அக்கப்போர் அண்ணாவய்யங்கார்
அக்கப்போர் அண்ணாவய்யங்காரை தெரியுமோல்லியோ உங்களுக்கு? தெரியாமலிருக்க முடியாது. தெரியாவிட்டால் குறை உங்களுடையது. அந்தஸ்தோ செல்வாக்கோ உங்களுக்கிருந்தால் விட்டிருக்க மாட்டார் அவர். அக்கரை அப்பாசாமி அய்யங்காரின் அரும்புதல்வர். உலக இயல்பை அறிய பிதுரார்ஜிதம் பூராவையும் செலவழித்தவர். பிராம்மண ஜாதி; விஷ்ணு மதம்; சுக ஜீவனம்! கடன் வாங்கிக் காலக்ஷேபம் செய்யக்கூடிய கட்டம் கடந்துவிட்டது. கவலையற்ற காலக்ஷேபம் செய்யத் தொடங்கினார். கடன் வாங்கினால்தானே கவலை; கடனாகக் கேட்டால் கிடைக்கவும் கிடைக்காது. காணிக்கையாக வசூலித்தார். அவர் அனுபவத்தில் அறிந்த சாமர்த்தியம் அதுதான். உத்தியோக வட்டாரங்களில் உறவாடி ஊதியம் தேடிக்கொண்டார். ஜில்லா அதிகாரிகள் எல்லாரையும் அவருக்குத் தெரியும். முக்கியமாக போலீஸ், மாஜிஸ்திரேட் அதிகாரிகளை நன்றாகத் தெரியும். அறிமுகப்பட வேண்டியதுதான் தாமதம். அந்தரங்கம் பாராட்டுவார். சுவாதீனம் ஏற்பட்டால் போதும்: சுகஜீவனத்திற்கு வழி பிறந்துவிட்டது. வாக்கு சாதுர்யம் சர்வார்த்த சாதகமல்லவா!

★★★★★


வாக்கு சகாயம் செய்து பிழைப்பதில் இழிவு ஒன்றுமில்லை. சமுதாய வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம் அது. விவகார உலகில் வக்கீல் தொழிலுக்கு வாக்கு சகாயமே அஸ்திவாரம். வியாபார உலகிலும் தரகன் செய்யும் சேவை அதுதான். அண்ணாவய்யங்கார் வாக்கு சாலக்கு மிகுந்தவர். சமூக சேவையில் புதிய துறை கண்டார். வசியவாதியாக விளங்கினார்! யாரிடத்தில் எவ்வாறு நடந்தால் எது சரியும் என்பது அவருக்கு நெட்டுருவாகிவிட்டது. சமயோசிதமாகப் பேசவும், சரஸமாக நடக்கவும் தேர்ந்துவிட்டார்.

பரோபகார சிந்தை புதிய பரிமாணம் பெற்றுவிட்டது. யாருக்கும் எதையும் சாதித்துக் கொடுப்பார். வீடு விற்கவேண்டுமா? வாங்கவேண்டுமா? வாயை அசைத்தால் போதும். விடமாட்டார் பிறகு. கல்யாணம் நடக்க வேண்டுமா? நிற்க வேண்டுமா? இரண்டுக்கும் தயார் அவர். பொழுது போக வேண்டுமா? இன்பமாக காலங்கழிக்க வழி காட்டுவார். உளநூலில் ஊறியவர். காலக்ஷேபத்திற்குக் கேட்பானேன்!

★★★★★


வாழ்விலே நெட்டு வழி எல்லாருக்கும் தெரியும். குறுக்கு வழியை மிகச்சிலரே அறிவர். அண்ணாவய்யங்கார் அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர். பகவத் சிருஷ்டியில் அவர்களுக்கும் கடமை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகிலே விநாடிக்கொரு கரு உருவாகிறது. பிறக்கும் பிள்ளைகளுக்குப் பால்மணம் மாறவேண்டும். அண்ணாவய்யங்கார் பரம்பரை செய்துவரும் சேவை அதுதான். பிரபஞ்ச ஞானம் போதிக்கின்றனர். சிலருக்கு ஒரு பாடம் போதும். பலருக்கு பலமுறை பாடமாக வேண்டும். மற்றும் சிலருக்கு எவ்வளவு முறை கற்றாலும் போதாது. ஆனால் கழிவைக் கொண்டுதான் காலக்ஷேபம் நடத்தவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லை. தேசமோ விசாலம். பிறர் அநுபவம் பெரும்பாலோருக்குப் பயன்படுவதில்லை. வெளிச்சத்தைச் சுற்றி விளக்குப் பூச்சிகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. கவலைப் படுவானேன்! அண்ணாவய்யங்கார் கவலைப்படவே இல்லை. வருஷத்திற்கு ஒரு சுற்றுப் பெருத்து வருகிறார். வயதிற்கேற்ற வாட்டமே காணவில்லை

