பாலைவனச் சோலை (அத்தியாயம் 5)
அன்றைய நாள் மிகவும் வேகமாகப் போனது. அருணுக்கு பள்ளியில் நேரம் போனதே தெரியவில்லை. காலையில் அம்மாவோடு நடந்த பேச்சு மறந்தே போய்விட்டது. சாயந்திரம் வீடு வந்து சேர்ந்தான். எப்போதும் போல அம்மாவின் கார் வீட்டின் வெளிப்புறம் நின்று இருந்தது. அம்மா வீட்டுக்கு வந்து விட்டார் என்பது தெரிந்தது.

கையில் இருந்த வீட்டுச் சாவியை வைத்து கதவைத் திறந்து உள்ளே போனான். எப்பொழுதும் போல வீட்டின் பின்புறம் இல்லாமல், அன்று டைனிங் டேபிள் அருகில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். அருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மாவின் தோட்ட வேலை நேரம் மற்றவர்கள் யாரும் வீட்டில் இல்லாதபோது. அவருக்கு அது ஒரு தியானம் போல. அதை விட்டுக் கொடுக்கவே மாட்டார்.

அம்மாவைப் பார்த்தவுடன் காலையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஏதோ பேச நினைத்தவன், எங்கே அம்மா இன்னும் கோபத்தில் இருக்கிறாரோ என்று நினைத்து, பையை ஓரமாகத் தரையில் வைத்து விட்டு, அறைப்பக்கம் மாடிக்குப் போனான். அவனுக்காகவே காத்திருந்தது போல பக்கரூ வந்து அவன்மேல் துள்ளிக் குதித்தது. பக்கரூவை தூக்கிக் கொஞ்சிவிட்டு தன் அறைப்பக்கம் போனான்.

கீதா ஓரக்கண்ணால் அருணைப் பார்த்துக் கொண்டிருந்தார். மாடிக்குப் போனவன் அரை மணி கழித்து, கை கால் முகம் கழுவிவிட்டுக் கீழே இறங்கி வந்தான். பக்கரூவும் படியில் இறங்கி வந்தது. வந்தவன், தரையில் இருந்த தனது பையை எடுத்து அதிலிருந்து சில நோட்டுப் புத்தகங்களை எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்தான். கீதாவின் எதிர்ப்புறம் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான். அம்மாவிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

என்ன தோன்றியதோ, சட்டென்று எழுந்து சமையலறை பக்கம் போனான். அங்கே ஃப்ரிட்ஜ் திறக்கும் சத்தமும், பின்னர் மைக்ரோவேவ் சத்தமும் கேட்டன. ஒரு கோப்பையில் பால் கொண்டு வந்து அம்மா எதிரே உட்கார்ந்து, பாலைக் குடித்துக் கொண்டே வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பித்தான்.

கீதாவை வெறுப்பேற்றச் செய்தானா, இல்லை புதுப் பழக்கமோ தெரியவில்லை, அவன் கைகளை அவ்வப்போது முகர்ந்து கொண்டு ஆழ்ந்த மூச்சு விட்டான். 'ம்ம்ம் நல்லா மணக்குது' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். கீதா ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.

பாலைக் குடித்தபின் அருண் கவனத்தை வீட்டுப் பாடத்தில் திருப்பினான். அம்மாதான் முதலில் பேசினார்.

"உன்னோட நாள் எப்படி இருந்தது கண்ணா?"

அம்மா காய் நகர்த்திவிட்டார்.

"பிரமாதம். ஆனா ரொம்ப பிசியான நாள்!" உற்சாகத்துடன் பதில் கொடுத்தான் எப்போது அம்மா தன்னிடம் பேசப் போகிறார் என்று காத்திருந்தவன் போல மகிழ்ச்சியோடு சொன்னான்.

"என் அலுவலகத்திலேயும் நீ சொன்ன விளம்பரம் பத்தி சிலபேர் நீ சொன்ன மாதிரிதான் சொன்னாங்க..."

அருண் முகத்தில் ஒரு திடீர்ப் பிரகாசம் தெரிந்தது. "10 நிமிஷம் அம்மா. நான் ஹோம்வொர்க் முடிச்சிருவேன்." அருண் கடகடவென்று வேலையை முடித்தான்.

"எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை கண்ணா, நான் வெய்ட் பண்றேன். ராத்திரிக்கு தோசைதான். எல்லாம் ரெடி. எனக்குப் பெரிசா வேலை இல்லை."

"சரி அம்மா."

அருண் வேலையை மும்மரமாக, ஈடுபாட்டோடு செய்தான். கீதா எழுந்து போய் இரண்டு நாள் செய்தித் தாள்களை எடுத்து வந்தார். இரண்டையும் பிரித்துப் பார்த்தார். இரண்டிலும் 6ஆம் பக்கத்தில் அதே விளம்பரம். எதிலும் கொஞ்சம்கூட மாற்றம் இல்லாமல் இருந்தது.

வேலையை முடித்த அருண், பையை எடுத்துக்கொண்டு மாடிப்படியில் தாவிச் சென்று தனது அறையில் வைத்துவிட்டுத் திரும்பினான்.

