தனது இனிய குரலால் 'தென்றல்' வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று பலரை வசீகரித்து வைத்திருப்பவர் சரஸ்வதி தியாகராஜன். தன் வயதைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் நாள்தோறும் பலரது படைப்புகளுக்கு குரலால் உயிர் கொடுத்து வருகிறார். தென்றலில் தொடங்கி வேறு பிற இதழ்களுக்கும் தொடர்ந்து பங்களித்து வரும் சரஸ்வதி தியகாராஜன், தமது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், கேட்போமா?
★★★★★
கே: வணக்கம். உங்கள் இளம்பருவ நினைவுகளைச் சொல்லுங்கள்... ப: தென்றலுக்கு வணக்கம். நான் பிறந்தது கும்பகோணத்தில். வளர்ந்தது, கல்வி கற்றது எல்லாம் மதுரையில். முதல் இரண்டு வகுப்புகள் வீட்டில் என் தாயிடமே படித்தேன். உயர்கல்வியை மதுரை ஓ.சி.பி.எம் (Orlinda Childs Pierce Memorial High School) பள்ளியில் படித்தேன். தட்டெழுத்து, குறுக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றேன். இளங்கலைப் படிப்பை மதுரை லேடி டோக் கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்றேன். 1971ல் திருமணமானபின் சென்னைவாசி ஆனேன்.
திருமணம் வரை வசித்த மதுரை வீட்டின் முன்
கே: எப்போது அமெரிக்கா வந்தீர்கள்? ப: அமெரிக்காவில் உள்ள என் அண்ணன், என் குடும்பத்தை, குடும்ப அடிப்படையிலான (Family-based immigration) குடியேற்றத்திற்கு 1984ல் விண்ணப்பித்தார். அது 1999ல் கிடைத்தது. நானும் என் கணவரும் அதன் அடிப்படையில் இங்கு வந்தோம்.
மகன் அதற்குள் அமெரிக்காவிற்கு வந்து Ph.D முடித்துவிட்டார். திருமணமும் ஆகிவிட்டது. ஒரே மகன். அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டோம். எங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் நன்றி சொல்லவேண்டும். அவர்களுக்குத் திருமணம் ஆகிச் சில மாதங்களே ஆகியிருந்தன. 55-60 வயதில் புலம் பெயர்ந்தாலும் சுகமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்ற மன தைரியம் இருந்தது. அவரும் Ph.D முடித்தவர் ஆதலால் ஆராய்ச்சி வேலை கிடைத்தது.
கே: தென்றலில் சமையல் குறிப்புதான் உங்கள் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஏன் 'சமையல் குறிப்பு' எழுத உங்களுக்குத் தோன்றியது? ப: அப்பொழுது நான் சமையல் நிபுணராகக் கேள்விகளுக்கு பதில் எழுதிக்கொண்டும், சில இந்திய ஆங்கில இணையதளங்களில் சமையல் குறிப்புகள் எழுதிக்கொண்டும் இருந்தேன். நினைத்த மாத்திரத்தில் சமையல் குறிப்புகளை எழுதுவது எப்பொழுதும் எனக்குக் கைவந்த கலை.
அதனால் நான் சி.கே.யிடம் மாயாபஜார் பகுதிக்கு எழுதி அனுப்புவதாகச் சொல்லி அனுப்பியும் வைத்தேன். அது அடுத்த மாதமே வெளிவந்தது. எனது முதல் சமையல் குறிப்பு, 2001ம் ஆண்டு ஜூலை இதழில் வெளிவந்த 'காய்கறி வறுவல்' என்ற நினைவு.
கே: 'ஒலி வடிவத்தில் உள்ளடக்கம்' என்பதை முன்னெடுத்தது அமெரிக்கத் தமிழ் இதழ் தென்றல். நீங்கள் அதில் முன்னோடி. உங்கள் பங்களிப்பைச் சொல்லுங்கள். ப: ஆமாம். இதழ் முழுவதும் ஒலிவடிவில் தர ஆரம்பித்த முதல் தமிழ்ப் பத்திரிகை தென்றலே! பத்து வருடங்களுக்கு மேல் சமையல் குறிப்பு எழுதியபின் சி.கே.யிடம் ஒருநாள் இனி எழுதுவதற்கு சமையலில் ஒன்றும் மனதுக்குத் தோன்றவில்லையே என்றேன்.