★★★★★


கடைசியாக அண்ணாவய்யங்காரைச் சென்னையில் பார்த்தேன். இடுப்பிலே 'புக்மஸ்லின்' வேஷ்டி தரித்திருந்தார். மேலே 'ஸில்க்' ஜிப்பா; விசிறி மடிப்புக் கலையாத ஜரிகை அங்கவஸ்திரம் அதன்மீது. காதிலே ஜிலுஜிலுன்னு வைரக்கடுக்கன். கண் குளிர - கண்ணை மறைக்கவும் கூட - 'கூலிங்'கிளேஸ்; கையிலே தங்கச் சங்கிலியுடன் ரிஸ்டு வாச்சு: விரலிலே பச்சை மோதிரம். நெற்றியிலே ஜவ்வாதுப் பொட்டு. கிட்டவந்தார்; கம்மென்று வாசனை வீசிற்று. "ஏது இவ்வளவு தூரம்? எப்பொழுது வந்தீர்கள்?" என்று கேட்டேன். "கிறிஸ்மஸ் விடுமுறையில் நண்பர்களையெல்லாம் பார்க்கலாமென்று வந்தேன். அதோடு கிண்டிக் குதிரைப் பந்தயம் நடக்கிறதோ இல்லையோ! எனக்கு நாலு காசு கிடைத்தால் உனக்கு ஆக்ஷேபணையில்லையே" என்றார். "பணம் கைக்கெட்டிய மாதிரி பேசுகிறீர்களே" என்றேன். "ஆக்ஷேபணையென்ன! லாபத்தில் நமக்கு வீதம். நஷ்டம் பணங்கட்டியவனுடையது" என்றார். வேடிக்கை பார்க்க அன்று அவருடன் கிண்டிக்குச் சென்றேன்.

★★★★★


கிண்டியிலே பந்தய தினத்தன்று லக்ஷக்கணக்கில் பணம் புரளுகிறது. எங்கிருந்துதான் குவிகிறதோ சொல்லி சாத்தியமில்லை. கையிருப்புப் பணம், கடன் வாங்கும் பணம், கக்ஷிக்காரன் பணம், கஜானா பணம் எல்லாம் ஒன்று சேருகின்றன. கையை நீட்ட வேண்டியதுதான் தாமதம், பணம் கிட்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். மேதாவிகளும் மதி மயங்குவதுதான் ஆச்சர்யம். கிண்டியில் தங்கம் விளையவில்லை; பலருடைய பணத்தைச் சிலருக்கு வீதித்துக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் ஆசை யாரை விட்டது? ஆசை வெட்கம் அறியாது. குருட்டு நம்பிக்கைக்கு குறைவில்லை. குதிரையின் தலையையும் வாலையும் அறியாதவர் ஆரூடத்தில் இறங்கி விடுகின்றனர்.

ராசி சக்கரம் போட்டு நாழிப் பொருத்தம் நக்ஷத்திரப் பொருத்தம் கணிக்கின்றனர் சிலர். இது தவிர, குதிரை சொந்தக்காரன். பழக்குகிறவன், ஏறுகிறவன், கழுவுகிறவன், இவர்களெல்லாரும் காதோடு காது வைத்து 'குசுகுசு' என்று பேசுகிறது வேறு. மொத்தத்தில் எல்லாரும் எதையும் நம்பக் கூடிய பக்குவத்தில் இருப்பது கண்கூடு.

சரியான 'டிகாணா' அண்ணாவய்யங்காருக்கு! எல்லாருடனும் உறவாடினார். எல்லாம் தெரிந்தவர்போல் பேசினார். அண்ணாவய்யங்காரைக் குறி கேட்க ஆரம்பித்தனர். ஒவ்வொருவரிடம் வெவ்வேறு குதிரை ஜெயிக்கும் என்று கயிறு கட்டி விட்டார். ஒவ்வொருவரையும் தனக்கும் சேர்த்து பத்து ரூபா கட்டச் சொன்னார். ரேஸ் முடிந்ததும் ஜெயித்த குதிரைமீது யார் பணம் கட்டினானோ அவனிடம் வீதம் பெற வட்டமிட்டார். தோத்தவன் கிட்டே மறுபடியும் அண்டவில்லை. எட்டு ரேஸ் அன்று நடந்தது. அண்ணாவைய்யங்காருக்கு ரூ 475 மிச்சம்! அச்சு இல்லாமல் அவர் தேர் ஓடிற்று! சற்று உஷாராய் சுற்றுமுற்றும் பாருங்கள்! அண்ணாவைய்யங்கார் பரம்பரையை எங்கும் காணலாம். தெய்வீக குணம் அவரிடம் உண்டு. சர்வ வியாபி.

ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன்

© TamilOnline.com