1991ம் ஆண்டு முதல், கே.கே. பிர்லா நிறுவனத்தாரால் வழங்கப்பட்டு வருவது சரஸ்வதி சம்மான் விருது. இந்திய அரசின் 22 பட்டியல் மொழிகளில் வெளியாகும் சிறந்த உரைநடை, கவிதை அல்லது இலக்கியப் படைப்பிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்று இது.
விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை முன்வைத்து இவ்விருது வழங்கப்படுகிறது. இதுவரை இந்திரா பார்த்தசாரதி (1999), ஏ.ஏ. மணவாளன் (2011) ஆகியோர் தமிழுக்க்காக இவ்விருது பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்படுகிறது. சிவசங்கரி, 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 36 குறுநாவல்கள், 45 நாவல்கள், 15 பயண இலக்கியங்கள், 7 கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்டவற்றை எழுதி உள்ளார். தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருது உள்படப் பல்வேறு விருதுகளை பெற்றவர்.
சிவசங்கரி, 2019ல் எழுதிய, 'சூர்ய வம்சம்' என்ற தன் வரலாற்று நுாலுக்காகவும் அவரது பத்தாண்டு கால இலக்கியப் பங்களிப்புக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பதினைந்து லட்சம் ரூபாய் பரிசு, பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் கொண்டது. |