சில நாட்கள் கழித்து 'சுப்புத்தாத்தா சொன்ன கதைகள்' பகுதியிலிருந்து சிலவரிகள் ஒலிப்பதிவு செய்து அனுப்பும்படி கூறினார். நான் அனுப்பினேன். அதைத் தென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதி அவர்களும் கேட்டு அவருக்கும் பிடித்துவிடவே, தென்றலுக்கு ஒலிவடிவம் செய்ய ஆரம்பித்தேன். தென்றல்மீது கொண்ட என் ஆர்வத்தால் நானாகவே மனமுவந்து சிறிது காலத்திலேயே ஒவ்வொரு மாதமும் முழு இதழையும் ஒலிவடிவம் செய்து தொகுத்து (edit) அனுப்ப ஆரம்பித்தேன்.
தென்றலுக்கு ஒலிப்பதிவு செய்யத் தொடங்கு முன்பே ஒலிப்பதிவு செய்வது எப்படிஎன்பது பற்றி தெரிந்திருந்தாலும் தென்றலால் ஒலிப்பதிவு தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். தென்றல் படைப்புக்கள் கடைசி மெய்ப்புப் பார்க்க என்னிடம் வரும். அநேகமாக அதில் தட்டச்சுப் பிழைகள்கூட இராது. உடன் ஒலிவடிவமும் செய்து விடுவேன். எதாவது திருத்தங்கள் படைப்புக்களில் பின்னர் வந்தால் ஒலி வடிவத்திலும் அவற்றைச் சரி செய்துவிடுவேன். மின்னூல்களிலும் சரிசெய்வேன்.
தென்றல் மின்னூல்களிலும் (epub and mobi format) அதன் ஒலிவடிவங்களுக்கான சுட்டிகள் உள்ளதால் அவை வழியாகவும் ஒலி வடிவங்களைக் கேட்கலாம்.
கே: படைப்புகளை ஒலி வடிவாக்குவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன? ப: பெரியதாகச் சிக்கல் ஒன்றும் வருவதில்லை. இங்கு அமெரிக்காவில் வீட்டினுள் சத்தம் அதிகம் கேட்காது. ஒலிப்பதிவு செய்வது எளிது. கடந்த பல வருடங்களாக ஐஃபோனில்தான் ஒலிப்பதிவு செய்கிறேன். வேறு ஒலிகள் வந்தால் இலவச மென்பொருளான Audacity-யில் அதை எளிதாக நீக்கி விடலாம்.
சில நேரங்களில் எனக்குக் குரல் சரியில்லை எனத் தோன்றினால் பதிவு செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி விடுவேன். வயிறு காலியாக இருக்கும்போது எனக்குக் குரல் நன்றாக வரும். அதனால் காலையில் அதிகம் ஒலிப்பதிவு செய்வேன். கதாபாத்திரங்கள் கதையில் பேசும் இடங்களில் வெளிக்காட்டும் உணர்ச்சிகளை, நாம் படிக்கும் வார்த்தைகளில் வெளிக்கொணர வேண்டும். அப்படியானால் படிக்கும்போது அதனுடன் மனம் ஒன்றவேண்டும். குரல் மட்டும் கொடுப்பது சரியல்ல. கதாபாத்திரங்களுக்கு ஏற்பக் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் படிப்பது இதற்குப் பெருந்துணை புரியும். எழுத்தாளருக்கு இந்தக் குரல்மாற்றம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றால் அதை அறிந்து அதன்படி செயல்படுவேன். எழுத்தாளர்களின் கருத்துகளுக்கு கண்டிப்பாக செவி சாய்க்க வேண்டும். Anyway the story is their baby.
