மணவை முஸ்தபா
'அறிவியல் தமிழின் விடிவெள்ளி' என்று போற்றப்படுபவர் மணவை முஸ்தபா. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் சார்ந்து பல நூல்களை எழுதியிருக்கும் இவர், 'பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம்' நூல் பதிப்பின் தொடக்கக் காலப் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். 'யுனெஸ்கோ கூரியர்' இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து என்ற ஊரில், ஜூன் 15, 1935 அன்று, மீராசா ராவுத்தர்-சையது பீவி இணையருக்குப் பிறந்தார். மணப்பாறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். புகுமுக வகுப்பை (பி.யூ.சி.) திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நிறைவு செய்தார். அதே கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.



மணவை முஸ்தபா, சில ஆண்டுகள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகப் பணியாற்றினார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் சார்ந்த பல நூல்களை எழுதத் தொடங்கினார். மணப்பாறை என்பதன் சுருக்கமான 'மணவை' என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு எழுதினார். சௌதாவுடன் திருமணம் நிகழ்ந்தது. அண்ணல் முகமது, செம்மல் சையத் மீரான் சாகிப் ஆகியோர் இவரது மகன்கள். மகள்: தேன்மொழி அஸ்மத்.

மணவை முஸ்தபா பெற்ற விருதுகளில் சில
தமிழக அரசின் திரு.வி.க. விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சிறப்பு விருது, காஞ்சி காமகோடி பீடம் வழங்கிய சேவா ரத்னா விருது, சிகாகோ தமிழ் மன்றம் வழங்கிய அறிவியல் தமிழருவி விருது, அறிவியல் தமிழ்த்தந்தை விருது, அறிவியல் கலைச்சொல் தந்தை விருது, அறிவியல் தமிழ் கலைச்சொல் வேந்தர் விருது, முத்தமிழ் வித்தகர் விருது, பாலம் கலியாணசுந்தரனாரின் அன்புப் பாலம் அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, உலகத் தமிழர் பேரமைப்பு வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது, தமிழ் வாகைச் செம்மல் விருது, கரந்தை தமிழ்ச்சங்கம் வழங்கிய உமா மகேசுவரனார் விருது, அறிவியல் தமிழ் வித்தகர் விருது, கணினி கலைச்சொல் வேந்தர் விருது, ராஜா சர். முத்தையா செட்டியார் விருது, அறிவியல் தமிழேறு விருது, அறிவியல் தமிழ்ச் சிற்பி விருது, ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பு விருது, செம்மொழிச் செம்மல் விருது, செம்மொழிக் காவலர் விருது, இயல் செல்வம் விருது, சான்றோர் விருது, ஆதித்தனார் விருது, எம்ஜி.ஆர். விருது, முரசொலி அறக்க்கட்டளை வழங்கிய கலைஞர் விருது


மணவை முஸ்தபா, 'யுனெஸ்கோ கூரியர்' இதழின் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் 35 ஆண்டுகள் செயல்பட்டார். 'புத்தக நண்பன்' என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாசிரியராகவும் இயங்கினார். கலைக்களஞ்சியம் மற்றும் அகராதி இயல் சார்ந்து கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, செம்மொழி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி எனப் பல நூல்களை எழுதினார். இஸ்லாமிய இலக்கியம் குறித்தும் பல நூல்களை எழுதினார். 'இஸ்லாமிய கலைக்களஞ்சியம்', 'இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?', 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்', 'தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்' போன்றவை அவற்றில் குறிப்பிடத் தகுந்தன.

மணவை முஸ்தபா வானொலி, தொலைக்காட்சிக்காகப் பல நாடகங்களை எழுதியுள்ளார். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். சிறார் இலக்கிய வளர்ச்சிக்கும் மணவை முஸ்தபா மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். 'சிறுவர் கலைக்களஞ்சியம்' அவற்றில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.



முஸ்தபா 'அறிவியல் தமிழ் அறக்கட்டளை' என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல பணிகளை முன்னெடுத்தார். 1986ல் சென்னையில் தமிழ் அறிவியல் கருத்தரங்கு ஒன்றை நடத்தினார். 'மீரா அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் பல இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தினார். முஸ்தபா, தம் வாழ்நாளில் சுமார் எட்டு லட்சம் கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னணியில் இருந்து உழைத்தார். எந்தெந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதி பெறத் தகுதியானது என்பதை ஆய்வுத் தரவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக scientifictamil.org என்னும் அறிவியல் தமிழ் மெய்நிகர் இருக்கையை ஏற்படுத்தினார். மணவை முஸ்தபா, 'மீரா பப்ளிகேஷன்ஸ்' மற்றும் 'மணவை பப்ளிகேஷன்ஸ்' என்ற பெயரில் பதிப்பகங்களைத் தொடங்கி நடத்தினார். 'தென்மொழிகள் புத்தக நிறுவனம்' அமைப்பின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார்.

மணவை முஸ்தபா நூல்கள்
சிறுவர் கலைக்களஞ்சியம், சிறுவர்க்குச் சுதந்திரம், செம்மொழி உள்ளும் புறமும், காலம் தேடும் தமிழ், திருப்புமுனை, தெளிவு பிறந்தது, பிறசமயக் கண்ணோட்டம், விழா தந்த விழிப்பு, கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய அகராதி , கணினி களஞ்சிய பேரகராதி-1, கணினி களஞ்சிய பேரகராதி-2, அண்ணலாரும் அறிவியலும், அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தமிழின் விடிவெள்ளி, அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி, இளையர் அறிவியல் களஞ்சியம், தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மருத்துவ கலைச்சொல் களஞ்சியம், மருத்துவ களஞ்சிய பேரகராதி, அன்றாட வாழ்வில் அழகுதமிழ், இன்றைய தென்னக இலக்கியப் போக்கு, இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?, இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள், சிந்தைக்கினிய சீறா, தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்


மணவை முஸ்தபாவின் நூல்கள் அவர் வாழும் காலத்திலேயே தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. (அவற்றை வாசிக்க). மணவை முஸ்தபாவின் வாழ்க்கை, 'அறிவியல் தமிழின் விடிவெள்ளி' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவரது வாழ்க்கை வரலாறு செய்திப் படமாகப் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மணவை முஸ்தபா பிப்ரவரி 06, 2017 அன்று, தனது 82ம் வயதில் காலமானார். தமிழர்கள் மறக்கக்கூடாத முன்னோடி மணவை முஸ்தபா.

பா.சு. ரமணன்

© TamilOnline.com