சேக்கிழார்
தோற்றம்
தொண்டை நாட்டின் வளமிக்க ஊர்களுள் ஒன்று குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சேக்கிழார். இயற்பெயர் அருண்மொழித் தேவர். 'கிழான்' என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களுக்கான சிறப்புப் பெயர். கூடல் கிழான், கோவூர் கிழான், புரிசை கிழான் என இலக்கியங்கள் குறிக்கும் சான்றோர்கள் பலர் இக்குடியிற் பிறந்தவர்களே. 'சேவூர்க்கிழார்' என்பதே மருவிப் பின்னர் சேக்கிழார் ஆனது என்ற கருத்து உள்ளது. அவ்வகையில் அறிவிற் சிறந்த சான்றோர் மரபில் சேக்கிழார் பிறந்தார்.

இளமைப்பருவம்
சேக்கிழார் முறைப்படி கல்வி பயின்று இலக்கண, இலக்கிய அறிவு மிக்கவரானார். புராண, இதிகாசங்கள், சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து தமக்கிணை யாருமில்லை என்னுமளவிற்கு உயர்ந்தார். சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த இவர், நாடெங்கும் பயணம் செய்து பல திருத்தலங்களைத் தரிசித்தார். சான்றோர்களின் வரலாற்றைக் கேட்டறிந்தார்.

ஒரு சமயம் திருநாகேஸ்வரம் சென்றவர், அவ்வாலயத்து இறைவன் மீது மிகுந்த அன்பு பூண்டவரானார். அளவற்ற அன்பின் காரணமாக தான் வசிக்கும் குன்றத்தூரில் 'திருநாகேஸ்வரம்' என்ற பெயருடைய ஆலயம் ஒன்றை எழுப்பி, தினந்தோறும் அங்கு சென்று வழிபட்டு வந்தார்.

கேள்வியும் பதிலும்
இந்நிலையில் 'தொண்டை நாடு சான்றோருடைத்து' என்னும் கூற்று உண்மையா என்று அறிய விரும்பிய இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன், தொண்டை நாட்டின் மன்னனுக்கு,

மலையில் பெரியது எது?
கடலில் பெரியது எது?
உலகில் பெரியது எது?

என்ற கேள்விகளை எழுப்பி அதற்குத் தொண்டை நாட்டுச் சான்றோர் மூலம் விடையளிக்கக் கேட்டுக் கொண்டான்.

மன்னனும் அதற்கான விடையைத் தந்தருளுமாறு அறிவிற் சிறந்த சான்றார் எனப் பெயர்பெற்றிருந்த சேக்கிழார் பெருமானிடம் வேண்ட, சேக்கிழாரும், அதற்குப் பதிலாகத் திருக்குறளிலிருந்து,

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலில் பெரிது

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


என்ற விடைகளை எழுதி அனுப்பினார்.

சேக்கிழார் அமைச்சராதல்
பதில்களைக் கண்டு மகிழ்ந்த சோழ மன்னன், இத்தகைய அறிவுடையவர் தனக்கு அமைச்சராக இருக்கும் தகுதியுடையவர் என்றெண்ணினான். தொண்டை நாட்டு மன்னனின் அனுமதியுடன் சேக்கிழாரை வரவழைத்தான். அவரைத் தனது முதலமைச்சராக்கி, 'உத்தமச் சோழ பல்லவன்' என்ற பட்டத்தை அளித்தான். அவரது ஆலோசனையின் பேரில் நல்லாட்சி நடத்தி வந்தான்.



பெரியபுராணத் தோற்றம்
சுகபோக வாழ்வை விரும்பிய மன்னன், அவ்வப்போது அவைப்புலவர்கள் மூலம் 'சீவகசிந்தாமணி' போன்ற சிற்றின்ப நாட்டத்தைத் தூண்டும் நூல்களை விரித்துரைக்கச் சொல்லிக் கேட்டு வந்தான்.

அதுகண்ட சேக்கிழார் வருந்தினார். மன்னனின் மனதைச் சைவத்தின்பால் திருப்ப விழைந்தார். ஒரு சமயம் அவர் மனம் துணிந்து, "மன்னா! சிந்தாமணி தமிழ்நயம் உள்ள காப்பியம்தான் என்றாலும் அதன் பாடுபொருள் வேறுபட்டது. சமணம் சார்ந்தது. சைவக் காப்பியமல்ல" என்று எடுத்துரைத்தார்.

"அப்படியானால் சைவம் சார்ந்த காப்பியங்களைப் பற்றி நீங்களே விளக்கிச் சொல்லுங்கள்!" என்றான் மன்னன்.