தென்றலும் நானும் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் எங்கள் குடும்ப நண்பர். இந்தியாவில்இருந்த காலத்திலிருந்தே நன்கு தெரியும். என்னுடைய நெருங்கிய உறவினரும் அவரது நண்பருமான ஒருவரின் திருமணத்திற்கு சி.கே. லாஸ் ஏஞ்சலஸ் வந்தார். அப்போதைய சந்திப்பில், தான் தென்றல் பத்திரிக்கை ஆரம்பித்து உள்ளதாகவும் விருப்பம் இருந்தால் அதில் எழுதுங்களேன் என்றும் சொன்னார். அப்படித்தான் தென்றலில் நுழையும் அருமையான தருணம் எனக்கு வாய்த்தது.
பின்னர் சிலகாலம் மொழிபெயர்ப்புகள் செய்தேன். தென்றல் என்னை பங்களிப்பு ஆசிரியராக உயர்த்தியது. பின் தென்றலுக்கு ஒலி வடிவங்கள் தருவது, தென்றல் மின்னூல்கள் செய்வது, மெய்ப்புப் பார்ப்பது என்று தென்றலுடன் சுகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த என் பயணம் மிகவும் அமைதியும் இன்பமும் நிறைந்தது.
- சரஸ்வதி தியாகராஜன்
கே: ஒலி வடிவில் பல படைப்புகளைத் தந்துள்ள உங்களுக்கு, அதன் மூலம் கிடைத்தமறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்? ப: ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும் பாராட்டும், ஒரே எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும் தொடர் பாராட்டுகளும் எனக்கு மறக்க முடியாதவையே. எழுத்தாளர்களே அவர்கள் கதையை அனுப்பி ஒலிவடிவம் செய்ய முடியுமா என்று கேட்கும்போது என்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நினைத்து மனம் நெகிழும்.
எனது ஒலிவடிவங்களைக் கேட்டுவிட்டு, என் உச்சரிப்பைப் புகழ்ந்தும், பாத்திரங்களுக்கேற்ப குரல் மாற்றிப் பேசியதை சிலாகித்தும் எனக்கு எழுதும்போது அதனை மறக்கமுடியாத பாராட்டாக உணர்கிறேன். சில எழுத்தாளர்கள் ஃபோனில் கூப்பிட்டுப் பாராட்டுவதும் உண்டு. பாராட்டு கிடைக்கும்போது மனம் மகிழ்வது மனித இயல்புதானே.
தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமனுடன்
கே: ஒலி வடிவில் படைப்பைத் தருவது என்பது மிகுந்த நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒன்று. பொறுமையும் வேண்டும். அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? ப: நான் ஓர் உண்மையைச் சொல்ல ஆசைப்படுகிறேன். எந்தக் கதையையும் படித்துப் பார்த்து கதையை உள்வாங்கிப் பின் நான் படிப்பதில்லை. அதற்கு மிக அதிக நேரம் தேவைப்படும். நேரம் கிடைத்ததும் எடுப்பேன் ஐஃபோனை, எடுப்பேன் திரையில் படிக்கவேண்டியதை, அழுத்துவேன் பட்டனை, ஒலிப்பதிவு செய்து விடுவேன். படிக்க ஆரம்பித்த உடன் கதையோ கட்டுரையோ அதனுள் அமிழ்ந்து விடுவேன்.
எடிட்டிங் செய்வதுதான் சற்றுக் கடினமான வேலை. இது மிகவும் பிடித்திருப்பதால் கடினமாகத் தெரிவதில்லை. திட்டமிட்ட நேரத்தில் ஒலிப்பதிவுகளை முடித்துவிட முயலுவேன். தென்றல் இதழின் கட்டுரைகள், கதைகள் மெய்ப்பு பார்க்க வந்தவுடன் ஒலிப்பதிவு செய்துவிட்டே மெய்ப்புப் பார்ப்பது என் வழக்கம்.
