமயம் ஆக்கவே கூடாது. அதனால நிறைய பிரச்சினைகள் வரும்."

"Preserve பண்ணனும்னா, அதுக்குப் பணம் யாரு கொடுப்பாங்க?"

"வரிப் பணம். அதைமாதிரி நல்ல திட்டங்களுக்குத் தான் வரிப் பணம் இருக்கே."

"அது அவ்வளவு எளிதல்ல கண்ணா. நிறையப் பேர் ஒத்துக்க மாட்டாங்க. எவ்வளவோ திட்டங்களுக்குப் பணம் தேவைப்படும்போது அரசாங்கத்துக்கு இந்த மாதிரி நிலங்களின் பாதுகாப்பு அவசியமான்னு கேட்பாங்க."

"அம்மா. இதெல்லாம் நம்மளோட இயற்கை வளங்கள் தானே. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதில என்னம்மா தப்பு?"

"அருண் கண்ணா, உனக்கு முக்கியம்னு எது தோணுதோ அது எல்லோருக்கும் முக்கியம்னு கிடையாதே. அரசாங்கம் சின்ன ஊரு அளவுல இருந்தாலும் சரி, பெரிய நாடு அளவுல இருந்தாலும் சரி, அவங்களால, எல்லாரும் அவங்க அவங்க விரும்புற மாதிரி திட்டங்களக் கொண்டுவர முடியாது."

"ஏன் முடியாது அம்மா? அம்மா, common sense policy அப்படீன்னு ஒண்ணு இருக்கே. அதுகூட இல்லைன்னா அப்புறம் நாம எல்லாம் ஒரு civil society அப்படீன்னு சொல்லிக்கவே கூடாது."

அருணின் எரிச்சல் கலந்த கோபத்தை நன்றாகவே அறிந்தவர் கீதா.

"உன்னோட காமன் சென்ஸ், எல்லாருக்கும் காமன் சென்ஸா எப்படி இருக்க முடியும்?" கீதாவின் குரல் ஓங்கியது. அவருக்கே அது ஆச்சரியமாக இருந்தது, தான் ஏன் திடீரென்று இப்படிக் குரலை உயர்த்தினோம் என்று.

"அம்மா, காடுகள், பாலைவனங்கள், பயிர் நிலங்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாம் என்னைக்குமே பாதுகாக்கப் படணும்."

"நான் அதையெல்லாம் தூக்கி எறியணும்னு சொல்லலையே. அவற்றைப் பாதுகாக்க ஒரு நிதியாதாரம் கூடிய வழி இருக்கணும்னு தானே வலியுறுத்தறேன். அதைத்தான் Gifford Pinchot நூறு வருஷம் முன்னாலேயே நிரூபிச்சாரு."

அருண் விட்டேத்தியாகத் தோளைக் குலுக்கினான். கீதா தொடர்ந்தார். "அருண், conservation தான் logical sense. ஒரு commercial entity மாதிரி பண்ணி அதுல வர வருமானத்தில ஒரு பகுதியை நீ சொல்ற மாதிரி பாதுகாக்க உபயோகப்படுத்தணும்."

"அம்மா, வணிகப்படுத்த இம்மி இடம் கொடுத்தாகூட இந்தப் பணவெறி பிடிச்சவங்க…"

"அருண், நாம சுத்திச் சுத்தி அதையே பேசிக்கிட்டு இருக்கோம். எனக்கு என்னவோ இந்த உரையாடல் நேரத்தை வீணடிக்கிற மாதிரி இருக்கு."

சற்று நேரம் ஒன்றுமே பேசாமல் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சரி கண்ணா, உனக்குப் பேச வேற எதுவும் இல்லைன்னா, நான் படுக்கப் போலாமா? காலைல சீக்கிரம் எழுந்துக்கணும்." கீதா அருணின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு விளக்கை அணைக்கப் போனார்.

அருண் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. எப்படியாவது இன்னும் கொஞ்ச நேரமாவது அம்மாவோடு ஏதாவது பேசவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. "அம்மா, இவ்வளவு நாளா இல்லாம, இப்படி திடீர்னு எப்படிமா வீடுகள் கட்ட எண்ணம் வரும்?"

தன்னை விட்டால் போதும் என்ற நிலமையில் கீதா இருந்தார். "அருண், போதும்பா. காலைல சீக்கிரமா எழுந்துக்கணும்."

"நான் ஊகிக்கறது சரிதான் அம்மா. இந்தத் திட்டம் மூலமா ஏதோ பெரிய land grabbing நடக்கப்போவுது பாரு."

கீதாவிற்கு கோபம் வந்தது. தன் ஜென் தியானத்தை நினைத்துக் கொண்டார். பத்துவரை எண்ணியபடி நிதானமாக மூச்சை இழுத்து விட்டார். ஒரு புன்னகையோடு பேசினார். "நிரூபணம் கொண்டு வா, அப்புறமா பாத்துக்கலாம். சரியா? கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,.."

"தீர விசாரிப்பதே மெய்" அருண் பூர்த்தி செய்தான்.

"சரியாச் சொன்ன. எங்க தீர விசாரிச்ச அப்புறமா உன்னோட இந்த சதித்திட்டக் கோட்பாடு உண்மையான்னு பாக்கலாம். சரியா?"

அருணின் பதிலுக்குக் காத்திராமல் கீதா அறை விளக்கை அணைத்துவிட்டு நகர்ந்தார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com