"தற்போது அப்படி எதுவும் காப்பியம் இல்லை. ஆனால் காப்பியத்துக்குரிய பொருள் பல உண்டு" என்று சொல்லி, தான் நாடெங்கும் சுற்றி அறிந்த சைவ நாயன்மார்களின் வரலாற்றை, அவர்தம் பெருமையை, சிறப்பை மன்னனுக்கு எடுத்துரைத்தார். அது கேட்டு மனம் மகிழ்ந்த மன்னன், மக்கள் பயனுற அதையே ஒரு காப்பியமாக இயற்றுமாறு அவரை வேண்டிக் கொண்டான்.

சேக்கிழாரும், "இறைவனின் திருவருள் கூட்டுவித்தால் அது நடக்கும்" என்று சொல்லி, "சிதம்பரம் தலத்தில் தங்கி, முழுக்க முழுக்க இறையுணர்வில் தோய்ந்தே அதனைப் பாடவேண்டும்" என்ற தன் விருப்பத்தைச் சொன்னார்.

மன்னனும் ஒப்புதல் தந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

உலகெலாம்...
தில்லை வந்த சேக்கிழார், அம்பலக்கூத்தன் முன் நின்று, "ஐயனே, அறிவதற்கரிய உன்னையும், உன் அடியவர்களின் பெருமையையும் சிறியேனாகிய நான் எவ்வாறு பாடுவேன்" என்று மனமிரங்கி, கைகூப்பி வேண்டி நின்றார்.

அப்பொழுது அங்கு பலரும் அதிசயிக்கும்படி 'உலகெலாம்' என்ற அருட்சொல் அசரீரியாக வானில் முழங்கிற்று. அதனையே முதற் சொல்லாகக் கொண்டு,

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


என்று பாடினார்.

தொடர்ந்து, சுந்தரர் அருளிய 'திருத்தொண்டத் தொகை'யை மூல நூலாகவும், நம்பியாண்டார் நம்பி எழுதிய 'திருத்தொண்டர் திருவந்தாதி'யை வழிநூலாகவும் கொண்டு, தாம் நாடெங்கும் பயணம் சென்று கண்ட, கேட்ட உண்மை வரலாறுகளையும், கல்வெட்டுகள், வரலாற்றுத் தரவுகள் மூலம் பெற்ற செய்திகளையும் இணைத்துத் தொகுத்து 'மாக்கதை' எனப்படும் 'திருத்தொண்டர் புராணத்தை'ப் பாடியருளினார்.

நூல் அரங்கேற்றம்
சேக்கிழார் பாடியதை அறிந்த மன்னன், அவரை நாடித் தில்லைக்கு வந்தான். முன்பு அமைச்சர் கோலத்தில் இருந்தவர், சிவனடியார் கோலத்தில் தற்போது இருப்பதைக் கண்டு, பாதம் பணிந்து வணங்கினான். அப்பொழுது, இறைவன் அசரீரியாக, "மன்னனே, யாம் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழான் 'தொண்டர் புராணம்' பாடி முடித்தான். அதன் உரை விளக்கத்தைக் கேட்டு இன்புறுவாயாக" என்று பணித்தார்.

அதைக் கேட்டு மன்னன், நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தான். சித்திரை மாதத்துத் திருவாதிரை தினத்தன்று நடராஜப் பெருமான் சன்னதியில் அப்புராணத்தை அரங்கேற்றம் செய்தார் சேக்கிழார். அதற்கு பொருள்விளக்கம் செய்ய ஆரம்பித்து, அடுத்த வருடத்துச் சித்திரை மாதத்துத் திருவாதிரை தினத்தன்று அதனை நிறைவு செய்தார்.

மன்னன் சேக்கிழாருக்குச் சிறப்பு செய்தல்
நூல் விளக்கத்தைக் கேட்டு நெகிழ்ந்த அநபாய சோழன் என்னும் பெயர் கொண்ட இரண்டாம் குலோத்துங்க சோழன், சேக்கிழார் பெருமானையும், அவர் இயற்றிய நூலையும் யானைமேல் ஏற்றி, தான் அவர்பின் அமர்ந்து கவரி வீசி, நகர் உலா வந்து சிறப்புச் செய்தான். 'திருத்தொண்டர் புராணம்' என்னும் அந்த நூலை பதினோரு திருமுறைகளோடு, பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்த்துப் பெருமைப்படுத்தினான். சேக்கிழாருக்கு, 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தான்.

பெரியபுராணச் சிறப்பு
தொண்டையும், தொண்டரையும் மையப்படுத்தி உருவான முதல் காப்பியம், தமிழின் ஒரே காப்பியம் பெரிய புராணம்.

பெரியபுராணம் இரண்டு காண்டங்களாகவும், பதிமூன்று சருக்கங்களாகவும் அமைந்துள்ளது. சுந்தரர் பாடிய நாயன்மார்களுடன், பாடிய அவரையும், அவரது பெற்றோர்களையும் சேர்த்து அறுபத்து மூன்று நாயன்மார்களாக்கி அவர்களது வரலாற்றைச் சேக்கிழார் பாடினார். 63 நாயன்மார்களுடன் 9 தொகையடியார்களையும் இணைத்து 4286 செய்யுள்களில் பாடியுள்ளார்.

