தென்றல் பேசுகிறது...
"மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி" என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அந்தக் கோல்தான் வளையாது, நீதி, நெறி வழுவாது நிற்கும் செங்கோல். அதன் அடையாளமாக, தமிழகத்தின் சிறந்த ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனம், இந்தியா சுதந்திரம் பெற்ற புனித இரவில், ஆட்சி மாற்றத்தின் குறியீடாக, அழகிய செங்கோல் ஒன்றை அன்றைய பிரதமரின் கரங்களில் வழங்கியது. அக்காலத்தில் தொடங்கி, அண்மைக் காலம்வரை தொடர்ந்துவரும் சான்றோருக்கு எதிரான மனச்சாய்வுகளின் காரணமாக, அந்தச் செங்கோல் 'கைத்தடி' எனப் பெயரிடப்பட்டு ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெருங்குற்றம் இப்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மன்னவர் அவையானாலும், எளியோர் இல்லமானாலும் ஆன்மீகச் சான்றோர் வரவேற்கப்பட்டு, அவர்களின் தன்னலமற்ற செம்மொழிகள் ஆர்வத்துடன் செவி மடுக்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால், கதை, கவிதை, நாடகம், திரைப்படம், சின்னத்திரை, மேடைப் பேச்சு என்று கையில் அகப்பட்ட எல்லா ஊடகங்கள் வழியாகவும் சாதுக்களும் சான்றோர்களும் சதித் திட்டமிடும் இழிந்தோராகச் சித்திரிக்கப்பட்டனர். மக்கள் முற்றிலும் சான்றோருக்கு எதிராக மூளைச் சலவை செய்யப்பட்டனர். ஆதீனங்களையும் பீடங்களையும் சமுதாய எதிரிகளாகக் கருதும் அளவுக்குத் திசை திருப்பப்பட்டனர். ஆனால், "தருமம் மறுபடி வெல்லும்" நாள் வந்தது.

மே 27, 2023 அன்று, திருவாவடுதுறை, மயிலாடுதுறை, தருமபுரம் உட்பட்ட சான்றாண்மை மிக்க 20 ஆதீனகர்த்தர்கள், தனி விமானத்தில் டெல்லிக்குத் தருவிக்கப்பட்டனர். அங்கே மங்கள இசையும் தேவாரமும் கோளறு பதிகமும் ஒலித்தன. பிரதமர் மோதி அவர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்று, அவர்களிடம் ஆசி பெற்று, செங்கோலைக் கையில் வாங்கினார். மறுநாள் அது புதிய பாராளுமன்ற அவையில் நிறுவப்பட்டது. தமிழரை இழிவுபடுத்திய சரித்திரப் பிழை ஒன்று சரி செய்யப்பட்டது. "கோன்முறை அரசு செய்க" என்று நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.

★★★★★


சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற மகத்தான வரலாற்று நாவல்களைக் கையிலெடுத்து, மேடை வடிவம் கொடுத்து, இயக்கி, மக்கள் முன்னே வைக்க ஒரு பெரிய தைரியம் வேண்டும். அந்தத் தைரியத்தை மேடை நாடக வடிவில் சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலும் பிற இடங்களிலும் மேடை நாடகங்களாகக் கண்டு ரசித்தோர் ஆயிரம் ஆயிரம் பேர். இவையிரண்டு மட்டுமே அல்ல, இன்னமும் பல நாடகங்களை மேடையேற்றியவர் பாகீரதி சேஷப்பன். இந்த இதழ் அவரது நேர்காணலைத் தாங்கி வருகிறது. சிறுகதைகள், எழுத்தாளர், மேலோர் வாழ்வில் எல்லாமே சுவையானவை. வாசியுங்கள், தென்றலை நேசியுங்கள்.

தென்றலின் பல்சுவை மணிக்கபாடம் திறக்கிறது, இதோ உங்களுக்காக...

தென்றல்
ஜூன் 2023

© TamilOnline.com