முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாங்களே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதற்கு உங்கள் பரிந்துரை என்ன? கதிரவனின் பதில்: ஆரம்ப நிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:
* சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள் * நிறுவனர் குழுவைச் சேர்த்தல் * உங்கள் யோசனையைச் சோதித்து சீர்படுத்தல் * முதல்நிலை நிதி திரட்டல் * முதல்நிலை திசை மாற்றல் (initial pivoting) * முதல் சில வாடிக்கையாளர்கள் * விதைநிலை நிதி திரட்டல் * வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை * சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை மாற்றல் * முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல் * குழுவுக்குள் கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிதல் * வெற்றிக் கோட்டைத் தாண்டுவதில் தடங்கல்கள்
முதல் பகுதியில் குடும்ப நிதிநிலை இன்னல்கள் என்னென்ன நேரக்கூடும் என்பதை விவரித்தோம். அடுத்து நிறுவனக் குழுவைச் சேர்க்கும் முயற்சியில் நேரக்கூடிய இன்னல்களை விவரித்து வருகிறோம். சென்ற பகுதியில் இணைநிறுவனர்களையும் அடுத்த மட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்களையும் ஈர்த்து குழுவில் சேர்த்து, வெற்றிநிலை வரை தக்கவைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்று விவரித்தோம். இப்போது குழு இன்னலைப் பற்றிய மற்ற அம்சங்களை மேற்கொண்டு விவரிப்போம்.
குழுவைப் பற்றிய ஒரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆரம்ப நிலை நிறுவனங்களில், முதல் நிறுவனர் தொழில்நுட்ப வல்லுனராக இருப்பது பெரும்பாலும் பொதுவானதாகும். மேலும் குழுவில் மற்றவர்களும் பெரும்பாலாக தொழில் நுட்ப வல்லுனர்களாக இருக்கக் கூடும். சில முறை, விற்பொருள் மேலாளர் (product manager) ஒருவர் இருக்கக் கூடும். இது முதல் முதலில் பரவாயில்லை. அந்நிலையிலும் விற்பொருள் யோசனை சரியா என்று பரிசீலிக்கவும், மெருகேற்றவும் வாடிக்கையாளர்களை ஈர்த்து உரையாடும் திறன் குழுவில் ஒருவருக்காவது இருக்க வேண்டும். இந்த யோசனை சீர்சோதனை (validation) பற்றி மேற்கொண்டு இக்கட்டுரையில் சற்று பிறகு விவரிப்போம்.
அப்படி முதல்நிலை வாடிக்கையாளர் உறவுத்திறன் மட்டும் போதாது. பெருமளவு முதலீடு பெற வேண்டுமானால், முதலீட்டார் பொதுவாகக் குழுவில் தலைமை மேலாளர் (CEO) தகுதி பெற்றவராக இருக்கிறாரா என்று நிச்சயமாகச் சோதித்து அப்படி இருக்க வேண்டும் என்று நிபந்தனை இடுவர். சரி, அப்படியானால் தலைமை மேலாளருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று கேட்கலாம். அதுவே ஒரு பெரிய கதை! அதை மற்றொரு யுக்திக் கட்டுரையில் மிக விரிவாக உதாரணங்களோடு பார்ப்போம். இது இன்னல்களைப் பற்றிய கட்டுரை என்பதால் சுருக்கமாகக் கூறிவிட்டு அதில் உங்களுக்கு என்ன சிக்கல்கள் நேரக்கூடும் என்று மட்டும் விளக்குகிறேன்.
ஆரம்பநிலை நிறுவனத் தலைமை மேலாளருக்கு மிகச் சுலபமாகக் கூறக்கூடிய தகுதி என்னவாக இருக்கக் கூடும்? ஆம்! ஆம்! அதேதான்! அவர் ஏற்கனவே ஒரு ஆரம்பநிலை நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக இருந்து நிறுவனத்தை வெற்றியடையச் செய்திருந்தால் அது மிக முக்கிய நிரூபணமாகும் அல்லவா! அதிலும் அவர் வணிகரீதி நிபுணத்துவமும், நிறுவன வழிநடத்தல் (operations) திறனும் பெற்றவர் என்று ஏற்கனவே மூலதனத்தாருக்குத் தெரிந்திருந்தால் அவ்வளவுதான், மேற்கொண்டு பிரச்சனை இல்லை!