கே: குரல் பதிவுக்கு வாசித்துக் கொண்டிருக்கும்போதே மேற்கொண்டு தொடர முடியாமல் செய்த உணர்ச்சிமிகு படைப்புகள் சில இருக்கலாம். அவைபற்றிச் சொல்ல இயலுமா? ப: எனக்கு இளங்குழந்தைகள், முதியவர்கள் வாழ்க்கையில் அவதியுறுவதை அடிப்படையாகக் கொண்ட கதைகள் மிகவும் பாதிக்கும். ஏனென்று தெரியவில்லை. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் 'மாதவன் சார்' கதையை ஒலிவடிவம் செய்த போது உணர்ச்சி மிகுதியால் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யவேண்டி வந்தது. இன்றும் அந்தக் கதையைப் படித்தால் அப்படியே உணர்கிறேன்.
கே: இதுவரை எத்தனை படைப்புகளை ஒலி வடிவில் தந்திருக்கிறீர்கள், எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது? ப: தென்றல் வலைப்பக்கம் இதுவரை நான் 6256 ஒலிவடிவங்கள் செய்துள்ளதாகக் கூறுகிறது. சொல்வனத்தில் ஏறக்குறைய 725 ஒளி/ஒலி வடிவங்கள் இருக்கும்.
என் கடமைகள் முடிந்து விட்டன. இணையத் தொடர்பு இங்கு எப்போதும் இருக்கும். நிறைய நேரமும் என் கைவசம் உள்ளது. சரளமாகப் படிக்க வருகிறது. எனவே இதுவரை சிரமமாகத் தெரியவில்லை. கடவுள் அருளால் அனைத்தும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கின்றன. என் வயது 78. ஆனால் இந்தக் குரல் அவன் தந்துள்ள வரம்.
சொல்வனத்தில் நான் சொல்வனத்தில் இணைந்தது மிக ஆச்சரியமான நிகழ்வு. ஒரு நண்பர் வீட்டு நவராத்திரிக்குச் சென்றிருந்தோம். அங்கு சொல்வனத்தின் பாஸ்டன் பாலாவும் அவர் மனைவியுடன் வந்திருந்தார். பேசும்போது நம் தென்றல் பற்றிப் பெருமையாகச் சொன்னார். இப்படிப் பேச்சு மேலும் தொடர அவருடன் நட்புத் துளிர்த்தது. பாஸ்டன் பாலா, எழுத்தாளர் அம்பை பற்றி மின்புத்தகம் செய்வதில் உதவமுடியுமா என்று பின்னர் ஒருநாள் கேட்டபோது உதவியதுடன் மின்புத்தகத்திற்கு அட்டையும் வடிவமைத்துக் கொடுத்து சில சிறு உதவிகள் செய்தேன். சொல்வனம் அந்தப் புத்தகத்தின் முகவுரையில் எனக்கு நன்றியும் தெரிவித்தது.
சில வருடங்கள் கழித்து அவர்கள் ஒளிவனம் ஆரம்பித்தபோது நான் அதில் இணைந்தேன். சொல்வனம் மாதம் இருமுறை வரும் இணைய இதழ். அதில் வரும் கதைகளை ஒலிவடிவம் செய்து சொல்வனத்தின் ஒளிவனத்தில் தருகிறேன். கிட்டத்தட்ட 725 வீடியோக்கள் என் பங்களிப்பாக உள்ளன என நினைக்கிறேன். மேலும் திண்ணை, பதாகை மற்றும் பல இணைய இதழ்களின் கதைகளையும் அவற்றின் ஆசிரியர்களின் அனுமதியுடன் செய்கிறோம்.
