பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் தமிழ் நாடகமான 'மஹரிஷி' கலிஃபோர்னியாவின் காஸ்ட்ரோ வேலியில் 1 ஏப்ரல் 2023 அன்று அற்புதமாக அரங்கேறியது.
"நான் யார்?" என்ற ஊடுருவும் கேள்வியுடன் தன் பக்தர்களை ஆன்ம விசாரணைக்குத் தூண்டியவர் பகவான் ரமண மஹரிஷி. இவர் தமிழ்நாட்டின் திருச்சுழியில் பிறந்தார். இயற்பெயர் வெங்கட்ராமன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த வெங்கட்ராமன் மதுரையில் தனது சித்தப்பாவுடன் வளர்ந்தார்.
இந்த நாடகம் சூரி நாகம்மா என்னும் பக்தை தன் அனுபவங்களை நினைவு கூர்வதாகத் தொடங்குகிறது. பகவான் ரமணரின் பாத்திரம் 1940களில் அவர் இருப்பது போன்று தொடங்கி, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளைக் காண்பித்து, இளம் வெங்கட்ராமன் மரண அனுபவத்தில் சுயத்தை உணர்ந்து அருணாச்சலத்திற்குச் செல்வது காட்சியாக்கப் பட்டுள்ளது.
இளம் ரமணர் நன்கு அறியப்பட்ட ஞானியாகத் திகழ்கிறார். அவர் தனது பக்தர்களின் விருப்பத்துக்கு இணங்கி ஆசிரமத்தில் வாழ்கிறார். அப்படி ஞானிகள் மக்கள் நலனுக்காக சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை ஸ்ரீமத் பகவத்கீதை 'லோக சங்கிரஹம்' என்று சொல்கிறது. இருப்பினும் அவர்கள் தண்ணீரில் தாமரை இலையைப்போல பாதிக்கப்படாமல் வாழ்கிறார்கள். பகவான் வாழ்நாள் முழுவதும் ஆசிரமத்திலேயே இருந்தார். அவருடைய வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் பெற பல்லாயிரக் கணக்கானோர் வந்தார்கள். மஹரிஷியை தரிசித்த அனுபவத்தைப் பற்றி எழுதிய பால் பிரன்டன் (Paul Brunton) அவரது பிரபலமான 'Search in Secret India' மூலம் பகவானை மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
பொருத்தமான பின்னணிப் படங்கள் நம்மை 1890 முதல் 1950 வரையிலான தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சென்றன. தெய்வீகத் தன்மைக்கும் நாடகத்தில் வரும் சம்பவத்துக்கும் ஏற்றாற்போல் பின்னணி இசை இருந்தது. மேடையில் உள்ள ஒவ்வொரு பொருளும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. ரமணரின் சரித்திரம் தெரிந்தவர்கள் நன்றாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
பாம்பே சாணக்யாவின் எழுத்தில் ரமண மஹரிஷியின் போதனைகளும் அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கியத் தருணங்களும் அழகாகப் பின்னப்பட்டிருந்தன. அந்த இளைஞன் (ரமணர்) உலக இன்பங்களிலோ தன் உடலைப் பற்றியோ அக்கறையின்றி ஆழ்ந்த சமாதியில் நிலைத்திருப்பதைக் காண்கிறோம். ஒரு சில ஆரம்பகால பக்தர்கள் அவர் பெரிய ஞானி என்று அடையாளம் கண்டுகொண்டு, தினமும் அவருக்கு உணவளித்து பராமரிப்பதைப் பார்க்கிறோம். அவரது தாயார் வீடு திரும்பும்படி அவரிடம் கெஞ்சும் ஒரு நெகிழ்ச்சியான காட்சியைக் காண்கிறோம்.
"நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்ற அவரது சகோதரரின் கேள்வியால் தூண்டப்பட்டு, பதினாறு வயது ரமணர் எல்லாவற்றையும் துறந்து அருணாசலம் செல்வது பகவத் கீதையின் உச்சமான ஸ்லோகத்தின் (18.66: சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ) தத்துவத்தை எதிரொலிக்கிறது.
