தென்றல் பேசுகிறது...
செயற்கை அறிவு (Artificial Intelligence) என்னும் வெட்டுவிளிம்புக் கணினித் துறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார் ஜெஃப்ரி ஹின்டன் (Geoffrey Hinton). 2012ஆம் ஆண்டில் இவரும் இவரது இரண்டு மாணவர்களும் டொரான்டோ பல்கலையில் படைத்த தொழில்நுட்பம்தான் AI தொழில்நுட்பத்தின் ஆதாரங்களில் ஒன்றாக அமைந்தது. சில மாதங்களுக்கு முன்னால் நாம் தென்றலில் இதைப் பயன்படுத்திப் பேரலைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ChatGPT குறித்து எழுதியிருந்தோம்.

பின்னர் ஜெஃப்ரி ஹின்டன் கூகிளில் சேர்ந்து இத்துறைக்குப் பெரும்பங்கு அளித்து வந்தார். இந்த நிலையில் "தீயவர்கள் இதைத் தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதை எப்படித் தடுக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறி, இவர் கூகிளில் இருந்து விலகியிருக்கிறார். இதை எதிர்த்துப் பேசச் சுதந்திரம் வேண்டும் என்னும் காரணத்துக்காகவே அவர் பதவி விலகியிருக்கிறார். மனித அறிவினால் படைக்கப்பட்ட இந்த AI பஸ்மாசுரன், மனிதனின் தலையிலேயே கைவைப்பானோ என்கிற அச்சம் பொதுவாகவே பரவி வருகிறது.

இந்த நிலையில் 'Association for the Advancement of Artificial Intelligence' என்னும் அமைப்பின் இந்நாள் மற்றும் முன்னாள் தலைவர்கள் 19 பேர் இந்தத் தொழில்நுட்பத்தின் அபாயத்தைக் குறித்த எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். எதையும் யாரும் பேசுவது, செய்வது போன்ற போலியான வீடியோ மற்றும் ஒலிப்பதிவுகளை அச்சு அசலாக Deep Fake வழிமுறையில் உருவாக்கி, ஏமாற்றுக்காரர்களும் வன்முறையாளர்களும் இன்ன பிறரும் சமுதாயத்தில் குழப்பம், அழிவு, பிணக்கு, இழப்பு போன்றவற்றைக் கற்பனை செய்ய முடியாத அளவில் ஏற்படுத்திவிட முடியும். அதுவும் தவிர, கோடிக் கணக்கானோர் தங்கள் வேலைகளை இழக்கக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே ஈலான் மஸ்க் உட்பட 100 ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆராய்ச்சிகளை 6 மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கக் கோரி கூகிள் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியதையும் கவனிக்க வேண்டும்.

இவர்களே அஞ்சும்போது நாம் எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்!

★★★★★


எல்லாப் பகுதிகளையும் குரல்பதிவுகளாக வெளியிட்ட முதல் அமெரிக்கத் தமிழ் இதழ் 'தென்றல்'. அந்த முயற்சியில் முன்னோடியாக நின்று 'குரல் கொடுத்தவர்' சரஸ்வதி தியாகராஜன்'. இந்த இதழில் இவர் தென்றலில் தொடங்கிப் 'புயலாக' மாறியதையும் பிற விஷயங்களையும் குறித்துப் பேசுகிறார். 'முன்னோடி' மணவை முஸ்தபா, எழுத்தாளர் சி. பாலசுப்பிரமணியன் குறித்த கட்டுரைகள், அழகான இரண்டு சிறுகதைகள் என்று சுவைபட உங்களுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

வாசகர்களுக்கு மே தினம் மற்றும் புத்த பூர்ணிமை வாழ்த்துகள்!

தென்றல்
மே 2023

© TamilOnline.com