·பெப்ருவரி 12, 2005 அன்று பாரதீயக் கோவிலில், சுனாமி நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தியது. 'டெட்ராயிட் பிஸ்தாஸ்' எனும் நகைச்சுவை நாடகமும் அதையடுத்து சந்திரா நூரானி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடந்தன.
இது தமிழ்ச்சங்க நிகழ்ச்சியான போதும், பலமொழி மக்களும் வந்திருந்தனர். எனவே நிகழ்ச்சியில் தெலுங்கு, மலயாளம் மற்றும் ஹிந்திப் பாடல்களும் இடம்பெற்றன. இதில் பங்கேற்ற பாடகர்களும் இசைக் குழுவினரும் கருணைகொண்ட மனதோடு இலவசமாய்ச் செய்து கொடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தாற்போல் இளம் பிஞ்சுகள் பாடிய 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடல் அரங்கத்தை நெகிழவைத்தது.
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் கானா கஜானா மற்றும் ஆன் ஆர்பர் (Khana Khazana, AnnArbor) இலவச உணவும் ஹாட் பிரட்ஸ் மற்றும் கார்டன் சிடி (Hot Breads, Garden city) இலவச கேக்குகளும் வழங்கின. இவ்வருடம் 11 பேர் கொண்ட இளைஞர் குழு உணவுப் பொட்டலம் கட்டுதல், பின்பு தூய்மை செய்தல் மூலம் மட்டும் அல்லாமல் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளுதல் மூலமும் வந்திருந்த பெற்றோர்களுக்குப் பேருதவி செய்தனர்.
இந்த நிகழ்ச்சி வழியே 6000 டாலருக்கு மேல் திரட்டப்பட்டது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, வந்தவர்களை உபசரித்த 2005 நிர்வாகக் குழுத் தலைவரான தேசிகன் சக்ரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அம்மாலைப் பொழுதைப் பயனுள்ளதாக்கினார்கள். சுனாமி பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மிச்சிகன் குளிரையும் மீறி இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து உதவியும் செய்தோரின் அக்கறை பாராட்டத்தக்கது.
சங்கீதா சாய்கணேஷ் (ஆசிரியர், 'கதம்பம்', மிச்சிகன் தமிழ்ச் சங்க மாத இதழ்) |