'மஹரிஷி' நாடகத்தை பாம்பே சாணக்யா உருவாக்கி, எழுதி, இயக்கி இந்தியாவின் பல நகரங்களில் அரங்கேற்றியுள்ளார். திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் அரங்கேற்றப்பட்ட ஒரே நாடகம் இதுதான் என்ற பெருமை இந்த நாடகத்திற்கு உண்டு. திரு சாணக்யா புகழ்பெற்ற திரை இயக்குநர் K. பாலச்சந்தருடன் இணைந்து பல வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். Fastflix என்ற YouTube சானலையும், கலாமந்திர் என்ற நாடகக் குழுவையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். எண்ணற்ற TV தொடர்களை எழுதி இயக்கி இருக்கிறார். YouTube-ல் வெளியான அவரது தொடர் 'கர்மா' உலகம் முழுவதும் பல ஆயிரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1930களில் அக்ரகாரம் பின்னணியில் நடக்கும் கதை அது. தற்போது சங்கரா TVயிலும் யூட்யூபிலும் இவரது 'பெரியவா' தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. காஞ்சி மகாபெரியவரை வழிபடும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையைப் பின்னணியாகக் கொண்டது அந்தத் தொடர். 2006-ல் சிறந்த நாடகக் குழுவிற்கான விருதை அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பாம்பே சாணக்யாவிற்கு வழங்கி கௌரவித்தார்.
ரமண மஹரிஷியின் போதனை விளக்க எளிமையானது. முயற்சி செய்யவும் எளிதானதுதான். ஆனால் அதே நேரத்தில், விடாமுயற்சியுடன் அவ்வழி செல்வது மிகக் கடினம். கேள்வி பதில்கள் முறையில் இது பல்வேறு தருணங்களில் நாடகத்தில் காட்டப்பட்டுள்ளது. "நான் யார்?" என்ற வினாவுக்குச் சுருக்கமாக விடை கூறலாம். ஆனால் பகவானின் அறிவுரை இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்கிறது. யார் வேண்டுமானாலும் இந்தக் கேள்விக்கு சாதாரணமான பதில்களை அளிக்கலாம் (பெயர், தொழில், சமூகத்தில் அந்தஸ்து, நாடு, சமூகம், அலுவலகத்தில் பதவி அல்லது குடும்பத்தில் அவர்களின் பங்கு).
ஆழமாகச் சிந்தித்தால் அவர்கள் தங்கள் "நான்" என்பதை மனம், அறிவு, இதயம் என்று விளக்குவார்கள். அவை அனைத்தும் மாறுகின்ற உருவங்களே. இன்னும் ஆழமாகச் சென்றால் நிலையாக மாறாமல் இருப்பது என்ன? இந்த 'நான்' என்பது என்ன? ரமண மஹரிஷியின் போதனை அத்வைத வேதாந்தத்தின் உச்சமான பாடமே ஆகும்.
சில சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் இங்கே.
ஒரு பக்தர் பகவானிடம் (அஷ்டாங்க) யோகம் போன்ற மற்றொரு வழியைப் பின்பற்றுபவர்கள் பற்றிக் கேட்கிறார். பகவான் ரமண மஹரிஷியின் பதில்: நீங்கள் ஒரு மாட்டு வண்டியை இலக்குக்கு கூட்டிச் செல்ல விரும்புகிறீர்கள். யோகம் என்பது நீங்கள் வண்டியில் அமர்ந்து காளைகளை வழி நடத்துவது. ஆனால் "நான் யார்" என்பது அதே மாடுகளின் முன்னால் சென்று, அவற்றைப் புல்லால் கவர்ந்து, அதே இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றது.
மற்றொரு பக்தரின் கேள்வி: "பகவானே, மக்கள் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்கிறார்களே". பகவானின் பதில்: "உங்கள் மனதுக்கு விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பது மிகவும் கடினம் என்று சொன்னீர்கள். எனக்கோ விஷயங்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் கடினம். எனவே பெரும்பாலான நேரங்களில், நான் மீண்டும் உலகிற்கு வந்து கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நிலை".
ஆயிரம் வில்வ இலைகள் கொண்ட விரிவான அர்ச்சனை செய்ய எச்சம்மா பாட்டி திட்டமிடும் காட்சி உள்ளது. பகவான் இரண்டு முக்கியமான விஷயங்களை கூறுகிறார்: (1) உண்மையான எண்ணம்/பக்தி முக்கியமானது (2) எளிமையான அர்ப்பணமே சிறந்தது.
அவரது தாயார் மறையும் தருணம் ஒரு நெகிழ்ச்சியான காட்சி. அதில் பகவான் அத்வைத வேதாந்தத்தின் மிக உயர்ந்த உண்மையை மட்டுமே நமக்குக் கற்பிக்கிறார். ஆன்மா அழியாதது. உடல்-மனம் மட்டுமே இறக்கிறது. ஆன்மா என்பது உடலோ மனமோ அல்ல.