ஆனால் அத்தகைய பிரகாசமான நட்சத்திரம் உங்கள் குழுவின் தலைவராக இல்லாவிட்டால், தற்போது தலைவராக இருப்பவர் சில தகுதிகள் உள்ளவராக இருக்க வேண்டும். இதில் மிக முக்கியத் தகுதியாகக் கருதப்படுவது கதை சொல்லும் திறன்! என்னது? நிறுவனத் தலைவர் கதை சொல்லும் திறன் பெற்றிருக்க வேண்டுமா? என்ன கதைக்கிறீரா. என்கிறீர்களா?
இல்லவே இல்லை! இது உண்மையாகவே முதலீட்டார் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் தகுதி!
தலைவருக்கு விற்பனைத் திறன் மட்டும் அல்லது அதோடு வழிநடத்தும் திறன் மட்டும் இருந்தால் போதாது. நிறுவனத்தின் முக்கியக் கோட்பாடு என்ன, எதனால் வாடிக்கையாளர்களின் வலியம்சம் (pain point) என்ன, உங்கள் விற்பொருள் அல்லது சேவை எப்படி மிக முக்கியப் பலன் அளிக்கிறது, வருங்காலத்தில் ஏன் எப்படி உங்கள் நிறுவனம் ஒரு பெருநிறுவனமாக மேன்மேலும் வளர்ந்து திகழப் போகிறது என்பதை, முதலீட்டார் எளிதில் சட்டென்று உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் ஒரு கதைபோல் விவரிக்க முடிகிறதா என்று பரிசீலிப்பார்கள். அப்படி இல்லாவிட்டால், அவருக்கு வேறு திறன்கள் இருந்தாலும், கதை சொல்லக் கூடிய முதன்மை மேலாளர் ஒருவரைச் சேர்த்தாக வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அத்தோடு, தலைமை மேலாளருக்கு வணிகத் திறன், விற்பனைத் திறன், தொலைநோக்கு, வழிநடத்தும் திறன் போன்ற தகுதிகள் வெவ்வேறு அளவுக்குக் கலவையாக இருக்க வேண்டும். உங்கள் தற்போதைய தலைமை மேலாளர் அப்படியி இல்லாவிட்டால், அப்படி ஒருவரை ஈர்த்த பின்பே மூலதனமிட முன்வருவார்கள்; அல்லது, அப்படிப்பட்ட ஒருவரைத் தேடும் முயற்சியை ஆரம்பிக்கச் சொல்லி அதை ஒரு மூலதன நிர்ப்பந்தமாகவே வைப்பார்கள்.
அப்படி ஒரு புதிய தலைமை மேலாளரைக் குழுவில் சேர்த்துக் கொண்டு நிறைய மூலதனத்தையும் பெற்றுவிட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்து விட்டதா? அதுதான் இல்லை! பலப்பல நிறுவனங்களில் இது ஒரு பிரச்சனையைத் தீர்த்துவிட்டு சிறிது காலத்தில் பல பிரச்சனைகளைக் கிளப்புகிறது! புதிய தலைமை மேலாளர் வழிநடத்தி நிறுவனங்கள் வெற்றி காண்பதில்லை என்று நான் சொல்ல வரவில்லை! ஆனால் அதில் சில சிக்கல்கள் வரக்கூடும். அவற்றை வெற்றிகரமாக நிவர்த்தி செய்தால் நன்மை விளையும் என்றுதான் கூறுகிறேன்.
அப்படிப்பட்ட சிக்கல்கள் என்ன என்பதையும் மற்ற இன்னல்களைப் பற்றியும் அடுத்த பகுதியில் மேலே விவரிப்போம்.
(தொடரும்!)
கதிரவன் எழில்மன்னன் |