"நான் ரெடி அம்மா."

கீதா புன்னகையோடு தலை அசைத்தார். எதிர்ப்புறம் இருந்த அவனை தன் அருகில் வந்து உட்காருமாறு சைகை காண்பித்தார். கண் சிமிட்டும் நேரத்தில் அவன் அம்மா அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

"அம்மா, இந்த குடியிருப்புப் பகுதியைப் பாலைவனப் பகுதியில பண்ணப் பாக்கிறாங்க. அதுல இப்படிக் கட்டுறது முடியாத காரியம்."

"அதில என்னப்பா தப்பு. கொஞ்சம் அப்படி இப்படி நடந்தாலும் ஒரு பாதிப்பும் இல்லையே? அதுவும் இல்லாம ஏழைக் குடும்பங்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்கப் போறாங்களே!"

'அம்மா, பாலைவனத்தை அப்படியே விடணும் அம்மா. அதுல போய் இந்த மாதிரி குடியிருப்பு எல்லாம் கட்டக்கூடாது."

"அருண், land conservation vs. preservation, இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா கண்ணா உனக்கு?"

"கேள்விப் பட்டிருக்கேன். ஆனா, அவ்வளவு ஆழமா தெரியாது."

கீதா விளக்கினார். "Preservation அப்படியே வைச்சுக்கிறது. Conservation கொஞ்சம் அப்படி இப்படி வீடு கட்டினாலும் வேறமாதிரி அதே இடத்தை maintain பண்ணுறது. அதுக்காக கொஞ்சம் கமர்ஷியலைஸ் பண்றதுல தப்பு இல்லை. அதுல வர்ற வருமானத்தை நல்ல விஷயங்களுக்கு உபயோகப்படுத்தலாம்."

அருணிடம் இருந்து பதில் உடனே வந்தது. "இந்த மாதிரி இடத்தை வணிகமாக்குவது சரியில்லையே. அப்புறம் இயற்கை வளம் ஒண்ணுகூட இல்லாம போயிடும். அப்படியே போனா அப்புறம் இந்தக் கொள்ளைக்காரப் பசங்க எல்லாத்திலயும் கை வச்சிருவாங்களே!"

"அருண், உனக்கு அமேரிக்காவோட ஜான் மியோர் (John Muir) பத்தி தெரியுமா?"

"ம்… யாரு அந்த யோசமீட்டி ஆளா?"

"ஆமாம், அவரேதான். அவர் ஒரு preservationist. அவருக்கு எதிரா கிஃபோர்டு பின்ஷோ (Gifford Pinchot) அப்படின்னு ஒருத்தர். அவரோ ஒரு conservationist. இவங்க இரண்டு பேரும் அமெரிக்காவில் பொது நிலங்கள், நீ சொல்லுற இந்த மாதிரி இடங்கள் எல்லாம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் அப்டீன்னு நிறைய கருத்துகளைக் கூறியிருக்காங்க. இரண்டு பேருக்கும் நேர் எதிரான அணுகுமுறை. ஜான் மியோர் காடுகள், அடர்ந்த வனங்கள் போன்ற பொதுநிலங்கள இம்மிகூட அழிக்கக் கூடாது அப்படின்னு பிரசாரம் பண்ணினாரு. அதுதான் preservation கோட்பாடு. பின்ஷோ இன்னொரு பக்கம், பொது நிலங்களைக் கொஞ்சம் லாபத்திற்குப் பயன்படுத்தினால் தப்பே இல்லைன்னு பிரச்சாரம் பண்ணினார். அப்படி வர்ற வருமானத்தில ஒரு பங்கை நல்ல விதத்துல உபயோகப்படுத்தலாம் அப்படீன்னு சொன்னாரு. இது conservation கோட்பாடு. அவரை ஒரு செயல்முறை வாதின்னு (pragmatist) சொல்லலாம்."

"பின்ஷோ ப்ராக்மாடிஸ்டுன்னா, அப்ப ஜான் மியோர்?"

கீதா கொஞ்சம் தயங்கினார். பிறகு மெதுவாக, "என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கனவு வாதின்னு சொல்வேன், with all the due respects to him."

"இது ரொம்பக் கடுமையான கருத்து அம்மா."

'நான் அவரைத் தப்புன்னு சொல்லலையே. அவரது வழிமுறை நடைமுறைக்கு ஒத்து வராதுன்னு தானே சொல்றேன்."

"சுவாரசியமா இருக்கு. இதெல்லாம் பொது வெளியில இருக்கா அம்மா?"

"கண்டிப்பா. இதெல்லாம் அறிவு பூர்வமான விஷயங்கள். John Muir Vs Gifford Pinchot அப்படீன்னு இணையத்துல தேடிப்பாரு."

"அவங்க இரண்டு பேரும் சொன்னதன் கலவையாதான் நடக்குது இப்பல்லாம்."

நேரம் போனது தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். மணி 7 அடித்தது.

"கண்ணா வா. சாப்டுட்டு, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால இந்த விவாதத்தைத் தொடரலாமா?"

"ஆஹா, செய்யலாமே" என்றான் அருண் உற்சாகமாக.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com