பெரிய புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் 'பிள்ளை பாதி; புராணம் பாதி' என்கிற வழக்கு ஏற்பட்டது.

அக்காலத்து மக்களிடம் இருந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சமயப் பொறை, பூசல்கள், நீதிமுறைகள் என அனைத்தையும் நாயன்மார்களின் வரலாற்றின் வழியாகப் பெரியபுராணம் விளக்குகிறது.

அறிந்தோ, அறியாமலோ செய்யும் தவறுகளுக்கு, குற்றங்களுக்கு பரிகாரம் செய்வதன் மூலம் தீர்வு காணும் பழக்கம் இருந்ததை மனுநீதிச் சோழன் வரலாறு மூலம் அறிய முடிகிறது.

இளவயதிலேயே திருமணம் நிகழ்வது, பெண் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு பொருள் கொடுப்பது (இன்றைய வரதட்சணை), திருமணத்திற்குப் பின் மணமகனும், மணமகளும் தனி வீட்டில் வசித்தது (இன்றைய தனிக்குடித்தனம்) போன்றவற்றைக் காரைக்கால் அம்மையார் புராணம் காட்டுகிறது. பெண்களைப் போலவே ஆண்களிடமும் 'குஞ்சலம்' என்னும் முடியைச் சூட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது என்பதை 'கணம் புல்ல நாயனார்' புராணம் காட்டுகிறது.

அக்காலத்திலும் வறுமை சூழ்ந்த காலத்தில் பொன், பொருள், நகைகளை, மாங்கல்யத்தை விற்கும் வழக்கம் இருந்தது தெரிய வருகிறது. அக்காலத்தில் ஆசனத்தில் அமர்ந்து, முக்காலியில் உணவை வைத்து உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை சிறுத்தொண்டர் புராணம் மூலம் அறிய இயலுகிறது.

தண்ணீர்ப் பந்தல் வைப்பது, குளங்கள் வெட்டுவது போன்ற சமுதாய வளர்ச்சிக்கான அறச்செயல்கள் புரியும் வழக்கம் இருந்ததைப் பெரியபுராணம் காட்டுகிறது. அவற்றுக்குப் பெயர் சூட்டுபவர்கள், தங்கள் பெயரை அல்லது தாங்கள் தலைவராகக் கருதுவோரின் பெயரைக் கல்வெட்டில் எழுதி வைக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர் என்பதை அப்பூதியடிகள் வரலாறு மூலம் அறிய முடிகிறது.

இக்காலத்தில் நாள், நட்சத்திரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பது போல அக்காலத்திலும் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட்ட வரலாறை 'கோச்செங்கணான் நாயனார்' புராண வரலாறு மூலம் அறிய இயலுகிறது.

பொன், பொருள் போன்றவற்றை வைத்துச் சூதாடும் பழக்கம் இருந்தது என்பதையும், அதிலும் முதல் சில ஆட்டங்களில் போட்டியாளரை வெல்ல வைத்து ஆசை காட்டி, பின்னர் தொடர்ந்து தேர்ந்த சூதாட்டக்காரரே வெல்வது என்பதையும் ஏனாதிநாயனார் புராணம் மூலம் அறிய முடிகிறது.

அடிமைகளை வாங்கி விற்கும் வழக்கம் இருந்தது என்பதைக் குங்கிலியக் கலய நாயனார் புராணம் மூலம் அறிய முடிகிறது. அக்காலத்தில் நிலவிய வழக்காடும் முறை பற்றியும், தீர்ப்புக்கு முன் முறையாக விசாரித்தல், சரியான ஆவணங்கள் கொண்டு தரவுகளைச் சரிபார்த்தல், ஒப்பு நோக்கி உண்மை காணுதல் போன்றவை நிலவி வந்ததையும் சுந்தரர் புராணம் காட்டுகிறது.

மறைவு
'இதுகாறும் அமைச்சர் பணி புரிந்தது போதும், இனி சிவப்பணி புரியலாம்' என்று நினைத்த சேக்கிழார், தனது சகோதரர் பாலறா வாயரை அமைச்சராக்கி விட்டு, தான் தில்லையம்பதியிலேயே தங்கி சிவத்தொண்டுகள் புரிந்து வந்தார். தலந்தோறும் சென்று சிவபெருமானைத் தரிசித்து இனிதே வாழ்ந்து, இறுதியில் சிவபதம் அடைந்தார்.

பெரியபுராணம் என்னும் பெருமைமிகு படைப்பைத் தந்ததால் 64வது நாயன்மாராக சேக்கிழார் போற்றப்படுகிறார்.

குருபூஜை
சேக்கிழார் பெருமானின் குருபூஜை வைகாசி மாசம் பூச நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி!
ஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி!


பா.சு. ரமணன்

© TamilOnline.com