ஆசிரியருடன் தொடர்பு கொண்டு அவரது புகைப்படம், அவரைப் பற்றிய குறிப்புகளும் பெற்று வீடியோ செய்து கதையுடன் இணைத்து வீடியோ செய்கிறேன். இப்படி நிறைய எழுத்தாளர்களின் தொடர்பும், பாராட்டுகளும் தினம் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்காக நிறைய நாவல்களும் ஒலி வடிவம் செய்துகொண்டிருக்கிறேன். அம்மா வந்தாள், பசித்த மானிடம் ஒலிவடிவம் முடிந்துவிட்டது. புத்தம் வீடு, தர்பாரி ராகம், தரையில் இறங்கும் விமானங்கள், ஶ்ரீரங்கத்து தேவதைகள், மிளகு, தினை, அதிரியன் நினைவுகள், உபநதிகள், தோழி முதல்பாகம் ஒலிவடிவம் செய்து கொண்டிருக்கிறேன்.
ஒளிவனம் தவிர அதன் ஒலிவனத்திலும் பாட்காஸ்ட் ஆக Spotify-யில் வலையேற்றம் பெறுகிறது. இவற்றை Apple, Gooogle podcast , Amazon music, மற்றும் வேறு பல பாட்காஸ்ட் தளங்களில் ஒலிவடிவில் கேட்கலாம்.
- சரஸ்வதி தியாகராஜன்
கே: உங்களுடைய தமிழார்வத்திற்கு வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பரம்பரையில் வந்ததும் ஒரு காரணம் என்று சொல்லலாமா? ப: தமிழார்வம் பரம்பரையில் இருந்து எந்த அளவு எனக்கு வந்துள்ளது என்று அறுதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பரம்பரையில் வந்தவள் என்ற பெருமை நிச்சயமாக எனக்கு உண்டு.
என் தமிழார்வத்திற்கு நான் வளர்ந்த சூழ்நிலை, நான் கற்ற பள்ளி, என் ஆசிரியர்கள், எனது பெற்றோர், எனது நண்பர்கள் என அனைவருக்குமே முக்கியப் பங்கு உண்டு.
கே: உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்... ப: என் கணவர் , மகன் , மருமகள், பேரன், பெயர்த்தி, இவர்கள்தான் என் உலகம். இவர்கள் அனைவருமே எனக்கு உறுதுணை. பேரனும் பெயர்த்தியும் விவரம் அறிந்த குழந்தைகளான பிறகு நான் ஒலிவடிவம் செய்துகொண்டிருக்கும்போது அந்த அறைக் கதவைத்கூடத் தட்ட மாட்டார்கள்.
என் மகன், மருமகள், கணவர் அவர்கள் நண்பர்களிடம் எனது தென்றல், சொல்வனம் வேலைகளைப் பற்றிக் கூறும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். பேரன், பெயர்த்திக்கு பாட்டிக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்று மிகவும் பெருமை.
கே: முற்றிலும் சேவையாகத்தான் இப்பணியைச் செய்து வருகிறீர்கள், அல்லவா? ப: ஆம். இது தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் என்னாலான சிறிய தொண்டு. பார்வைப் பிரச்சினை உள்ளவர், தமிழ் புரிந்தும் தெரிந்தும் படிக்கத் தெரியாதவர், படிக்கப் பொழுது இல்லாதவர் ஆகியவர்களுக்கு ஒலிவடிவம் ஒரு வரப்பிரசாதம். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவி இது.
கே: குரல் வடிவில் இன்னும் என்னவெல்லாம் கொண்டுவர உங்களுக்கு விருப்பம் உள்ளது? ப: முடிந்தவரை தென்றலுக்கும் சொல்வனத்திற்கும் குரல் கொடுக்க விருப்பம். மேலும் நாவல்கள் செய்ய அவா. ஆனால், என்று என் குரல் நன்றாக இல்லையோ அன்றே ஒலிப்பதிவு செய்வதை நிறுத்தி விடுவேன். எனது குரலை முதன்முதலில் தமிழ் உலகிற்குக் கொண்டு சென்ற தென்றலுக்கு நன்றி. என் ஒலிவடிவத்தைக் கேட்டுப் பாராட்டும் அனைவருக்கும் மிக்க நன்றி.
என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தென்றல் இதழுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தென்றல் இன்று போல் என்றும் பாரெங்கும் மணம் வீசி பீடுநடை போடட்டும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் |