மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், வாழ்வே ரிலாக்ஸ் ப்ளீஸ் போன்ற புத்தகங்களின் மூலம் பல மொழியினரிடையேயும் அறியப்படும் சுவாமி சுகபோதானந்தா ·பெப்ருவரி 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் சொற்பொழிவாற்றினார். பகவத்கீதையின் சுலோகங்களை அடிப்படையாக வைத்து அன்றாட வாழ்க்கையில், அதுவும் சிலிகான் வேல்லியில் வாழும் அவசர, அழுத்தம் நிரம்பிய வாழ்க்கையில் நிம்மதியைப் பெறுவது எவ்வாறு என்பதை, நகைச்சுவையோடு ஆன்மீகத்தை ஊட்டும் தனது பிரத்தியேக பாணியில் போதித்தார்.
பிப்ரவரி 2005 விரிகுடா விஜயத்தின் போது, சொற்பொழிவுகள் மட்டுமில்லாமல், சுவாமிகள் சத்சங்கம் எனப்படும் சிறு கூட்டங்களையும் நடத்தினார். சத்சங்கங்களில் பெரும் கூட்டமில்லாமல் ஒரு சிலரே கூடி இருப்பதாலும், உரையாடல் முறையாக இவரது கூட்டங்கள் இருப்பதாலும் தனிவாழ்வில் தோன்றும் துன்பங்களுக்கு ஆழ்ந்த ஆறுதல் கிடைக்கிறது. மேலும், அறிந்ததைச் செயல்படுத்தாவிட்டால் அறியாமலே இருப்பதற்கு ஈடு என்று சுவாமிகள் போதிக்கிறார்; இந்த சத்சங்கங்கள் அவரது அறிவுரைகளை ஆழ்ந்து பயிற்சிக்கும் வாய்ப்பாகவும் அமைகின்றன.
சுவாமிகள் ஒவ்வோர் ஆண்டிலும் இரு முறையாவது அமெரிக்காவுக்கு வருகிறார். அடுத்து ஜூலை 2005-இல் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வரவிருக்கிறார். அப்போது இன்னும் சில சொற்பொழிவுகளும் சிறப்பு சத்சங்கங்களும் நடத்தப்படும்.
சத்சங்களில் தன்னார்வத் தொண்டராக உதவ, அல்லது சுவாமிகள் அளிக்கும் பயிலரங்கம், சத்சங்கம், சொற்பொழிவு ஆகியவற்றில் கலந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில்: toshakila@hotmail.com; தொலைபேசி: 408-360-9585 frajashrees@yahoo.com; தொலைபேசி: 408-248-4506
இந்தியாவில்: மின்னஞ்சல்: prasannatrust@vsnl.com இணையதளம்: http://www.swamisukhabodhananda.org
கதிரவன் எழில்மன்னன் |