மோன்மவுத் ஜங்ஷன், நியூ ஜெர்சியில் தெற்கு பிரன்ஸ்விக் உயர்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவர் மாதவன் கோபிகிருஷ்ணன். 15 வயதான மாதவன், எதிர்காலத் தலைவர்கள் பரிமாற்றம் (Future Leaders Exchange (FLEX) Abroad) திட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா முழுவதிலுமிருந்து 20 மாணவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 2023-24 கல்வியாண்டில் போலந்தில் படிக்க அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரத் துறையின் நிதிநல்கை பெறுகிறார். இந்தத் தேர்வு போட்டி மற்றும் தகுதி அடிப்படையில்அளிக்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை வெளிநாட்டில் ஒரு கல்வியாண்டின் முழுச் செலவையும் உள்ளடக்கியது, இது மாதவனுக்கு ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து, போலந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிப்பதுடன், அங்குள்ள கல்வி மற்றும் கலாச்சார அனுபவத்தில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், மாதவன் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்வார், உலகளாவிய சந்தையில் அமெரிக்கா திறம்பட போட்டியிட புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார், மேலும் உலக அமைதிக்குப் பங்களிப்பார். மாதவன் போலந்தில் "இளைஞர் தூதராக'ப் பணியாற்றுவார். கலாச்சாரப் புரிதலை மேம்படுத்துதல், தன்னை விருந்தாளியாகக் கொண்ட குடும்பம் மற்றும் சகாக்களுடன் உறவுகள் மூலம் நம்பிக்கையை ஆழப்படுத்துவார். அந்தச் சமூகத்திற்கு உதவத் தன்னார்வ சேவையில் ஈடுபடுவார். இவற்றின் மூலம் உலகளாவிய நலன் மற்றும் மதிப்புகளைப் பற்றிய புரிதலை அவர் பெறுவார்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் 1993 ஆம் ஆண்டில் FLEX திட்டம் தொடங்கப்பட்டது, இது சுதந்திர ஆதரவுச் சட்டத்தின் ஒரு பகுதியாக 1992-ல் நிறுவப்பட்டது. பரஸ்பர புரிதல் மற்றும் அமைதியை அடையச் சிறந்த வழி இளைஞர்களை நெருக்கமாக கொண்டு வருவதே என்ற முன்னாள் செனட்டர் பில் பிராட்லியின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. FLEX திட்டம் அமெரிக்காவுடன் ஐரோப்பா, யூரேசியா மற்றும் மத்திய ஆசிய மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. 2023-24-ஆம் ஆண்டில், தகுதியுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜார்ஜியா, கஜகிஸ்தான் அல்லது போலந்தில், ஒரு கல்வி ஆண்டுக்காலம் உள்ளூர்ப் பள்ளியில் சேர தகுதி அடிப்படையிலான உதவித்தொகையை இந்தத் திட்டம் வழங்குகிறது. அதே நேரத்தில் பங்கேற்பாளர்களுக்கு வெளிநாட்டில் வாழ்வோர் கண்ணோட்டத்தில் அமெரிக்க கலாச்சாரம் குறித்த புதிய கண்ணோட்டத்தை வழங்கும்.
செய்திக் குறிப்பில் இருந்து |