ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன்
எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திக்குகளில் இயங்கியவர், ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன். இவர், நவம்பர் 28, 1889 அன்று, தஞ்சை மாவட்டத்தில் கண்டரமாணிக்கத்தில் பிறந்தார். தந்தை ரகுநாத ஐயங்கார். ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். ஸி.ஆர். ஸ்ரீநிவாஸனின் மாமா ஏ. ரங்கசாமி ஐயங்கார் சுதேசமித்திரன் இதழின் ஆசிரியராக இருந்தார். அவரது வேண்டுகோளின்படி, ஸ்ரீநிவாஸன், 1915-ல், சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பணி சேர்ந்தார். இதழின் மேலாளராகவும் செயல்பட்டார். 1928-ல் சுதேசமித்திரன் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1934-ல் இதழின் மேலாண்மை அதிகாரி ஆனார். 1955-ல் பணி ஓய்வு பெற்றார்.

ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் இதழாளராக மட்டுமல்லாமல் வங்கி, தொழில், வணிகம் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தொழில் முனைவோராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டார். தக்காண சர்க்கரை நிறுவனம், இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்ஸ், காவிரி நூல் நெசவு ஆலை, ஈ.ஐ.டி. பாரி குழுமம் போன்றவற்றின் தலைவராகப் பணிபுரிந்தார். 1937 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களுள் ஒருவராகச் செயல்பட்டார். லண்டனிலுள்ள 'Institute of Directors' அமைப்பின் உறுப்பினராகவும், சென்னைத் தேசியக் கல்விச் சங்கத் (National Educational Society) தலைவராகவும் பணியாற்றினார்.



தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கத்திலிருந்து அதன் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக உறுதுணையாக இருந்தார். 1940-50லும், 1951-52லும் அனைத்திந்திய செய்தித்தாள் ஆசிரியர்கள் மாநாட்டின் (All India News paper Editors' Conference) தலைவராகப் பொறுப்பு வகித்தார். இந்தியா மற்றும் கீழ்த்திசை நாடுகளின் செய்தித்தாள் சங்கத்திலும் (Indian and Eastern Newspaper Society) பத்திரிகை விநியோகத் தணிக்கைக் குழுவிலும் (Audit Bureau of Circulation) தலைவராகப் பணியாற்றினார். சர்வதேசப் பத்திரிகை அமைப்பின் இந்தியக் கிளைத் தேசியக் குழுத் (National Committee of the International Press Institute) தலைவராகப் பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சென்ற இந்திய பத்திரிகை ஆசிரியர் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1950ல் நடந்த இம்பீரியல் பிரஸ் மாநாட்டின் இந்தியப் பிரதிநிதியாகச் செயல்பட்டார். கானடாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் சென்று வந்தார்.

தொழில் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் (Madras Institute of Technology) நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார்.

ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த விற்பன்னர். இவ்விரு மொழிகளிலும் எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவராக இருந்தார். Standards and Values, A.B.C. Talks போன்ற நூல்கள் இவரது சிறந்த ஆங்கிலப் புலமைக்குச் சான்றாகும். சுதேசமித்திரன் இதழில் பல கட்டுரைகளையும், கதைகளையும் எழுதி உள்ளார். 'தராசு' என்ற புனைபெயரில் பிரபலங்கள் சிலரைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. பாரதியின் எழுத்திற்கும் பேச்சிற்கும் ரசிகராக இருந்த ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், அவரைப் பல விதங்களிலும் ஆதரித்து, சுதேசமித்திரனில் தொடர்ந்து எழுத வைத்தார்.

ஜனவரி 29, 1962-ல், 72-ம் வயதில் ஸ்ரீநிவாஸன் காலமானார்.

தமிழின் முன்னோடி இதழாசிரியர்களுள் ஒருவராக மதிக்கத் தக்கவர் ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன்.

அரவிந்த்

© TamilOnline.com