சுவாமி ஈஸ்வரானந்தாவின் அறிமுகப் பேச்சு சுருக்கமாகவும் ரமணரின் மேன்மையை விளக்கும்படியும் இருந்தது. "ஏன் விவேகசூடாமணியைப் படிக்கிறீர்கள்?" என்று ஒரு பக்தர் ரமணரிடம் கேட்டதை அவர் விவரித்தார். மஹரிஷியின் பதில், "எனது நிலையைப் பற்றிய சங்கரரின் விளக்கத்தைப் படிக்க விரும்பினேன்".
பாகீரதி சேஷப்பன் இயக்கம் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. உதவி இயக்குநர், மேடை நிர்வாகம், ஒலி, ஒளி மேற்பார்வை என்று பல பொறுப்புகளை ஏற்று வேணு சுப்ரமணியம் சிறப்பாக நாடகத்தை ஒருங்கிணைத்தார். ஆடை அலங்காரங்களைச் சிறப்பாக விஜி ஶ்ரீராமன் வடிவமைக்க, ரயன் நாதனின் ஒப்பனையில் மயிலாக அழகாக மேடையை மகதி அலங்கரித்தார். அரங்க அமைப்பில் ஒவ்வொரு பொருளையும் நித்யவதி சுந்தரேஷ் கவனமாக ஏற்பாடு செய்திருந்தார்.
அனைத்துப் பாத்திரங்களிலும் ஒவ்வொருவரும் பொருந்தி நடித்திருந்தது நாடகத்தின் சிறப்பு. எச்சம்மா பாட்டியாக அனுவும், முதலியார் பாட்டியாக தீபாவும், கீரைப் பாட்டியாக செல்வியும் மேடையேறினர். சிறுவயது ரமணராக விஷ்ணுவும், அவரது நண்பர்களாக வந்த மற்றச் சிறுவர்களும் அசாத்தியமாக நடித்தது அனைவரையும் கவர்ந்தது. பதின்ம வயது ரமணராக மானஸ் ஹரிஷங்கர், இளவயது ரமணராக பத்ரி மிகச் சிறப்பாக நடித்தனர். வயதான ரமணராக ஶ்ரீராமன் சபேசன் அற்புதமாக அந்தப் பாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.
ரமணரின் தாயாக வசந்தி விஸ்வநாதன் நடிப்பில் காட்டிய பரிதவிப்பு கண்களைக் குளமாக்கியது. சூரி நாகம்மாவாக சுஜாதா கோபாலும் அனைவரின் பாராட்டையும் பெற்றார். பால் பிரண்டனாக அமெரிக்கர் பீட்டர் பெர்க்கிங் நடித்திருந்தது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் நாடகம் நடந்த இரண்டு மணி நேரமும் மெய்மறந்து காட்சிகளில் ஒன்றிவிட்டனர். அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாராட்டியது குழுவினரின் கடும் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.
இந்த நாடகம் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயிற்சி செய்யப்பட்டு, மார்ச் 2020 இல் அரங்கேற்றப்பட இருந்தது. ஆனால் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. எனவே நாடகக் குழு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி மற்றொரு ஆண்டு பயிற்சிக்குப் பிறகு அரங்கேற்றியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தொடரவும், நல்ல காரியங்களுக்கு உறுதுணையாக இருக்கவும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
புற்றுநோய் அறக்கட்டளையுடன் (Cancer Institute Foundation) பாரதி தமிழ்ச் சங்கம் மற்றும் ஶ்ரீ ரமண மஹரிஷி மையம் (Sri Ramana Maharishi Heritage - https://www.srmh.org) இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். விரிகுடாப் பகுதி நன்கொடையாளர்கள் மனம் நெகிழ்ந்து $50,000 மேலாக நன்கொடை கொடுத்தனர். நாடகத்தின் முழு வருமானமும் கேன்சர் இன்ஸ்டிடியூட் அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஆதரிப்பதற்கெனக் கொடுக்கபட்டது. இத்தொகை திருவண்ணாமலையில் இருக்கும் புற்றுநோய் முன்பரிசோதனை மையத்தின் (Cancer Screening Center) நிர்வாகச் செலவிற்குப் பயன்படுத்தப்படும்.
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் விவரித்தபடி, ஸ்திதப் பிரக்ஞராக (2.55: ஆத்மன்யேவ ஆத்மனா துஷ்டஹ), ஆத்ம சாட்சாத்காரம் பெற்ற ஞானியாக ரமணரை இந்த நாடகம் துல்லியமாகச் சித்திரிக்கிறது. மஹரிஷியின் போதனைகளைக் கற்று, வாழ்வில் கடைப்பிடித்து, ஆத்மானந்தத்தில் திளைப்போமாக.
கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் |